கேடுகெட்ட கெட்டவனா மம்மூட்டி சாரை நடிக்கச் சொன்னேன்...தயாரிச்சு நடிக்கறேன்னு முன்வந்தார்...
‘களம்காவல்’ வெற்றியை பகிர்ந்து கொள்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் கே ஜோஸ்
வெளியான நான்கே நாட்களில் ரூ.50 கோடியை வசூல் செய்திருக்கிறது ‘களம்காவல்’ மலையாளத் திரைப்படம். செப்பு மொழி பதினெட்டிலும் இப்படம் குறித்தும், குறிப்பாக கதாபாத்திரங்களின் வடிவமைப்பு குறித்தும்தான் பேச்சு, பாராட்டு. ‘‘சார்... கதைப்படி 30க்கும் மேலான பெண்களை பாலியல் இச் சைக்கு உட்படுத்தி அவர்களை தொடர்ந்து கொலை செய்யும் ஒரு சீரியல் கில்லர். அந்தக் கொலைகாரன் நீங்கள்தான். இதற்குப் பின்னணியில் உங்களுக்கு எந்த ஃபிளாஷ்பேக் கதையும் கிடையாது; எந்தப் பரிதாப நோக்கமும் வைக்கப்படாது...’’ இப்படி ஒரு கதையை ஓரிரு படங்களில் நடித்த ஹீரோக்களிடமாவது சொல்லி ஓர் இயக்குநர் சம்மதம் பெற முடியுமா?
ஆனால், மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி இப்படி ஒரு கதையில் நடித்திருக்கிறார்; ஓர் அறிமுக இயக்குநர் அவரை நடிக்க வைத்திருக்கிறார்; இப்படத்தையும் மம்முட்டியே தயாரித்திருக்கிறார்... என்பதுதான் ‘களம்காவல்’ படத்தின் ஆச்சர்யங்கள்.இதே படம் மம்மூட்டியின் திரைப்பட வரலாற்றில் சாதனை வெற்றியாகியிருக்கிறது. எப்படி சாத்தியம்... இதன் பின்னணி என்ன... என்பதையெல்லாம் முழுமையாக, விளக்கமாக பகிர்ந்து கொண்டார் ‘களம்காவல்’ படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜிதின் கே ஜோஸ். இதற்கு முன்பு துல்கர் சல்மான் நடித்த ‘குரூப்’ படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டான்லி தாஸ்..?
யோசிக்காம மம்மூட்டி சார்னு எழுதலாம். ‘களம்காவல்’ படத்துல சார் ஏற்று நடிச்ச கேரக்டர் பெயர், இப்ப நீங்க என்கிட்ட முதல் கேள்வியா கேட்கும் அளவுக்கு பிரபலமாகியிருக்கு. அவரைப் பொறுத்தவரை, ‘எந்தக் கதையானாலும் என்னிடம் சொல். கதாபாத்திரத்தை நான் தேர்வு செய்து கொள்கிறேன்’ என்பதாகத்தான் அவர் கதை கேட்கும் ஸ்டைல் இருக்கும்.
ஆனா, இந்தக் கதை, கதாபாத்திரம் முழுமையாகவே மம்மூட்டி சாருக்காகத்தான் எழுதினேன். நண்பர் தயாரிப்பாளர் ஒருவர் மூலமா அவருடைய சந்திப்பு கிடைச்சது.
என்னுடைய பெஸ்ட் கொடுத்து அவருக்கு கதை சொன்னேன். கதையும் கதாபாத்திர விளக்கமும் மட்டும்தான் சொன்னேன். ஆனா, ‘ஸ்டான்லி தாஸ்’ இப்படித்தான் இருக்கணும் என்கிற மொத்த கேரக்டர் உருவாக்கமும் மம்மூட்டி சாருடைய மெனக்கெடல்தான். இந்தக் கதையை மம்மூட்டி ஒப்புக்கொள்வார் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்ததா..?
இதைவிட சிக்கலான, ரிஸ்க்கான கதாபாத்திரங்கள்ல அவர் நடிச்சிருக்கார். ‘காதல் டூ த கோர்’ல அவர் ஓரினக் காதலர். ‘பிரம்மயுகம்’ல அவர் சைத்தான். இந்த இரண்டு படங்களுமே சமீபத்தில் வெளியாகி ஹிட்டானதுதான். இப்படி அவர் கரியர் முழுக்க... ஆரம்பக் காலம் முதல் பல்வேறு கேரக்டர்ஸ்ல நடிச்சிருக்கார். அதுவும் எந்த நடிகரும் ஏற்று நடிக்கத் தயங்கற கதாபாத்திரங்கள்ல முத்திரை பதிச்சிருக்காரு.
இதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்டான்லி கதாபாத்திரத்துல அவர் நடிச்சது ஆச்சர்யமில்ல. சொல்லப் போனா சார் நடிக்க மறுத்திருந்தாதான் அது ஆச்சர்யம்.அவருக்குள்ள எப்பவும் ஒரு நடிப்பு தாகம் இருந்துகிட்டே இருக்கு. அந்தத் தாகம் நிச்சயம் இந்தக் கதையை செய்ய வைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது.
ஒரு வார்த்தை... ஒரேயொரு வார்த்தை கூட பேசாமல் கதை கேட்டார். கேட்கும்போது அவருக்கு திரைக்கதையில் ஆர்வம் இருப்பதை அவர் கண்கள்ல பார்க்க முடிந்தது. அதேபோல முழுமையா கதை கேட்டுட்டு, ‘நிச்சயம் செய்யலாம் ஜிதின்’னு சொல்லிட்டு அவரே தயாரிக்க முன்வந்தார். எஸ்.ஐ ஜெயகிருஷ்ணனாக விநாயக்..?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி சார் நடிச்ச ‘ஜெயிலர்’ படம் வழியா விநாயக், இந்திய அளவுல ஃபேமஸ். அவரை வில்லனாதான் எல்லாப் படங்கள்லயும் பெரும்பாலும் எல்லாரும் பார்த்திருக்கோம்.இப்படி காலம் காலமாக இருக்கும் சினிமா டெம்ப்ளேட்டை உடைக்கணும்னு நினைச்சேன்.
என் முதல் குறிக்கோளே இதுதான். அதாவது வெள்ளையா இருக்கறவன் அல்லது ரொம்ப ஸ்மார்ட்டா, அழகா இருக்கறவன்தான் ஹீரோ... கொஞ்சம் பார்க்க சுமாராக இருப்பவன், குறிப்பா தோல் நிறம் டஸ்க்கியாக இருந்தா அவன்வில்லன், கெட்டவன்... இந்த டெம்ப்ளேட்டை உடைக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய கதைப்படி வில்லன் பக்கா ஹேண்ட்சம், ஸ்மார்ட். பெண்களை மிகச் சுலபமாக வலையில் வீழ்த்தும் பேர்வழி. அதேசமயம் கொடூரமான கொலைகாரன். ஏன், வெள்ளையாக இருக்கறவர்தான் ஐபிஎஸ் ரேங்க் போலீசா இருக்கணுமா? விநாயக் சார் கேரக்டர் கூட படம் முழுக்க ஒரு சந்தேகம் கொடுக்கற கேரக்டராகவே இருக்கும். பிரமாதமா இதை அவரும்... அந்த லுக்கை மெயின்டெய்ன் செய்தார்.
இந்தக் கதையின் அடுத்த பலம் பெண்கள்... எந்த அடிப்படையில் பெண்களை தேர்வு செய்தீர்கள்?
பொதுவா 35 டூ 45... இந்த வயதிலிருக்கும் பெண்களுக்கு நல்ல குடும்பம், குழந்தைகள் எல்லாம் இருந்தும் ஒரு புரியாத தனிமை உணர்வு உண்டாகும். அதுவே விவாகரத்தானவர், கணவரை இழந்தவர்னா இன்னும் தனிமையின் கொடுமைல இருப்பாங்க. அப்படி இருக்கும் பெண்கள்தான் கொலைகாரனின் டார்கெட். மம்மூட்டி சார் படம் எனில் படத்தில் வரும் அத்தனை பெண்களையும் பிரபலமான நடிகைகளாகவே தேர்ந்தெடுத்து அத்தனை கதாபாத்திரங்களும் கெஸ்ட் ரோல் போல் கொடுத்திருக்க முடியும்.
ஆனா, அது வேண்டாம் என்பதுதான் எங்க நோக்கமே. எல்லோருமே ரேண்டம் பெண்களாக இருக்கணும், நம்ம குடும்பத்து பெண்கள் மாதிரி ஓர் உணர்வு வரணும். அதற்கு நடிகைக்கான உடலமைப்பு, லுக் இருந்தா கதை நமக்கு நெருக்கமாகாது. அதனால்தான் தமிழ், மலையாளம்னு பெண்களை எந்த டெம்ப்ளேட்களும் இல்லாம தேர்வு செய்தோம். என் மனைவி சந்தியா ஜோஸ் அந்தப் பெண்களில் ஒருவரா நடிச்சிருக்காங்க.
கதைக்கான லொகேஷன்களை எப்படித் தேர்வு செய்தீர்கள்?
எனக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி. கேரளா பார்டர்தான். படிச்சு முடிச்சு அசிஸ்டென்ட் இயக்குநராக நிறைய படங்களில் வேலை செய்திருக்கேன். அதற்கிடையில்தான் ‘குரூப்’ படத்திற்கான திரைக்கதை எழுதும் வாய்ப்பு கிடைச்சது. தமிழ்நாடு, கேரளானு மாறி மாறி நிறைய பயணம் செய்திருக்கேன்.
அதனால் அந்த ஏரியா முழுக்கவே ஓரளவு எனக்கு பரிச்சயம். அந்த அடிப்படையில்தான் இந்தக் கதைக்கான லொகேஷன்ஸ் தேர்வு செய்தேன். இரண்டாயிரத்தில் இந்தக் கதை நடக்குது. அப்ப செல்போன் வந்துடுச்சு.
ஆனா, ஜிபிஎஸ் ட்ராக் அவ்வளவு ஸ்ட்ராங்கா இல்லை. சிசிடிவி கேமராக்கள் கூட மெட்ரோ நகரங்கள்ல மட்டும்தான் இருந்துச்சு. கண்டிப்பா படம் பார்க்கும்பொழுது இப்படியான லாஜிக் சந்தேகங்கள் எல்லாமே வரும். அதையெல்லாம் நானும் யோசித்துதான் கதை எழுதினேன். உண்மையாகவே நடந்த ஒரு கதையை இன்ஸ்பிரேஷனா வைச்சுதான் இந்தக் கதையை எழுதினேன்.
எப்படி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கூட இப்படியான கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறார்கள்?
எங்களுடைய மைனஸ்தான் எங்களுக்கு பல நேரங்கள்ல பிளஸ். அதாவது மத்த மொழி சினிமாவில் கேட்ட பட்ஜெட் கிடைக்கும். ஆனா, மலையாள சினிமாவுக்கு இன்னமும் அவ்வளவு பெரிய பட்ஜெட் கிடையாது; கமர்ஷியல் மார்க்கெட்டும் கிடையாது. ஒருவேளை இங்கேயும் அந்த கமர்ஷியல் கட்டுப்பாடு, ஆடியன்ஸ் எதிர்பார்ப்புகள், ஸ்டார்டம் எல்லைகள் எல்லாம் இருந்தா நிச்சயம் இங்கே இருக்கும் ஹீரோக்களும் கதைகளை அதுக்கேற்ப கவனமாதான் தேர்வு செய்தாகணும்.
ஆனா, மலையாள சினிமாவுக்கு அப்படியான கட்டுப்பாடு கிடையாது. இருக்கும் பட்ஜெட்டில் நஷ்டமில்லாமல் ஒரு படம் செய்தாலே போதுமானது. அதுக்கு இப்படியான வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்கள் செய்தாலே ஆடியன்ஸ்கிட்ட சுலபமா நெருங்க முடியும். அதேபோல ஆடியன்ஸ் எதிர்பார்ப்பும் இந்த நடிகர் இப்படிதான் நடிக்கணும், கமர்சியல் டெம்ப்ளேட் எல்லாம் வேணும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. அதுதான் மலையாள சினிமாவின் பலம்.
குறிப்பா ஆரம்ப காலத்தில் இருந்து மம்மூட்டி சார் அவருடைய ரசிகர்களை இப்படி சிக்கலான கதைகள், படங்களாக கொடுத்து தயார் செய்து வைச்சிருக்கார். வித்யாசமான கதை, கதாபாத்திரம்னா மம்மூட்டி சாருக்கு ஈசியா கதை சொல்லலாம்.வழிசல் பேர்வழியா பெருசு, பேட் பாய் லுக், கொலைகாரன்... எந்தப் பரிதாப பின்னணி கதையும் இல்லையே?
உடன் வட்ட வட்டமாக புகை பிடிக்கும் தோரணை, சன் கிளாஸ் இறக்கி பார்க்கும் மயக்கும் ஈவில் பார்வை, கட்டம் போட்ட சட்டை, பின்னால் வழித்து சீவிய ஹேர்ஸ்டைல்... இதையும் சொல்லுங்க!இவையெல்லாமே நானும், மம்மூட்டி சாரும் சேர்ந்து உருவாக்கினதுதான். அவருக்கு அந்தக் கேரக்டர் மேல் அப்படி ஓர் ஆர்வம்.
ஒரு கதாபாத்திரம்... அந்த கதாபாத்திரம் முழுக்க முழுக்க நெகட்டிவ் மைண்ட்செட் கொண்டது. கொலை செய்வதுதான் ஒரே நோக்கம். சீரியல் கில்லர் மேல் எதற்கு அனுதாபம்? பல உயிர்களை கொலை செய்த ஒரு நபர் மேல ஏன் சாஃப்ட் கார்னர் வரணும்? வில்லனா நடிப்பவர் ஒரு பெரிய ஹீரோ என்பதற்காக ஏன் அந்த கேரக்டரை நியாயப்படுத்தணும்? நம் சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு உயிரையும் யாரும் துன்புறுத்தக் கூடாது.
அப்படியிருக்க சீரியல் கில்லரை ஏன் நியாயப்படுத்தணும்னு தோணுச்சு. மம்மூட்டி சாருக்கும் இதே தாட் இருந்தது. அதனால நான் சொன்னதும் அக்சப்ட் செய்தார். வில்லனுக்கு பரிதாபப் பின்னணி கொடுத்து அவன் செயலை ஜஸ்டிஃபை செய்ய விருப்பமில்ல. அடுத்த படம்..?காத்திருக்கேன். இப்ப ‘களம்காவல்’ வெற்றியை அனுபவிச்சுட்டு இருக்கேன். இனிமேல்தான் அடுத்த படம் பத்தி யோசிக்கணும்.
ஷாலினி நியூட்டன்
|