உலகளவில் கோடிகளில் புரளும் பெரிய இண்டஸ்ட்ரி... இப்போது தமிழகத்தில்!



இன்று உலக அளவில் காமிக்ஸ் என்பது ஒரு மிகப்பெரிய துறையாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருசில தரவுகள், தற்போதைய உலகக் காமிக்ஸ் சந்தையின் மதிப்பு மட்டும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் என்கின்றன. 
இதில் இந்தியாவின் சந்தை மதிப்பு என்பது வெறும் ஆறாயிரம் கோடி ரூபாயாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை காமிக்ஸ் என்பது ரொம்பவே அரிதாகிவிட்டது. ஆனால், காமிக்ஸிற்கென வாசகர்கள் இங்கே நிரம்ப உள்ளனர்.  
இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளை டிஜிட்டல் வடிவில் காமிக்ஸாக உருவாக்கியுள்ளார் குறும்பட இயக்குநர் சிவகுமார். இதில் சிறப்பு என்னவென்றால் இந்த டிஜிட்டல் காமிக்ஸ் கதைகளை வாசகர்கள் ஆன்லைனில் இலவசமாகப் படிக்கலாம் என்பதுதான். 

‘‘காமிக்ஸைப் பொறுத்தவரை இந்தியாவுல ரசிகர்கள் இருக்காங்களே தவிர, ரொம்ப பரந்துபட்டு இல்ல. தமிழகத்தில் ‘அம்புலிமாமா’ இருந்த காலக்கட்டத்துல காமிக்ஸிற்கு பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. ‘லயன் காமிக்ஸ்’, ‘முத்து காமிக்ஸ்’ எல்லாம் நல்லா போனது. 

ஆனா, இன்னைக்கு ‘முத்து காமிக்ஸ் ரசிகர்கள்’னு ஒரு குரூப் மட்டுமே இருக்கு. இவங்களை யாருக்கும் வெளிய தெரியாது. அவங்க காமிக்ஸ் புக்ஸ் வாங்குவாங்க, படிப்பாங்க, என்ஜாய் பண்ணுவாங்க. அவங்களுக்குள்ளேயே பேசிப்பாங்க. அதனால், தமிழகத்தில் காமிக்ஸிற்கென ஒரு தளத்தை எடுத்திட்டு வரணும்னு ரொம்ப நாள் கனவாக இருந்தது. ஆனா, இதை வணிகமாக மாத்துறதுல எனக்கு உடன்பாடில்ல. அதனால், அதை பலரிடம் விவாதிச்சிட்டே இருந்தேன். 

உலக அளவில் காமிக்ஸ் துறை ரொம்ப பெரிசு. ஜப்பான்ல ‘மாங்கா காமிக்ஸ்’னு இருக்கு. பிளாக் அண்ட் வொயிட்ல இன்னைக்கும் வருது. அதுக்கு வேர்ல்டுல அப்படியொரு மார்க்கெட் இருக்கு. அங்கே காமிக்ஸ் பெரிய இண்டஸ்ட்ரி. 

இப்ப தென்கொரியா நாட்டிலும் நல்லா வளர்ந்திடுச்சு. அமெரிக்கா, சொல்லவே வேண்டாம். அங்க ‘டிசி காமிக்ஸ்’, ‘டார்க் ஹார்ஸ்’னு நிறைய இருக்கு. அவங்களும் சிறப்பாகப் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க எல்லாம் ‘பேட்மேன் யூனிவர்ஸ்’, ‘ஸ்பைடர்மேன்  யூனிவர்ஸ்’, ‘அயர்ன்மேன் யூனிவர்ஸ்’னு ஒரு யூனிவர்ஸையே கிரியேட் பண்ணுவாங்க.

அப்புறம், அது சினிமாவாக மாறும். பெரிய வசூலை ஈட்டும். இப்ப ஜப்பான்லயும் மாங்கா காமிக்ஸ் படமாகவும், வெப்சீரிஸாகவும் வருது. கொரியன்லயும் அவங்க காமிக்ஸைப் பார்த்து படங்கள் எடுக்கிறாங்க. நாமும் அந்த இடத்திற்கு வரணும்னு நினைச்சேன். அதனால், நாம் ஏன் இதை உருவாக்கக் கூடாதுனு தோணுச்சு. அப்படியாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த டிஜிட்டல் காமிக்ஸ் பிளாட்ஃபார்ம்...’’ என்கிற சிவகுமார் குறும்படத்திற்காக தேசிய விருதுகள் பெற்றவர்.

தற்போது முதல்கட்டமாக எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ சிறுகதையை டிஜிட்டல் காமிக்ஸாக வெளியிட்டுள்ளார். இதிலுள்ள ஓவியங்கள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. அவை நம்மை வசீகரித்து எளிதாக வாசிக்கச் செய்கின்றன. ‘‘ஒருநாள் புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’ சிறுகதையைப் படிச்சிட்டு இருந்தப்ப எனக்கு அதில் ‘அவதார்’ படத்துக்கு சமமான உள்ளடக்கம் இருப்பது தெரிஞ்சது. அதுக்குள்ள விஷுவல் அவ்வளவு இருந்தது. 

இதை ஏன் நாம் எடுத்துட்டு வரக்கூடாதுனு சின்னதாக வேலைகள் செஞ்சேன். அந்தச் சிறுகதையை பிளாக் அண்ட் வொயிட்ல பண்ணினேன். முதல்ல இதனை அச்சுவடிவில் பண்ணணும்னுதான் இருந்தேன். ஆனா, அது முடியல. நான் கிராபிக்ஸ் படிச்சிருப்பதால் டிஜிட்டல் ஃபார்ம் உள்ளே வந்தேன். 

இதில் என்ன சவால்னா எதைக் காட்சியாகக் காட்டணும்... எதை வசனமாக சொல்லணும் என்பதுதான். நீங்க வசனத்துல சொல்றது காட்சியாக இருக்கக்கூடாது. காட்சியில் இருப்பது வசனமாக இருக்கக்கூடாது. ஆனா, அந்த இடத்தை கிராஸ் பண்றது ரொம்ப சிரமம். இன்னைக்கும் இதுல எக்ஸ்பெரிமென்ட் பண்ணிட்டே இருக்கேன்.

அப்புறம் யோசிச்சு பார்த்தப்ப நம்மள மாதிரி எவ்வளவோ அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் இருப்பாங்க. அவங்ககிட்ட நல்ல கதை இருக்கும்ல. அவங்கள இதுக்குள்ள கொண்டு வந்தா ஒரு வருமானம் ஏற்படுத்தலாம். இந்த இண்டஸ்ட்ரியும் வேற மாதிரி பரிணமிக்கும் என்கிற எண்ணம் வந்துச்சு.அதனால், இதை துணிந்து செய்வோம்னு டிஜிட்டல் காமிக்ஸ்ல இறங்கினேன். இதுக்காக ஒரு ஐந்து பேர் கொண்ட டீம் உருவாக்கினேன்.  

அப்படியாக ‘கபாடபுரம்’ பிளாக் அண்ட் வொயிட்டை கலராகக் கொண்டு வந்தேன். ஏற்கனவே பிளாக் அண்ட் வொயிட்ல பண்ணியிருந்ததால் கலரினை இரண்டு மாசத்தில் முடிச்சோம். இதனை sivacomics.com வெப்சைட்டில் போய் இலவசமாகப் படிச்சுக்கலாம்.அப்புறம், இன்னைக்கு இருக்கிற டெக்னாலஜியைப் புகுத்தி படிக்கிறதுக்கும் பார்க்கிறதுக்கும் சுலபமா மூவ் பண்ற மாதிரி பண்ணியிருக்கோம். அதுமட்டுமில்ல. இதுக்கு இன்டர்நெட்டும் அதிகம் செலவாகாது.

செல்போன்ல இந்தக் காமிக்ஸை பார்த்தாலும் அவ்வளவு நெட் போகாது. அந்தமாதிரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்தியே உருவாக்கியிருக்கோம். அதனால், எளிதாக காமிக்ஸ் ஓவியங்கள் எல்லாம் டவுன்லோடு ஆகும். இப்போ எழுத்தாளர் பாலகுமாரன் சாரின் ‘கடற்பாலம்’ சிறுகதையை பண்ணி முடிச்சிருக்கோம். அதை விரைவில் அப்லோடு செய்யப் போறோம். 

இதுதவிர, லோகேஷ் ரகுராமன்னு ஒரு எழுத்தாளர். கடந்த ஆண்டு யுவ புரஸ்கார் விருது வாங்கியவர். அவரின் ‘பாஞ்சஜன்யம்’னு ஒரு கதை பண்ணியிட்டிருக்கோம்.  
அப்புறம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்’ கதையின் வேலையும் போயிட்டு இருக்கு. 

இதுதவிர, எழுத்தாளர் தமிழ்மகன் சார்கிட்ட ‘ஆபரேஷன் நோவா’ வாங்கிப் பண்ணிட்டு இருக்கேன். எல்லாமே சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கியே செய்றேன். 
முதல்கட்டமாக நம்மிடம் உள்ள சிறந்த இலக்கியங்களைக் காமிக்ஸ் வடிவில் கொடுப்பதே ஐடியா. இதிலும் எல்லா கதைகளையும் பண்றதில்ல. அந்தக் கதையில் ஒரு மேஜிக்கல் எலிமென்ட் இருக்கணும். அது காமிக்ஸ் தளத்திற்கு ஏற்றதாக இருக்கணும். அந்தமாதிரி கதையாகப் பார்த்து தேர்ந்தெடுக்கிறேன்.

அதேபோல் வாசகர்கள் பார்க்காத ஒரு விஷயத்தை விஷுவலாக காட்டணும். அதுதான் சவால். அதனை யோசிச்சு செய்றோம். இதுல இன்னொரு லேயராக இளம் தலைமுறையினரை ஈர்க்கணும் என்பதற்காக பல்ப் பிக்‌ஷனையும் எடுத்திட்டு வர்றேன்.  

இப்படி விஷுவலாக காமிக்ஸ் படிக்கிறது நிச்சயம் வாசகர்களுக்கு வேற ஒரு அனுபவத்தைக் கொடுக்கும். இப்ப கபாடபுரம் சிறுகதை ஐந்து எபிசோடுகள் கொண்டது. ஒரு எபிசோடில் 30 முதல் 35 ப்ரேம் பார்க்கலாம். அது கதைக்குத் தகுந்தமாதிரி இருக்கும். அப்படியாக இந்தகாமிக்ஸ் சிறுகதையை நீங்க 15 நிமிடங்கள்ல படிச்சு முடிச்சிடலாம்.  

அந்தக் கதையின் முக்கிய அம்சங்கள் எல்லாம் உங்களுக்கு கன்வே ஆகிடும். விஷுவலாக ஞாபகமாகிடும். தமிழ்ல இப்படியெல்லாம் கதைகள் இருக்கானு நீங்க நினைக்கிற அளவுக்கு கதைக் களத்தை தேர்ந்தெடுத்து செய்திருக்கோம். 

அந்த ரியல் காமிக்ஸ் புக்கில் கிடைக்கும் தாக்கத்தை இதில் கொடுக்க முயற்சி செய்திருக்கோம். அந்த வகையில் இது ஒரு புது முயற்சியாதான் இருக்கும். இது நிச்சயம் இன்னும் ரெண்டு ஆண்டுகள்ல பெரிய இண்டஸ்டரியாக வளரும்னு நம்பிக்கை இருக்கு. இதனுள் இன்னும் நிறைய பேர் வருவாங்க. 

இப்ப நான் தமிழ்ல ஆரம்பிச்சிருக்கேன். மூணு மாசம் கழிச்சு தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு மற்ற மொழிகளிலும் காமிக்ஸ் கொண்டு வரப்போறேன்.  
மற்ற மொழிகளிலும் அங்குள்ள எழுத்தாளர்களிடம் ரைட்ஸ் வாங்கி செய்றேன். ஒவ்வொரு மாநில எழுத்தாளர்களையும் இதுக்குள்ள சேர்க்கிறேன். 

அதேமாதிரி ஃபிக்‌ஷன் மட்டுமில்லாமல் நான்-ஃபிக்‌ஷன் நூல்களையும் எடுத்திட்டு வரணும்னு இருக்கேன். இப்போ ஜிம் கார்பெட் அனுபவங்கள் இருக்கு. அதனை எல்லோரும் புத்தகமாகப் படிச்சிருப்பாங்க. அதனை விஷுவலாக எடுத்திட்டு வரணும்னு நினைக்கிறேன். இதுதவிர ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப்பின் இந்தியா’னு ஒரு நூல் இருக்கு. 

அதையும் எடுத்துட்டு வரணும்னு ஆர்வம் இருக்கு.  எதிர்காலத்தில் இங்கே காமிக்ஸிற்கென ஒரு உலகத்தை உருவாக்கணும்னு நினைக்கிறேன். அதாவது முன்னாடி ‘அம்புலி மாமா’வுக்கு எப்படி ஒரு பாரம்பரியம் உருவானதோ அதுமாதிரி ஒரு நிலையை கொண்டு வரணும் என்பது என் ஆசை...’’ என முத்தாய்ப்பாய் சொல்கிறார் சிவகுமார்.

பேராச்சி கண்ணன்