Brain Storage



கூகுளின்  பெயர் ரகசியம் தெரியுமா? ‘Googol’ என்ற சொல்லை சற்றே மாற்றியமைத்து ‘Google’  என்று பெயர் வைத்தனர். எண் ஒன்றின் பின்னர் நூறு பூஜ்யங்கள் கொண்ட பெரும் எண்ணிற்குதான் ‘Googol’ என்று பெயர். பெரும் திறன் கொண்ட தேடு பொறி அமைக்கும் தங்கள் கனவிற்கு ஏற்ற பெயர் அது என்று நினைத்தனர் கூகுளின் பெற்றோர்.

நமது நாட்டின் தேசிய காய்கறி பூசணிக்காய் என்று ஒரு செய்தி உண்டு. அதுபோலவே, ஹாக்கி நமது தேசிய விளையாட்டு என்று நம்மில் பலரும் படித்து, நம்பி வருகிறோம். ஆனால், இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சின்னங்களில் இவை இல்லை என்பதே உண்மை.

முடி போச்சே என்று வருத்தப்படுகிறீர்களா? நியாயம்தான். நமது தலையின் ஒரு முடி சுமார் 100  கிராம் எடையைத் தாங்கும். ஒருவரின் தலையில் சராசரியாக ஒன்று முதல் ஒன்றரை லட்சம் முடிகள் இருக்கும். மொத்த முடிகளையும் ஒரு கனத்த கயிறாகத் திரித்தால், அது இரண்டு யானைகளின் எடையைத் தாங்கும் அளவிற்கு பலம் கொண்டதாம்.

கணினி வளர்ச்சி இவ்வளவு இருந்தும், இன்றும் செஸ் விளையாட்டு சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. செஸ் நகர்த்தல்கள் அனைத்தையும் கணினிகளால் கூட முழுமையாக கணக்கிட முடியாதாம். உலகில் உள்ள மொத்த அணுக்களை விட அதிக நகர்த்தல்கள் சாத்தியம் செஸ்ஸில். அதனால்தான் அதன் வசீகரம் இன்றும் குன்றாமல் இருக்கிறது.

கி.மு. 776ல்தான் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கிரேக்க நாட்டில்  நடந்தது. அக்காலப் போட்டிகளில் ஆடவர்கள் மட்டுமே பங்கு பெற்றனர், பார்வையாளர்களாகவும் இருந்தனர். போட்டியாளர்கள்  அனைவரும் நிர்வாணமாகவே போட்டியிட்டனர். அது அக்கால வழக்கப்படி, கிரேக்க கடவுளர்களுக்கு அர்ப்பணமாகவும், தங்கள் உடலில் ஆயுதங்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவும், விளையாட்டில்  எதிரிகளை தங்கள் உடற்கட்டைக் காட்டி மிரள வைப்பதற்காகவும் அவ்வாறு செய்தனராம்l 

ராஜேஷ் சுப்ரமணியன்