ஹீரோவா அறிமுகமானேன்... சக்சஸ் ஆகலை... டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா மகிழ்ச்சியா இருக்கேன்!
கோட்டா சீனிவாசராவ், ஷாயாஜி ஷிண்டே முதல் ‘லயன் கிங்’ வரை வாய்ஸ் ராஜா இவர்தான்
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக டப்பிங் துறையில் அளப்பரிய சேவை செய்து வருபவர் ராஜேந்திரன். இந்திய சினிமாவின் மிக முக்கியமான டப்பிங் கலைஞரான இவர் கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே உட்பட பல நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். ‘லயன் கிங்’ படத்துக்கும் குரல் கொடுத்துள்ளார். நடிகர் ராஜேந்திரன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக எப்படி மாறினார்?
சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் படிக்கும்போதுதான் சினிமா ஆசை துளிர்விட்டது. ரா.பார்த்திபன், நடிகர் வசந்த் என்னுடைய வகுப்பு தோழர்கள். எனக்கு இயல்பாகவே கதை சொல்லவரும். நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தால் நாடகங்களில் நடிக்க முயற்சி செய்தேன். ஒய்.ஜி.பி. டிராமா ட்ரூப், ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ரமணன் சார் டிராமா ட்ரூப் என சில ட்ரூப்களில் சில காலம் ஸ்டேஜ் நுட்பம் கத்துக்கிட்டேன்.
நடிகராக என்னை பட்டை தீட்டியது லியோபிரபு. என்னுடைய ‘நலம் நலமறிய ஆவல்’ நாடகத்தை நாகேஷ் சார் நேரில் கலந்துகொண்டு பாராட்டியுள்ளார். நடிப்பைப் பொறுத்தவரை என்னுடைய குருநாதர் நாகேஷ் சார். சுமார் 1500 க்கும் மேற்பட்ட நாடகங்கள் செய்துள்ளேன்.  சினிமாவில் நீங்கள் ஹீரோவாக அறிமுகமானீர்கள். அதன்பிறகு என்ன நடந்துச்சு?
1981ல் வெளிவந்த ‘தர்மகர்த்தா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன். அதுதான் கோவை சரளாவுக்கும் முதல் படம். அந்தப் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்த தயாளன் ஜோடியாக கோவை சரளா நடித்தார். அந்தப் படத்துக்குப் பிறகு சில வாய்ப்புகள் வந்துச்சு. எல்லாமே ஹீரோவுக்கு ஃப்ரெண்ட் கேரக்டர். எனக்கு அதில் விருப்பம் இல்லாததால் அப்படியே சான்ஸ் குறைய ஆரம்பிச்சது.
இயக்குநர்களிடம் நெருங்கிப் பழக டப்பிங் ஸ்டூடியோ நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நெனைச்சு டப்பிங் பேச ஆரம்பித்தேன். 83ம் ஆண்டிலிருந்து டப்பிங் பேசி வருகிறேன். தெலுங்கு டூ தமிழ், மலையாளம் டூ தமிழ், இந்தி டூ தமிழ் என இந்திய மொழிகளில் உருவாகும் ஏராளமான படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறேன்.
கோட்டா சீனிவாசராவ், சாயாஜி ஷிண்டே போன்றவர்களுக்கு வில்லன் வாய்ஸ், ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகருக்கு காமெடி வாய்ஸ் என பல மாடுலேஷனில் டப்பிங் பேசியிருக்கிறேன்.
ஆங்கிலம் டூ தமிழ் படங்களில் ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் பேசுவதுபோல் ஸ்பீட் டப்பிங் வாய்ஸுக்கு நான்தான் பெரும்பாலும் பேசுவேன். சமீபத்தில் வெளிவந்த ‘லயன் கிங்’ குரங்கு கேரக்டருக்கு நான்தான் பேசினேன்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் துறைக்கான முக்கியத்துவம் எப்படி உள்ளது?
எந்த மொழி படமாக இருந்தாலும் டப்பிங் முக்கியம். இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட சிவாஜி சார் ஒரு பேட்டியில் சொன்னதை சொல்ல விரும்புகிறேன். சிவாஜி சார் நடித்த படம் ‘பாரம்பரியம்’. விஷுவலுக்கு ஏற்ப டப்பிங் கொடுக்க முடியாததால், ‘திரை முன் நின்று நடிக்கும்போது ஆவேசமா நடிக்கிற, டப்பிங்ல ஏன் உன்னால் பாவனை கொடுக்க முடியல’னு தனக்குத் தானே கேள்வி கேட்டு சிவாஜி அப்பா டப்பிங் பேசினாராம்.
நடிப்பதைவிட டப்பிங் பேசுவது கஷ்டம். ஏனெனில், ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் டயலாக் சொல்லித் தருவார். கேரக்டருக்கு ஏற்ப காஸ்டியூம்ஸ் இருக்கும். தப்பு பண்ணினாலும் பக்கத்துல உள்ளவங்க கவனிச்சு சொல்லுவாங்க. டப்பிங் டேபிள் அப்படி கிடையாது. மைக்தான் எல்லாமே. காட்சியில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே பேச வேண்டும்.
‘சாமி’யில் பெருமாள் பிச்சை கேரக்டருக்கு பேசியது நினைவிருக்கிறதா?
இயக்குநர் ஹரி சார் என்னிடம் ஆரம்பத்தில் சில நிமிஷங்கள் பேசினார். பிறகு என் மேல் நம்பிக்கை இல்லாமல் சில காட்சிகளுக்கு பேசச் சொன்னார். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவரை அனுப்பிவிட்டு டப்பிங் பேசினேன்.
கோட்டா சாரின் பாடிலேங்வேஜுக்கு ஏற்ப டப்பிங் பேசியிருந்ததைப் பார்த்துவிட்டு ‘ஸ்பில்ட் பெர்சனாலிட்டி மாதிரி மாறிட்டீங்க’ன்னு பாராட்டினார். அந்தப் படத்துக்கு தமிழக அரசின் சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் விருது எனக்கு கிடைத்தது. தெலுங்கு டூ தமிழ் 68 படங்கள், நேரடி தமிழ் படங்கள் என கோட்டா சாரின் அனைத்து படங்களுக்கும் நான்தான் டப்பிங். கோட்டா சாரிடம் கால்ஷீட் கேட்கும்போது ‘என் ஜீவன் ராஜேந்திரனை புக் பண்ணினால் நடிக்கிறேன்’ என்று பேசி அக்ரிமெண்ட் போடுவார்னு கேள்ப்பட்டிருக்கிறேன்.
ஒரு படத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பங்களிப்பு எப்படி? மாற்றங்கள் செய்ய அனுமதிக்கப்படுவீர்களா?
இப்போது தொழில் பக்தி பரவசம் குறைந்துவிட்டது. அப்போது தெலுங்கு டூ தமிழ் டப்பிங் பேசும்போது ரைட்டர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனைவரையும் வரவழைச்சு படத்தைப் போட்டுக்காட்டுவார்கள்.
யார், யார் என்ன கேரக்டர் பேசவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். அப்போது லிப் சிஸ்டம். எல்லோரும் அவரவர் போர்ஷன் வரும்போது பேசவேண்டும். சிறிய தவறு நடந்தாலும் மறுபடியும் முதலில் இருந்து பேச வேண்டும். இப்போது டெக்னிக் வசதி உண்டு. எப்படி வேண்டுமானாலும் லிப் சிங் கொடுக்க முடியும். நடிகர்களின் எமோஷனுக்கு ஏற்ப டப்பிங் பேசுவதற்கு எதைப் பின்தொடர்வீர்கள்?
படம் பார்க்க வேண்டும். ‘சுட்டிக்குழந்தை’ என்ற படத்தில் சுதாகர் சாருக்கு பேசினேன். சுதாகர் சார் நண்பர்களுடன் சேர்ந்து குழந்தையைக் கடத்துவது போல் காட்சி. குழந்தையைக் கடத்துவதற்கு எப்படி ப்ளான் பண்ணுகிறார்கள், ரியாக்ஷன், டோன் வேரியேஷன் என எல்லாம் கவனிச்சு பேசவேண்டும்.
‘டப்பிங்’ பற்றி சுருக்கமாக சொல்வதாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?
‘லிப் சிங்’ பண்ணுவது ‘டப்பிங்’னு சொல்வார்கள். ‘லிப் சிங்’ பண்ணுவது லவ்வர்ஸ் வேலை. ‘டப்பிங்’ என்பது ‘லிப் சிங்’ அல்ல, எமோஷ்னல் சிங். எமோஷனலுக்கு ஏற்ப பேசினால்தான் ‘லிப் சிங்’ பண்ண முடியும்.
எந்த கேரக்டருக்கு பேச அதிகம் பிடிக்கும்?
காமெடி கேரக்டர். ‘அதிசயப் பிறவி’ படத்தில் சில காட்சிகளுக்கு நான் பேசவேண்டிய சூழ்நிலை இருந்துச்சு. சுதாகர் சாரும் பேசியிருந்தார். படம் பார்க்கும்போது எது சுதாகர் வாய்ஸ், எது என்னுடைய வாய்ஸ் என்று கண்டுபிடிக்க முடியாது. அதைப் பார்த்துவிட்டு பல இயக்குநர்கள் பாராட்டினார்கள்.
டப்பிங் பேச மிமிக்ரி தெரிஞ்சிருக்கணுமா?
‘சாமி’ படத்துக்கு தாமு, மயில் சாமி என சிலர் ‘டப்’ பண்ணியிருந்தார்கள். ஆனால், மேட்ச் ஆகவில்லை. மிமிக்ரி கலைஞர்கள் ஒரு குரலை நகல் எடுக்க முடியும். ஆனால், பெர்ஃபாமன்ஸ் பண்ண முடியாது.
‘ஆதவன்’ படத்தில் சூர்யா சார் அப்பாவாக மலையாள நடிகர் முரளி நடித்தார். அந்தப் படத்தில் அனைவரும் சொந்தக் குரலில் பேசினார்கள்.படம் முடியும்போது முரளி சார் மறைந்ததால் கே.எஸ்.ரவிக்குமார் சார் என்னை டப்பிங் பேச கூப்பிட்டார். அந்தப் படத்துக்கு நான்தான் டப்பிங் பேசினேன் என்பது பலருக்குத் தெரியாது. டப்பிங் யூனியனில் என்னதான் நடக்கிறது?
டப்பிங் அருமையான துறை. ஆனால், உறுப்பினர்கள் நலனுக்காக யூனியன் எதுவும் செய்வதில்லை. ராதாரவி தலைவராக பொறுப்பு ஏற்ற காலத்திலிருந்து அவருடன் பயணிக்கிறேன்.
டப்பிங் யூனியனை முறைப்படுத்தியது அவர்தான். இப்போது அவருடைய நேரடிப் பார்வை இல்லாததால் நிர்வாகிகள் தங்கள் விருப்பத்துக்கு செயல்படுகிறார்கள். நியாயம் கேட்பவர்களை தகுதி நீக்கம் செய்கிறார்கள். சீனியரான எனக்கும் அதே நிலை.
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|