சானிட்டரி நாப்கின் உபயோகித்தால் புற்றுநோய் வருமா?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               கிராமப்புறங்களில் வசிக்கிற பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தமிழக அரசின் அதிரடி அறிவிப்புக்கு அமோக ஆதரவு! அதே நேரத்தில், இப்படியொரு நல்ல சேதியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க விடாமல், பீதியைக் கிளப்பியிருக்கிறது சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பு பற்றி நாம் கேள்விப்படுகிற அதிர்ச்சித் தகவல்கள்...

ஆமாம்! வருடக்கணக்காக சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கிற பெண்களுக்கு அலர்ஜி, புண், அரிப்பு, இன்ஃபெக்ஷனில் ஆரம்பித்து, கர்ப்பவாய் புற்றுநோய் கூட வரலாம் என்பதே அந்த ஷாக் ரிப்போர்ட்!

‘எங்கள் சானிட்டரி நாப்கினை உபயோகித்தால் சந்திர மண்டலத்துக்கே சென்று வரலாம்; இமய மலையில் ஏறி எட்டிப் பார்க்கலாம்’ என்கிற ரீதியில் கவர்ச்சியான விளம்பரங்களைச் செய்கின்றன பல நிறுவனங்களும்... எப்பேர்ப்பட்ட ரத்தப்போக்கையும் உறிஞ்சிக்கொண்டு, பல மணி நேரம் தாக்குப் பிடிப்பதாக உத்தரவாதங்கள் வேறு...

அதீத ரத்தப் போக்கு, அலர்ஜி, புண், தடிப்பு என மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகளுக்காக ஒரு பெண் யாராவது ஒரு டாக்டரை சந்திக்கிறபோது, ‘இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், அந்தப் பெண் வருடக்கணக்கில் உபயோகிக்கிற நாப்கினாக இருக்கலாம்’ என்று சந்தேகம்கூட வருவதில்லை. அந்த அளவுக்கு டாக்டர்களுக்கே விழிப்புணர்வு தேவைப்படுகிற பிரச்னை இது என்கிறார்கள் நிபுணர்கள்.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பலவித கெமிக்கல்களின் விளைவே, மேலே சொன்ன பல பிரச்னைகளுக்கும் அஸ்திவாரம்.

அட... இதற்கே பயந்தால் எப்படி? தரக்குறைவான சில நாப்கின்களில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மெட்டீரியலைக்கூட  சேர்த்து தயாரிப்பதாகவும், அதன் விளைவாக பெண்களுக்கு ரத்தப்போக்கு அதிகரிப்பதாகவும் கூட ஒரு செய்தி!

 இந்தப் பிரச்னை பற்றிப் பேச பல மருத்துவர்களும் தயாராக இல்லாத நிலையில், திருச்சி தேசியக் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறை துணைப்பேராசிரியர் முகமது ஜாபீர், மறைக்கப்படுகிற பல ரகசியங்களையும் வெட்டவெளிச்சமாக்குகிறார்.

‘‘சராசரியா ஒரு பெண் தன்னோட 15வது வயசுல பருவமடையறாங்கன்னு வச்சுப்போம். 40 வயசுல மெனோபாஸ்னு வச்சுக்கிட்டா, அந்தப் பெண் தன்னோட வாழ்க்கைல குறைந்தபட்சம் 25 வருஷங்கள்... 300 முறைகள்... 900 நாள்கள்... ரத்தப் போக்கை சந்திப்பாங்க. பெண் உடம்பின் ரொம்ப சென்சிட்டிவான பகுதியில அத்தனை வருடங்களா உபயோகிக்கப்படற நாப்கின்கள், அலர்ஜி, அரிப்பு, புண், இன் ஃபெக்ஷன் உள்பட ஏகப்பட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகுது. அதுக்குக் காரணம் நாப்கின் தயாரிப்புல சேர்க்கப்படற சில கெமிக்கல்கள்...

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineமுதல் குற்றவாளின்னு பார்த்தா டையாக்சின். புற்றுநோய் உண்டாக்கற அதை, நாப்கின் தயாரிப்புல நேரடியா உபயோகிக்கிறதில்லை. பல தயாரிப்பாளர்களும் ரீசைக்கிள் செய்யப்பட்ட பேப்பர் மற்றும் பொருள்களைக் கொண்டுதான் நாப்கின் தயாரிக்கிறாங்க. அப்படித் தயாரிக்கப்படற நாப்கின்கள், பழுப்பு அல்லது அழுக்கு நிறத்துல இருக்கும். நம்ம ஆட்களுக்கு சாப்பிடற அரிசிலேருந்து சகலமும் வெள்ளை வெளேர்னு இருந்தாதான் திருப்தி. நாப்கினும் அப்படித்தான். அந்த பழுப்பு நிறத்தை மாத்தி, சலவை செய்தது போன்ற பளீர் வெள்ளை நிறத்தை வரவைக்கறதுக்காக, தயாரிப்பாளர்கள் ஒருவிதமான பிளீச் பயன்படுத்தறாங்க. பிளீச் செய்த பிறகு நாப்கின்களை மறுபடி அலச முடியாது. அப்படியே அது பெண்களோட உபயோகத்துக்கு வந்துடும். நீக்கப்படாத அந்த பிளீச்லேருந்து ‘டயாக்சின்’ கொஞ்சம் கொஞ்சமா வெளியேறிக்கிட்டே இருக்கும். மென்மையான, நாசுக்கான உடல் திசுக்கள்ல பட்டு பட்டு, அந்த இடத்துல அரிப்பு, அலர்ஜினு ஆரம்பிக்கும். வருஷக்கணக்குல இது தொடரும்போது, புற்றுநோயா மாறும் அபாயம் ரொம்ப அதிகம்.

ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கறதா உத்தரவாதம் தரும் பல கம்பெனிகளோட நாப்கின்கள்லயும் பிரதான பொருள் செல்லுலோஸ் ஜெல். இது இயற்கையா பெறப்படற ஒன்றுதான்.

ஆனாலும், அதை மிக நுண்ணிய இழைகளா, துகள்களா மாத்தறதுக்காக அதிகக் காரத்தன்மை கொண்ட கெமிக்கல்களை உபயோகி க்கிறாங்க. அப்படிப் பல கட்டங்களைக் கடக்கிறப்ப, அதோட நல்ல தன்மைகள் மறைஞ்சு, கெமிக்கல்களோட ஆதிக்கம் தூக்கலாகி, பிரச்னைகளுக்கு விதை போடுது.

மூணாவது குற்றவாளி, ரேயான். உலர்வான உணர்வைத் தர்றதா சொல்லப்படற நாப்கின்கள்ல இதுதான் சேர்க்கப்படுது. துணிகளை நெய்யப் பயன்படுத்தற ரேயானும், பலமுறை பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட செயற்கைப்பொருள் மாதிரியே மாத்தப்படுது. சருமத்துக்கு சுவாசிக்க வழியில்லாமப் போறதோட, இன்ஃபெக்ஷனுக்கும் இது வழி வகுக்குது’’ என்கிற முகமது ஜாபீர், நாப்கின் உபயோகிப்பவர்களுக்கு சில அட்வைஸ்களைச் சொல்கிறார்.

‘‘தான் உபயோகிக்கிற பிராண்ட் என்ன, அந்த நாப்கின்ல என்னல்லாம் சேர்த்து செய்யப்பட்டிருக்குனு ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்கணும். குறிப்பிட்ட அந்த பிராண்ட் உபயோகிக்க ஆரம்பிச்ச பிறகு தனக்கு ஏதாவது பிரச்னைகள் வந்திருக்கான்னு பார்க்கணும். சிறுநீரகத் தொற்றாகவோ, அரிப்பு, அலர்ஜியாகவோ இருந்தாலும் சாதாரணம் என அலட்சியப்படுத்த வேண்டாம்.

உடனடியா அந்த பிராண்டை நிறுத்திட்டு, விலை அதிகமானாலும் தரமான தயாரிப்பை உபயோகிக்கணும்.

ரத்தம் ரொம்ப ரொம்ப சத்தான ஒரு பொருள். அது ரொம்ப நேரம் தேக்கி வைக்கப்படறப்ப, பாக்டீரியாக்களுக்கு கொண்டாட்டம். சீக்கிரமே பெருகி, இன்ஃபெக்ஷனை தரும். அதனால 3 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாத்திடணும். கொஞ்சம் அசவுகரியமானதுதான்... ஆனாலும் வீட்லயே சுத்தமான, சுகாதாரமான முறைல தயாரிக்கிற துணி நாப்கின்கள் ரொம்பவே பெஸ்ட்!’’
ஆர்.வைதேகி