புது வண்ணாரப்பேட்டை to உலக சாம்பியன்!
சமீபத்தில் மாலத்தீவில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பைப் போட்டியில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், குழுப் போட்டி என மூன்றிலும் தங்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் கீர்த்தனா. சென்னை புது வண்ணாரப்பேட்டையிலுள்ள செரியன் நகரில் இருக்கிறது அவரின் வீடு. கடந்த ஆண்டு இதே செரியன் நகரில் இருந்துதான் ஆறாவது கேரம் உலகக் கோப்பையைத் தன்வசப்படுத்தியிருந்தார் காசிமா.
இப்போது அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா வென்று வந்துள்ளார். இதனால், புது வண்ணாரப்பேட்டை ஏரியாவே வண்ணமயமாய்க் காட்சியளிக்கிறது. அங்கே சின்னஞ்சிறு வீட்டில் அம்மா இந்திராணி, அண்ணன் பிரசாந்த், ஒட்டிப்பிறந்த தம்பி கிருஷ்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார் கீர்த்தனா.  ஒற்றை படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில் கீர்த்தனா வென்று வந்த கோப்பைகளையும், பதக்கங்களையும் அடுக்கக்கூட இடமில்லை. இதனால் பல கோப்பைகளை அண்டா ஒன்றில் போட்டு வைத்துள்ளார் அவரின் அம்மா.
பெரிய கோப்பைகள் அவர் பயிற்சி செய்யும் கேரம்மேன் கோச்சிங் அகடமியை அலங்கரிக்கின்றன. ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் இதே புது வண்ணாரப்பேட்டைதான். ஆறு வயசுல இருந்தே கேரம் விளையாடுறேன். என் அப்பா லோகநாதன்தான் கேரம் சொல்லித் தந்தார். அவருக்கு கேரம்னா உயிர். மூட்டைத் தூக்கும் கூலித்தொழிலாளியாக இருந்தார். அப்படியாக எனக்கு ஆர்வம் வந்து அப்பாவுக்காக ஜெயிக்கணும்னு நினைச்சேன். அப்பாவும் நான் வெற்றி பெற்று பெரிய ஆளாக வரணும்னு ஆசைப்பட்டார். இப்ப அந்தக் கனவு நிஜமாகியிருக்கு. ஆனா, அதைப் பார்க்க அப்பாதான் இல்ல...’’ என வேதனையும், சந்தோஷமுமாகப் பேசுகிறார் கீர்த்தனா. ‘‘2017ம் ஆண்டு அப்பா இறந்திட்டார். அப்ப எனக்கு 13 வயசு. எட்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். பிறகு அம்மாதான் வேலை செய்து எங்களைப் படிக்க வச்சாங்க. அப்புறம், பத்தாம் வகுப்புக்குப் பிறகு வீட்டு சூழலால் படிப்பையும், கேரம் ஆடுறதையும் விட்டுட்டேன்.
அப்ப, வீட்டுக்கு அருகே ஒரு தனியார் கிளப்ல பயிற்சி செய்தேன். அங்க என்னால் பணம் கட்டமுடியல. பிறகு சுங்கச்சாவடியில் உள்ள ஒரு ஸ்டீல் பட்டறையில் வேலைக்குப் போயிட்டு இருந்தேன். இந்நேரம்தான் கேரம்மேன் கோச்சிங் அகடமி நிறுவனர் நித்தியராஜன் சாரை சந்திச்சேன்.அவர்தான் ‘மறுபடியும் நீ விளையாடி ஜெயிக்கணும்மா’னு ஊக்கப்படுத்தி என்னை வரவழைச்சார்.
எனக்கும் எல்லா பசங்களும் கேரம் போட்டிக்குப் போறதைப் பார்த்து மீண்டும் ஆர்வம் வந்துச்சு. இந்நேரம் அம்மாவும், என் மாமா வழக்கறிஞர் இளவரசனும், அக்கா ஜமுனாராணியும் ஊக்கப்படுத்தினாங்க...’’ என கீர்த்தனா சொல்ல, அகடமி நிறுவனர் நித்தியராஜன் தொடர்ந்தார். ‘‘கீர்த்தனாவை அந்தத் தனியார் கிளப்ல இருக்கும்போதே தெரியும். அங்க என் மகனையும், மகளையும் கேரம் விளையாட சேர்த்திருந்தேன். என் மகன் மிதுனுக்கு கீர்த்தனாதான் விளையாட்டு நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பாங்க.அவனும் நல்லா விளையாடினான். இப்போ தேசிய அளவிலான ப்ளேயராக இருக்கான். அதுக்கு கீர்த்தனா ஒரு காரணம். ஆனா, அவங்க அப்பா இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வேலைக்குப் போயிட்டாங்க. இந்நேரம் கொரோனா வந்ததும் அவங்க வீட்டின் நிலைமை இன்னும் மோசமாகிடுச்சு.
ஒருநாள் கீர்த்தனாவைப் பார்த்தப்ப ‘வீட்டுக் கஷ்டத்துல வேலைக்குப் போறேன் அங்கிள்’னு சொன்னாங்க. இந்நேரம் நான் கேரம்மேன் கோச்சிங் அகடமி ஆரம்பிச்சேன். ‘என்னுடைய அகடமிக்கு வாங்க’னு அழைச்சிட்டு வந்தேன். அந்நேரம் மாநில ஜூனியர் யூத் போட்டில விளையாடச் சொன்னேன்.
அதுல மாநில அளவில் இரண்டாவதாக வந்தாங்க. நீண்ட இடைவெளிக்குப் பிறகான சின்ன பயிற்சியிலேயே அவங்க மாநில அளவில் ஜெயிச்சாங்க. அடுத்து மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டிக்குப் போனோம். அதில் மூன்றாவதாக வந்தாங்க. இதனால், அவங்களுக்கு ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியாவின் ஸ்பான்சர்ஷிப்ல மாசம் ரூ.18 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைச்சது. அதுல அவங்க சரியான பெர்ஃபாமன்ஸ் பண்ணமுடியாததால் ஓராண்டுடன் ஸ்பான்சர்ஷிப் முடிஞ்சது. மறுபடியும் கஷ்டத்திற்குள் வந்திட்டாங்க. திரும்பவும் வேலைக்குப் போறேன்னு சொன்னப்ப இங்குள்ள பசங்களுக்கு பயிற்சியாளராக இருக்கச் சொன்னேன். அந்நேரம் என் பொண்ணு சப் ஜூனியர் நேஷனல்ஸ்ல டைட்டில் ஜெயிச்சா.
அதை அவ பள்ளியில் காட்டும்போது, இந்தமாதிரி கீர்த்தனானு ஒரு பொண்ணுதான் கோச் பண்ணினாங்க. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பொண்ணு. அவங்களுக்கு உதவி செய்தால் நல்லாயிருக்கும்னு கேட்டேன். உடனே அவங்க, ‘கேரம் பயிற்சி வகுப்பு போட்டு பள்ளியில் கத்துக்கொடுக்க சொல்லுங்க.
மாதம் 10 ஆயிரம் ரூபாய் தர்றோம்’னு சொன்னாங்க. இதனால், வீட்டுச் செலவுக்குக் கொடுக்க பணம் கிடைச்சிடுச்சு. அங்க பள்ளி நேரம் முடிஞ்சதும் சாயங்காலம் 3 டூ 5வரை வகுப்பு எடுப்பாங்க. சனி, ஞாயிறுகளில் காலையில் வகுப்பு. மற்ற நேரங்களில் இங்க அகடமியில் பயிற்சி.
அப்படியாக தொடர்ந்து பயிற்சியில் இருந்தாங்க. இதன்பிறகு மாநில அளவில் சீனியர் பிரிவில் தொடர்ந்து இரண்டு முறை ஜெயிச்சாங்க. அடுத்து தேசிய அளவில் இந்தாண்டு போனாங்க.
இதுக்கு தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் செயலாளர் மரிய இருதயம் சார் தலைமையில் பயிற்சி எடுத்தாங்க.பிறகு 52வது தேசிய சீனியர் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தாங்க. இது பத்து ஆண்டுகள் கழிச்சு தேசிய அளவில் தமிழ்நாட்டுக்குக் தனிநபர் பிரிவில் கிடைச்ச தங்கம். இதன் இறுதிப்போட்டியில் 6வது உலகக் கோப்பையை வென்ற காசிமாவை ஜெயிச்சாங்க. இதனால், உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. உலகக் கோப்பைனு வந்ததும் பள்ளிக்குப் பயிற்சி அளிக்க போறதை நிறுத்திட்டு தினமும் காலை 4 முதல் இரவு 9 வரை கிட்டத்தட்ட 16 மணிநேரம் பயிற்சி எடுத்தாங்க. அதுக்குக் கிடைச்ச பரிசுதான் இந்த உலகக் கோப்பை...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் நித்தியராஜன்.
அவரைத் தொடர்ந்தார் அம்மா இந்திராணி. ‘‘கீர்த்தனா ஆறு வயசுல இருந்தே விளையாடுறா. அவ அப்பாதான் இதுக்குக் காரணம். அவர்தான் இவங்க மூணு பேரையும் கேரம்ல சேர்த்துவிட்டார். அவர் இருக்கும்போதே மாநில, தேசிய அளவுல விளையாடி ஜெயிச்சா. நான்கு முறை தேசிய போட்டியில் வென்றா.
நானும் ஊக்கப்படுத்திட்டே இருந்தேன். 2017ல் அவங்க அப்பா மாரடைப்புல இறந்ததும் ரொம்ப துவண்டுட்டோம். இதனால், குழந்தைகளைக் காப்பாத்த நான் பல வேலைகள் செய்தேன். சின்னவனை மட்டுமே கல்லூரி வரை படிக்க வைக்க முடிஞ்சது. பெரியவன் அவங்க அப்பா இறக்கும்போது 12ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தான். அவனையும் வேலைக்கு அனுப்பும்படி ஆகிடுச்சு.
கீர்த்தனாவும் பத்தாம் வகுப்புக்குப் பிறகு வேலைக்குப் போயிட்டா. ஆனா, இவளுக்கு கேரம்னா உயிர். ரொம்பக் கஷ்டப்பட்டா. இப்ப என் மகள் தங்க மகளாகி இருக்கிறதைப் பார்க்கிறப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு...’’ எனக் கண்ணீர்மல்க அம்மா இந்திராணி சொல்ல, அவரின் கைகளைப் பற்றியபடி கீர்த்தனா தொடர்ந்தார்.
‘‘உண்மையில் இந்த வெற்றிக்கு நான் நிறைய பேருக்கு நன்றி சொல்லணும். முதல் நன்றி என்னுடைய பயிற்சியாளர்கள் தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் செயலாளர் மரிய இருதயம் சாருக்கும், சென்னை மாவட்ட கேரம் அசோசியேஷன் அமுதவாணன் சாருக்கும்தான்.
அவங்கதான் எனக்கு ஆலோசனைகள் வழங்கி, பல்வேறு நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்தினாங்க. அப்புறம் துணை முதல்வர் உதயநிதி சாருக்கு. இந்த உலகக் கோப்பைப் போட்டிக்குப் போக பணத்துக்கு தவிச்சப்ப அவர் நிதி உதவி செய்து வாழ்த்தி அனுப்பினார். அடுத்து எங்க தொகுதி எம்எல்ஏ எபினேசர் சார் கிளப்பிற்கே வந்து ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சார் உலகக் கோப்பைக்குப் போறதுக்கு முன்னாடி 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்தார். எல்லோருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்இனி தொடர்ந்து கேரம் விளையாடி இன்னும் பல்வேறு கோப்பைகளை வெல்லணும் என்பதே ஆசை...’’ நெகிழ்வுடன் சொல்கிறார் கீர்த்தனா.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்
|