நடிகர்கள் என்னை பாப்பானு கூப்பிடுவாங்க!



நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’. விரைவில் வெளியாகவுள்ள இதில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். புரொமோஷனுக்காக சென்னை வந்தவரிடம் பேசினோம்.
‘நான் மகான் அல்ல’ படத்தில் நடித்த குட்டி குழந்தை இப்போது கார்த்தியுடன் நடிக்கிறார் என்ற மீம்ஸ் வைரலாகியுள்ளதே? 

அந்த மீம்ஸை நானும் பார்த்தேன். என்னுடைய சில தோழிகளும் அதை அனுப்பி கேட்டார்கள். அவ்வளவு சிறிய வயதில் நான் நடிக்க வரவில்லை. 

சினிமா ஆர்வம் எப்போது வந்துச்சு?

படிக்கும்போது எதிர்காலத்துல என்னவாக வரப்போகிறாய் என்று கேட்கும்போது டாக்டர், சயின்டிஸ்ட் என்று பதில் சொல்வேன். நடிகையாகணும் என்ற கனவு இருந்ததில்லை. 
ஆனால், சின்ன வயசுல என்னுடைய நாட்குறிப்பு புத்தகத்தில் வேலை - என்ற கேள்விக்கு நடிகை என்று எழுதி வைத்ததாக ஞாபகம். அப்போது எனக்கு ஆறேழு வயதுதான் இருக்கும். 
ஏன், சினிமாவைப் பற்றி நினைக்கவில்லை என்றால் சினிமா பின்புலமோ, வழிகாட்டுதலோ எனக்கில்லை. 

அந்த வகையில் சினிமா நடிகை என்ற கனவு வெகு தூரத்தில் இருந்துச்சு.சினிமாவில் அவ்வளவு சுலபமாக வாய்ப்பு கிடைக்காது. கசப்பான உண்மை என்ன என்றால் பல ரிஜெக்‌ஷன், கசப்பான அனுபவங்களுகுப் பிறகுதான் சினிமா வாய்ப்பு கிடைச்சது. நடுவில் சினிமா முயற்சியை கைவிட்டதும் உண்டு. என்னுடைய முதல் பட இயக்குநர் புஜ்ஜி பாபு சாருக்கு என்னுடைய நன்றி எப்போதும் இருக்கும்.

முதல் நாள் ஷூட்டிங் அனுபவம் ஞாபகம் உள்ளதா?

நல்லா ஞாபகம் இருக்கு. அப்போது எனக்கு 16 வயசு இருக்கும். அது என் வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றும் சொல்லலாம். கனவு நிறைவேறிய நாள். சினிமாவை வெளியே இருந்து பார்த்த பார்வைக்கும் உள்ளே இருந்து பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்துச்சு. நடிப்பு என்பது அவ்வளவு சுலபமல்ல. ரொம்ப கஷ்டமான ஜாப். 

நம்மிடமிருந்து திறமைகளை அதிகம் எதிர்பார்க்கும் ஒரு துறை. கேரக்டருக்கு ஏற்ப தயாராகி செட்டுக்கு வருவது முக்கியம். பின்னால் இருந்து நடிப்பு சொல்லித் தரலாம் என்றால் பெற்றோருக்கும் சினிமா தெரியாது. சொன்னா நம்பமாட்டீங்க, எப்படி நடிக்கப் போகிறோம் என்ற அழுத்தம் காரணமாக சரும பாதிப்பு, முடி உதிர்தல் என பல பிரச்னைகளை சந்திச்சேன்.
 
என்னுடைய கஷ்டத்தைப் பார்த்துவிட்டு பெற்றோர் சினிமாவை விட்டுவிடுவோம் என்றார்கள். நானும் அந்த முடிவில்தான் இருந்தேன். ஆனால், முதல் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது நடிகையாக டிராவல் பண்ணுவதற்கு காரணம் என்னுடைய ரசிகர்கள். அவர்கள் கொடுத்த சப்போர்ட்தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.

‘வாரியர்’ படத்துல நீங்க ஆடிய ‘புல்லட்...’ பாடல் பெரிய வைரலாச்சே?

எனக்கு டான்ஸ் பிடிக்கும். சின்ன வயசுல கொஞ்சம் டான்ஸ் கத்துக்கிட்டேன். மற்றபடி டான்ஸ் மாஸ்டர் சொல்லிக்கொடுக்கும் விஷயத்தைதான் ஸ்கிரீன்ல பார்க்கிறீங்க.
‘வா வாத்தியார்’?

இயக்குநர் நலன் குமாரசாமி சார் மிக அழகாக கதை சொல்லக்கூடியவர். படத்துல நீங்க ராணி மாதிரி. ஆனா, நாடோடி ராணி என்று கதையை விவரித்தபோதே ஆர்வம் தொற்றிக்
கொண்டது.படத்துல என்னுடைய குணம் ராணி மாதிரி ஒரு கோணத்திலும், லுக் வேறு கோணத்திலும் இருக்கும். 

என்ஜாய் பண்ணி நடித்தேன். எனக்கு டைரக்டராக ஆகணும் என்ற ஆசை இருக்கு. நலன் குமாரசாமி சார் டைரக்‌ஷனில் நடிக்கும்போது அந்த ஆசை அதிகமாச்சு. ஒவ்வொரு காட்சியையும் செதுக்குவார். ஒரு நிமிஷத்துல ஒரு காட்சியை ஷூட் பண்ணிடலாம்னு நினைக்கமாட்டார். 

ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் மெடிடேஷன் மாதிரி சிந்திப்பார். சில சமயம் நீண்ட காட்சி எடுக்கும்போது எக்ஸ்பிரஷன் பற்றி எதாவது டவுட் கேட்டால் யோசிக்காமலேயே எக்ஸ்பிரஷன் எப்படி இருக்கணும்னு சொல்லிவிடுவார். 

அந்தளவுக்கு ஒவ்வொரு தகவலையும் விரல் நுனியில் வைத்திருப்பார். எந்த டவுட் கேட்டாலும் அதற்கான பதில், விளக்கம் தயாராக இருக்கும். நடிகர், நடிகைகளுக்கு என்ன டவுட் வரும் என்ற கோணத்திலும் சிந்திக்கக் கூடியவர்.

முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து நல்ல சப்போர்ட் கிடைச்சது. தமிழில் இதுதான் என்னுடைய முதல் படம். ஷூட்டிங் ஆரம்பிச்சபோது எனக்கு தமிழ் அவ்வளவாக வராது. 
ஆனால், நலன் சார் என் மீது நம்பிக்கை வைத்தார். 

இந்தப் படத்தில் நடிக்க எனக்கு முழுத் தகுதி இருக்கு என்று என்னையே நம்ப வைத்தார். ஒருசில காட்சியில் என்னுடைய ஸ்டைலில் நடிக்கச் சொன்னார்.இவ்வளவுக்கும் அவர் ஒரு காட்சியை துல்லியமாக எடுக்கக் கூடியவர். அந்த நம்பிக்கைக்காகவே என்னுடைய தி பெஸ்ட் கொடுத்தேன். படம் பார்த்துவிட்டு நீங்களும் சொல்லுங்ள்.

கார்த்தியுடன் நடித்த அனுபவம் எப்படி?

கார்த்தி சாருடன் நடிக்கும்போது எனர்ஜி லெவல் அதிகமாக இருக்கும். அவருடன் நடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்வு  கிடைக்கும். சக நடிகர்களுக்கு ஸ்பேஸ் தருவார். 

கார்த்தி, ‘எம்ஜிஆர்’ பேரனாக வருவதாக சொல்கிறார்கள். எம்ஜிஆர். படங்கள் பார்த்துள்ளீர்களா?

சில படங்கள் பார்த்துள்ளேன். பாடல்கள் நிறைய பார்த்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் நல்ல போதனைகள் இருக்கும். தனி மனிதன் எப்படி வாழணும் என்று அவருடைய படங்கள் சொல்லியுள்ளது. அவர்போல்தான் நானும் எல்லோருக்கும் உதவும் கரங்களாக வாழ விரும்புகிறேன்.

எந்த நடிகருடன் நடிக்கும்போது உற்சாகம் அதிகமாக இருக்கும்?

நான் வேலை செய்த எல்லா படங்களிலும் சிறந்த நடிகர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது. எல்லோருமே பழகுவதற்கு இனிமையானவர்கள். அது அற்புதமான அனுபவம். ‘பாப்பா’ என்றுதான் சக நடிகர்கள் என்னை அழைப்பார்கள். நாக சைதன்யாவுடன் இரண்டு படங்கள் செய்துள்ளேன். 

அந்த வகையில் அவருடன் நடிச்சதை செளகரியமாகப் பார்க்கிறேன். ஹானஸ்ட் பெர்சன். அவரும் என்னைப் போன்றவர் என்று சொல்லலாம். ஏனெனில், அதிகம் பேசமாட்டார். நான் ஏதாவது பேசினாலும் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டார். டோவினோ சாருடன் நடிக்கும்போது ‘குட் வைப்’ கிடைக்கும்.

இளம் வயதிலேயே நடிக்க வந்ததால் அந்த வாழ்க்கையை மிஸ் பண்ணுவதாக நினைக்கிறீர்களா?

ஸ்கூல் டைமிலேயே விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்போது ஃப்ரெண்ட்ஸ் மத்தியில் பழகும்விதம் கொஞ்சம் மாறியது. மற்றபடி, என் தோழிகளுக்கு நான் நடிகையானதில் சந்தோஷம். சிறுவயது தோழிகள்தான் என்னுடைய லைஃப். நடுவே படிப்பு, ஜாப் என ஒவ்வொருவரும் இடம் பெயர்ந்தாலும் சிறுவயது நட்பு இப்போதும் தொடர்கிறது.

தமிழ் நல்லா பேசுறீங்க. யாரிடம் கத்துக்கிட்டீங்க?

சொந்த முயற்சியில் கத்துக்கிட்டேன். நடிக்கும்போது என்னுடைய வசனம் மட்டுமல்ல, சக நடிகர்களின் டயலாக்ஸையும் சேர்த்து படிப்பேன். இப்போது 50 சதவீதம் என்னால் தமிழ் பேச முடியும். அடுத்த வருஷம் 100 சதவீதம் சரளமாகப் பேச முடியும் என்ற நம்பிக்கை இருக்கு.

நிஜத்துல நீங்க என்ன மாதிரி கேரக்டர்?

நான் ரிசர்வ்ட் டைப். ஆனால், எல்லோரும் எளிதாகப் பழக முடியும். யாரிடமாவது பேசணும், தனிமையாக இருக்கிறோம் என்றெல்லாம் நினைக்கமாட்டேன்.

நிறைய பேர் இருந்தாலும், கொஞ்ச பேர் இருந்தாலும் எனக்கு பிடிச்சவங்க கிட்டதான் பேசுவேன். அது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், கெட்ட பழக்கம் என்றுதான் சொல்வேன். 
ஒருவர் மீது ‘குட் வைப்’ வரலைன்னா பேசமாட்டேன். அப்போது அமைதியாக இருப்பேன். அதுல சந்தோஷமாகவும் என்னால் இருக்க முடியும்.l

எஸ்.ராஜா