டாக்டர்ஸ் ஏற்றுமதியில் இந்தியா டாப்!



மருத்துவக் கல்லூரிகள் அதிகமுள்ள நாடு; மருத்துவமனைகள் அதிகமுள்ள நாடு; மருந்துகள் அதிகமுள்ள நாடு... இதெல்லாம் இந்தியாவுக்கான பெருமை. 
ஆனால், மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்த 10 டாக்டர்களில் 2 பேர்தான் இந்தியாவில் பொது மருத்துவத் துறையில் அல்லது அரசுத் துறையில் பணியாற்றுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் 10 டாக்டர்களில் 8 பேர் பொது மருத்துவமனையிலோ அல்லது அரசு ஆஸ்பத்திரியிலோ பணிபுரிவதில்லை என்பதே நிஜம்.
இதற்கும் அப்பால் இந்தியாவில் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் இந்திய டாக்டர்ஸ் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது முகத்தில் அறையும் உண்மை. 

பொதுவாக இந்தியாவின் மருத்துவத் துறையையும், க்யூபா நாட்டு மருத்துவத் துறையையும் ஒப்பிட்டுப் பேசுவார்கள் மருத்துவ வல்லுனர்கள். காரணம், இரண்டு நாடுகளுமே மிகவும் பணக்கார நாடுகளும் கிடையாது, பரம ஏழை நாடுகளும் கிடையாது. இரண்டுமே ‘மிடில் இன்கம்’ நாடுகள் எனும் பட்டியலின் கீழ் வரும். அதாவது மிடில் க்ளாஸ் அதிகம் வாழும் நாடுகள் இவை இரண்டும். 

ஆனால், இந்தப் புள்ளி மட்டும்தான் இருநாடுகளுக்கும் இடையிலிருக்கும் ஒற்றுமை. மற்றவை அனைத்தும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு கொண்டவை.
ஏனெனில் பணக்கார நாடுகளே பொறாமைப்படும் அளவில் இருக்கிறது க்யூபா நாட்டின் மருத்துவத்துறை. இது அந்நாட்டையே தலைநிமிர வைத்திருக்கிறது. கூடவே இதே விஷயம் இந்தியாவை தலைகுனிய வைத்திருக்கிறது. இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இருநாட்டு மருத்துவத்துறையையும் தனித்தனியாகப் பார்ப்போம்.

இந்திய டாக்டர்கள்

டாக்டர் பட்டம் பெற்று வெளியே வரும் மருத்துவர்களில் 2 பேர்தான் பொது மருத்துவம் அல்லது அரசுத் துறையில் வேலை செய்கிறார்கள் என்று ஆரம்பத்தில் பார்த்தோம். அதிலும் இந்த 2 பேரும்கூட நகரங்களில்தான் வேலை செய்கிறார்கள். 

கிராமப்புறங்களில் பணிபுரியச் செல்பவர்கள் குறைவு.வெளிநாடுகளுக்குப் பறக்கும் இந்திய டாக்டர்களை எடுத்துக்கொண்டால் 1989 மற்றும் 2000ம் ஆண்டு இடைவெளியில் தில்லி எய்ம்ஸில் பட்டம் பெற்ற டாக்டர்களில் சுமார் 54 சதவீதம் பேர் வெளிநாடுகளில் வேலை செய்யச் சென்றார்கள் என்கிறது புள்ளிவிபரம். 

உதாரணமாக அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய டாக்டர்கள் சுமார் 4.9 சதவீதம் என்றால் பிரிட்டனில் பணிபுரியும் இந்திய டாக்டர்கள் 10.9 சதவீதம். வெளிநாட்டுக்குப் போகமுடியாத டாக்டர்கள் உள்ளூரில் என்ன செய்வார்கள்? தனியார் மருத்துவமனைக்குத்தான் படையெடுப்பார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 

சரி. இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகள் நிலை என்ன?

2006ம் ஆண்டுகளில் இந்தியாவில் வெறும் 256 மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. ஆனால், இது 2017ல் 479 ஆக உயர்ந்தது. இந்த 479திலும் 259 தனியார் மருத்துவக் கல்லூரிகள். 
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு மருத்துவ சீட்டுகள் இருக்கின்றன என்று பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்.

உதாரணமாக இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மொத்தமாக சுமார் 48 சதவீத எம்பிபிஎஸ் சீட்டுகள் இருக்கின்றன என்று சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். எஞ்சிய 52 சதவிகித மருத்துவ சீட்டுகள் மட்டுமே அரசுக் கல்லூரிகளில் இருக்கின்றன.  

க்யூபா டாக்டர்கள்

க்யூபா டாக்டர்களை டிவியில் ‘ஆர்மி ஆஃப் வைட் கோட்’ என விஷுவலாக பல நேரம் நாம் பார்த்திருப்போம். உலகில் எந்த மூலையில் ஏதாவது ஒரு மருத்துவப் பிரச்னை என்றாலும் ஓடோடி வந்து சேவை ஆற்றுபர்கள் இந்த க்யூபா மருத்துவர்கள்தான். அப்படி என்ன க்யூபா மருத்துவர்களுக்கு டிமாண்ட் இருக்கிறது? அதுதான் க்யூபா மருத்துவர்களின் ஸ்பெஷாலிட்டியை காண்பிக்கிறது.

க்யூபாவில் ஒரு மாணவன் மருத்துவப் படிப்பு படிக்க விரும்பினாலே அவனின் முந்தைய படிப்புத் திறனை எல்லாம் மருத்துவக் கல்லூரி கண்டுகொள்ளாது. குணத்தில் அவன் எப்படி என்றுதான் பரீட்சை வைப்பார்கள். சேவை மனப்பான்மை, பொது மருத்துவத்தில் எவ்வளவு அக்கறை என்று பார்த்துதான் ஒரு மாணவனை மருத்துவப் படிப்பில் சேர்க்கிறார்கள். 

அத்தோடு எல்லா மருத்துவப் படிப்பும் மருத்துவக் கல்லூரியிலேயே முடிந்துவிடுவதில்லை. நகரம், கிராமங்களில் இருக்கும் மருத்துவமனையில் நேரடியாகச் சென்று அந்த மாணவன் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அவனை புடம்போட்டு, சேவை மனப்பான்மையைத் தூண்டும் செயலாக மாறிவிடும். 

இத்தோடு மருத்துவப் படிப்பில் சேரும்போதே ‘நான் தனியார் மருத்துவத் துறையில் சேரமாட்டேன்’ என ஒரு க்யூபா மாணவன் எழுதிக்கொடுப்பதால் அந்நாட்டில் வேறு எந்த தேசத்திலும் இல்லாத அளவுக்கு மருத்துவத் துறை, சேவைத் துறையாகவே திகழ்கிறது. 

இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாறிய மாற்றம் இது.க்யூபாவில் 1959ம் ஆண்டு புரட்சி நிகழ்ந்தது. ஃபிடல் காஸ்ட்ரோ மக்கள் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 

புரட்சிக்கு முன்னால் க்யூபாவில் ஒரேயொரு மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது. வருடத்துக்கு வெறும் 6300 டாக்டர்கள்தான் படித்து வெளியே வந்தனர்.ஆனால், இன்று உலகையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு அங்கே மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கிறது. 

உதாரணமாக இந்தியாவில் 850 பேருக்கு ஒரு டாக்டர் என்றால் க்யூபாவில் 1000 மக்களுக்கு 9.5 டாக்டர்கள் இருக்கிறார்கள். இதுவே அமெரிக்காவில் 2.6 மருத்துவர்கள்தான் உள்ளனர். இதிலிருந்தே க்யூபாவின் மருத்துவ எழுச்சியை புரிந்துகொள்ளலாம். 1959ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு க்யூபாவில் ஆரம்ப சுகாதார மருத்துவத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

1965ம் ஆண்டில் 45000 மக்களுக்கு ஒரு ‘பாலி க்ளினிக்’ எனும் பெயரில் சுமார் 498 மருத்துவமனைகள் நகரங்களிலும் கிராமங்களிலும் திறக்கப்பட்டன.இது 1970ம் ஆண்டில் 25000 பேருக்கு ஒரு க்ளினிக் என உயர்ந்து 1980களில் ‘ஃபேமிலி டாக்டர்’ எனும் ஒரு திட்டத்தின் மூலம் 120 அல்லது 150 குடும்பங்களுக்கு ஒரு மருத்துவமனை, ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் என வளர்ந்தது.

இந்த ஃபேமிலி டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மட்டும் பார்க்காமல் அந்த 150 குடும்பங்களை தினசரி வீடு தேடிச் சென்று பார்த்து ‘உப்பு கம்மியாக உணவை எப்படி சமைப்பது, கைகளைக் கழுவி உண்டால் என்ன பயன்’ என்றெல்லாம் மக்களுக்கு மருத்துவ வகுப்பும் எடுத்தார்கள். நோய்கள் வந்தால்தானே பிரச்னை... நோயில்லாமல் வாழ்வது எப்படி என ஆர்வத்தோடு மக்களிடம் பாடம் புகட்டினார்கள். இதுதான் க்யூபா மருத்துவர்களை உலகமே கண்டு ஆச்சரியப்படுவதற்கான காரணம். 

இன்று உலகில் எங்கே சுகாதாரப் பிரச்னை என்றாலும் க்யூபாவின் ஆர்மி ஆஃப் வைட் கோட் டாக்டர்கள்தான் இரண்டு மாற்று உடைகளோடு சிக்கலுள்ள நாடுகளுக்கு பறந்துபோய் வைத்தியம் பார்க்கிறார்கள். இதிலும் க்யூபாவுக்கு வருமானம் உண்டு. உதாரணமாக இந்த வெளிநாட்டுச் சேவை மூலம் க்யூபாவுக்கு 11 பில்லியன் டாலர் பணமும் வருடத்துக்குக் கிடைக்கிறது!ஆனால் ஒன்றிய பாஜகவின் ஆட்சியில் இந்தியா?

டி.ரஞ்சித்