இதைப் படிக்காத பெண்கள் ஆபத்தை நோக்கிப் பயணிப்பதா அர்த்தம்!



சமீபத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்விற்காக தனிசட்டம் கொண்டு வரவேண்டுமென தனிநபர் மசோதாவைமாநிலங்களவையில் தாக்கல் செய்தார் திமுக எம்பியான டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு. ‘மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை சட்டம் 2025’ என அவர் அறிமுகம் செய்த தனிநபர் மசோதாவில், மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் அதிகரித்து வருவது குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் ஏன் அதிகரிக்கிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் சென்னை பிரெஸ்ட் சென்டரின்  மார்பகப் புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணாவிடம் பேசினோம். ‘‘இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவது உண்மைதான். நாங்கள் 26 பேர்களில் ஒருவருக்கு வருகிறது எனச் சொல்கிறோம். இந்த எண்ணிக்கை தில்லி, மும்பை, சென்னை மாதிரியான நகர்ப்புறங்களில் வேறுபடும்.  

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு கரியரை தொடங்கும் போது இந்தியாவில் ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர்கள் வரை மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது.
இப்போது அப்படியே இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சத்து 30 பேர்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறிப்படுகிறது...’’ என்றபடி ஆரம்பித்தார். 

‘‘இதற்கு முக்கியக் காரணம் நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு இவ்வளவு மனஅழுத்தமோ, தூக்கமின்மையோ, உடல்பருமனோ இல்லை. இன்றைக்கு உடல் பருமன் அதிகமாகிவிட்டது. ரொம்பச் சின்ன வயதிலேயே குண்டாக இருக்கிறார்கள். இது மார்பகப் புற்றுநோய்க்கு அதிக ரிஸ்க் காரணி. அப்புறம், இன்றைக்கு பெண்களும் ஆல்கஹால் எடுத்துக் கொள்கிறார்கள். 

முக்கியமாக இது ஹார்மோனை மையப்படுத்திய பிரச்னை. அதாவது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்ஸ் இருக்கிறது. உடல் பருமன் ஆகும்போது இந்த ஹார்மோன்கள் மாறுகிறது. 

 இதனால் சில செல்களில் மாற்றம் நிகழும். அதாவது ஒன்று, இரண்டு என பலதரப்பாக செல் மாறும்போது அதில் தவறு நடக்கிறது. இது ஒரு தவறிலேயே புற்றுநோயாக மாறாது. முதலில் நம் உடம்பில் தவறு நடக்கிறது எனத் திருத்திக் கொள்ளும். நம் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும். அதையும் மீறி சில செல்கள் செயலற்றதாக ஆவதை கேன்சர் என்கிறோம். 

சரி, மார்பகத்தில் புற்றுநோய் இருந்தால் என்ன? அது உயிருக்கு அத்தியாவசியமான உறுப்பு இல்லையே... அது இல்லாமல் இருந்தால் என்ன பிரச்னை, அதில் கட்டி இருந்தால் இருந்திட்டு போகட்டுமே என விடலாம். ஆனால், ஏன் பிரச்னை என்றால் அந்தக் கட்டி நல்லதோ கெட்டதோ, எது வளர்ந்தாலும் அதுக்கு ஆக்ஸிஜன் வேண்டும், ஆற்றல் வேண்டும், ரத்த ஓட்டம் வேண்டும். ரத்தம் உள்ளே வந்துதான் வெளியே போகும்.

அப்போது சில கேன்சர் செல்களை ரத்தத்தில் கலந்து கொண்டு போய் அது உயிருக்கு அத்தியாவசியமான உறுப்புகளான கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றில் வளர்ந்தால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும். 

அதனால்தான் அதற்கு சிகிச்சை அளித்து வராமல் தடுக்க வேண்டும் என்கிறோம்.வேலைப்பளு, மனஅழுத்தம், சுற்றுச்சூழல் மாசு, தண்ணீர் முதல் உணவு வரை மாசுக்கள் எனப் பலவிதத்தில் நாம் உடலை இன்சல்ட் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இதெல்லாம் செல்களின் வழியே தன் வேலையைக் காட்டுகின்றன. 

அடுத்ததாக சிலருக்கு மரபணு காரணமாக மார்பகப் புற்றுநோய் வரலாம். இது நூறு பேர்களில் ஐந்து பேருக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், நோய் வராமல் தடுக்க வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும் என்கிறோம். இதற்கு இப்போது இருக்கிற இளம் தலைமுறை பெண்களிடம், குறிப்பாக வயதுக்கு வருகிற காலக்கட்டங்களில் இருந்தே  விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும்.

பொதுவாக மார்பகப் புற்றுநோய், 50 மற்றும் 60 வயதுள்ள பெண்களுக்குத்தான் முக்கியமாக வருகிறது. அடுத்து 40 வயதுக்கு மேலுள்ளவர்களுக்கு இருக்கிறது. 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வருவது ரொம்ப குறைவு. அதாவது நூறு பேரில் 15 பேருக்கே வருகிறது...’’ என்ற டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, இதன் அறிகுறிகளை பட்டியலிட்டார். 

‘‘பொதுவாக ஒரு கட்டி இருக்கலாம். அந்தக் கட்டி வலியுடனோ, வலி இல்லாமலோ இருக்கலாம். நிறைய பேர் இதையும் ஒரு மித் மாதிரி கருதுகின்றனர். அதாவது வலி இருந்தால் புற்றுநோய், வலி இல்லையென்றால் புற்றுநோய் இல்லை என அவர்களாகவே நினைத்துக் கொள்கின்றனர். 

அப்புறம், மார்பகம் கனமாகத் தோன்றலாம். நிப்பிலில் இருந்து கசிவு ஏற்படலாம். அக்குளில் கட்டி வரலாம். அதற்காக இதெல்லாம் இருந்தால் உடனே புற்றுநோய் என்கிற அர்த்தமும் இல்லை. பல நேரங்களில் இந்த அறிகுறிகள் புற்றுநோயாக இல்லாமலும் இருக்கலாம். ஒன்றிரண்டு பேருக்கு புற்றுநோயாகவும் இருக்கலாம்.

அதனால், இதை ஒன்றுமில்லை என விட்டுவிடக் கூடாது. அதேநேரம், கேன்சர்தான் எனப் பயப்படவும்கூடாது. முதலில் பெண்கள் தங்களை சுயபரிசோதனை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.மார்பகம் வளர்கிற காலக்கட்டத்தில் இருந்தே செய்ய வேண்டும். இப்போது, முகத்தை கண்ணாடியில் பார்க்கிறோம். நரைமுடிகளை எல்லாம் கவனிக்கிறோம். ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் ஏன் இப்படி இருக்கிறது என யோசிக்கிறோம் இல்லையா? 

அதேபோல் மார்பகத்தைக் கவனிக்க வேண்டும். தனக்கு நார்மலாக இப்படிதான் மார்பகம் இருக்குமென தெரிந்தால் பிரச்னை இல்லை. ஆனால், அதில் வித்தியாசம் தெரிந்தால் கூடுதல் கவனம் தேவை.ஏனெனில், சிகிச்சைக்கு வருகிற நிறைய பேர் பெரிய அளவிலான கட்டியுடன் வருவார்கள். எப்படித் தெரியாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழும். 

அதனால்தான் சுயபரிசோதனை அவசியம் என்கிறோம்.இதனை மாதம் ஒருமுறை செய்தால் போதும். மாதவிடாய் காலங்களில் வேண்டியதில்லை. ஏனெனில், அந்நேரம் மார்பகம் கனத்து ஒரு வலி இருக்கும். உடம்பும் கனத்துத் தெரியும். அப்போது பரிசோதனை பண்ணினால் எல்லாமே பயமாகத் தோன்றும். 

பொதுவாக பெண்கள் இது பால்கட்டியாக இருக்கும், கொசு கடித்திருக்கும், நெறிகட்டியிருக்கும், எங்கேயாவது இடித்திருப்பேன் என்றே நினைத்துக் கொள்கின்றனர். படித்தவர்கள்கூட விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். 

அப்புறம், பயம். இதைப் போய் நான் யார்கிட்ட காட்டுவது என்கிற சங்கோஜம். இதில் கொஞ்சம் வயதான பெண்கள் எப்படி என் பசங்ககிட்ட சொல்வேன் என நினைத்து சொல்லமாட்டார்கள். இப்படி இருக்கக் கூடாது...’’ என்ற டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா, நோய் வந்துவிட்டால் என்ன செய்வது என்பதையும் விவரித்தார். 

‘‘ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தால் அச்சம் வேண்டாம். மருத்துவரை சந்தியுங்கள். நம்மூரில் தரமான சிறந்த நவீன சிகிச்சை முறைகள் உள்ளன.

முதலில் நாங்கள் மேமோகிராம் என்கிற பரிசோதனை செய்கிறோம். பிறகு அல்ட்ரா சவுண்ட், பயாப்ஸி பரிசோதனைகள் செய்து எதனால் அந்தக் கட்டி வளர்கிறது என்பதை கண்டறிவோம். 

அப்புறம் என்ன ஸ்டேஜில் இருக்கிறது என்பதைப் பார்ப்போம். அது வேறு எங்கேயும் உடலில் பரவி இருக்கிறதா என்பதைக் கவனிப்போம். இதன்பிறகு சிகிச்சைகள் தொடங்குேவாம்.
இதில் சிலருக்கு கீமோதெரபி கொடுப்பது போல் இருக்கும். சிலருக்கு முதலிலேயே ஆபரேஷன் பண்ணுகிற மாதிரி வரும். ஆபரேஷன் பண்ணுவதாக இருந்தால் அந்த கட்டியின் அளவு, மார்பகத்தின் அளவு, அது இருக்கும் இடம் ஆகியவற்றை பார்ப்போம். 

அடுத்து வெறும் கட்டியை மட்டும் எடுத்தால் போதுமா அல்லது மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டுமா என்பதையும் சோதிப்போம். ஒருவேளை மார்பகம் முழுக்க எடுப்பதாக இருந்தால் ஒருபக்கம் மார்பகத்துடன் இருக்க வேண்டிய நிலை வரும். 

இதற்கும் தற்போது மார்பக மறுசீரமைப்பு அல்லது மறு உருவாக்கம் முறை வந்துவிட்டது.வயிறு, தொடை, முதுகு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உள்ள சதையை ரத்த ஓட்டத்துடன் எடுத்து வைப்போம். அதில் மார்பகம் போலவே ஒரு வடிவம் வரும். இதனால் அவர்கள் நம்பிக்கையாக வெளியில் செல்லமுடியும்.  

இதற்கெல்லாம் அவர்கள் குடும்பம் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏனெனில், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், உடல் நார்மலாக வருவதற்கும் சில காலம் பிடிக்கும். அதுவரை அவரின் குடும்பம் சப்போர்ட் கொடுக்க வேண்டும்...’’ என வேண்டுகோள் வைக்கிறார் டாக்டர் செல்வி ராதாகிருஷ்ணா.

பேராச்சி கண்ணன்