நேர அடிப்படையில் வாடகைக்கு கணவர்கள்!
ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடு, லாட்வியா. இதன் மக்கள் தொகை, 18 லட்சம். இங்கே நிலவும் ஆண்-பெண் விகித ஏற்றத்தாழ்வால் இந்த நாடு முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதாவது, லாட்வியாவில் 100 ஆண்களுக்கு, 116 பெண்கள் என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அதனால் பெரும்பாலான பெண்களுக்கு ஜோடி கிடைக்காமல் அவதிப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில நிறுவனங்கள் பெண்களின் பிரச்னைகளை முக்கிய பிசினஸாக மாற்றியுள்ளன.
ஆம்; எலெக்ட்ரிக்கல் வேலை, பிளம்பிங், சமையலுக்கு உதவி, டிவி ரிப்பேர் உட்பட பல்வேறு வீட்டு வேலைகளைச் செய்ய தற்காலிக கணவர்கள் வாடகைக்கு விடப்படும் என்று லாட்வியாவைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று மணி நேர அடிப்படையிலும் கணவர்கள் வாடகைக்குக் கிடைக்கின்றனர்.‘‘நான் வேலை செய்யும் இடத்திலும் ஆண்களின் பற்றாக்குறை நிலவுகிறது. என்னுடன் வேலை செய்பவர்கள் எல்லோருமே பெண்கள்தான். பெண்களுடன் வேலை செய்வது ஜாலியாகத்தான் இருக்கிறது.
ஆனால், ஆண்கள் இல்லையென்பதால் அது ஒருவித சலிப்பைத் தருகிறது...’’ என்கிறார் டானியா என்ற லாட்வியா பெண். இவரது வயது 32. இன்னும் இவருக்குத் திருமணமாகவில்லை. மட்டுமல்ல, லாட்வியாவைச் சேர்ந்த வசதிபடைத்த பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களுக்கான ஆண் துணையைத் தேடுகின்றனர்.
மட்டுமல்ல, லாட்வியாவின் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் மட்டுமே வசிக்க வேண்டிய சூழலும் நிலவுகிறது. குறிப்பாக அங்கே 65 வயதான பெண்களின் எண்ணிக்கை, ஆண்களின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம். அதனால் முதிய வயதில் ஆண் துணையின்றி பெரும்பாலான பெண்கள் தவிப்பதாகவும் சொல்கின்றனர். லாட்வியாவில் ஆண்களின் பற்றாக்குறைக்கு முதன்மையான காரணம் அவர்கள் இளம் வயதிலேயே மரணமடைவதுதான் என்கின்றனர். காரணம், அங்கே புகைப்பிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகம். இதுபோக பெரும்பாலான ஆண்கள் அதிக எடையுடனும், குண்டாகவும் இருப்பது பல நோய்களுக்குக் காரணமாகி, அவர்களின் ஆயுளைக் குறைக்கிறது என்கின்றனர்.
த.சக்திவேல்
|