படிச்சவனுக்கு ஒரு வேலை... படிக்காதவனுக்கு பார்க்கிறதெல்லாம் வேலை...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

                   சசிகுமாருடன் கைகோர்த்து ‘நாடோடிகளி’ல் நம்மைப் பரவசப்படுத்திய இயக்குநர் சமுத்திரக்கனி, இரண்டரை வருடங்களுக்குப் பின் அதே நட்புக்கரம் பற்றியபடி ‘போராளி’யாகத் திரும்பி வருகிறார். இந்த முறையும் அவரது இயக்க முயற்சிக்குத் தோள் கொடுத்திருப்பது அதே சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ்தான். ‘போராளி’ மேற்கொள்ளப்போகும் புரட்சி என்ன..?

‘‘இந்தக் கேள்வியை முன்வச்சு முழுக்க புரட்சிப் படமா இதை நினைக்காதீங்க. நாம் இருக்கிற சமுதாயத்துல ஆழமா கவனிக்கப்படாத பிரச்னையை படம் சொல்லுதுன்னாலும், ஆரம்பிச்சதிலிருந்து போராட்டமாகவே போற திரைக்கதையில்லை நான் தொட்டிருக்கிறது. ‘நாடோடிகள்’ல எப்படி வாய்விட்டுச் சிரிச்சு மனம் தொட்டு ரசிச்சீங்களோ, அப்படியே இரண்டே கால் மணிநேரம் சிரிச்சுக்கிட்டே குடும்பத்தோட படம் பார்க்கலாம். கடைசி பதினைந்து நிமிஷத்தை மட்டும் எடுத்துக்கிட்டு தெளிவா, அழுத்தமா ஒரு பிரச்னையைப் பேசியிருக்கேன். அது இளைஞர்களுக்குப் பெரிய அளவில தன்னம்பிக்கை தர்ற விஷயமா இருக்கும்...’’ என்ற சமுத்திரக்கனி தொடர்ந்தார்.

‘‘மனிதம் மட்டும்தான் போராளிகளுக்கான களம்னு இல்லை. ஒவ்வொரு உயிருமே தன் வாழ்க்கையைத் தக்க வச்சுக்க போராளியாதான் இருக்கு. இங்கே நீங்களும் நானும்கூட போராளிதான். இதுல நாலு திசைகள்ல இருந்து நாலு பிரச்னைகளோட வர்ற நாலு பேர் சந்திக்கிற மையப் புள்ளியைப் பிடிச்சுக் கதை சொல்லியிருக்கேன். படிச்சவனுக்கு ஒரு வேலை, படிக்காதவனுக்குப் பார்க்கிறதெல்லாம் வேலைன்னு நகரம் வந்து சேர்ற அவங்க, கிடைச்ச வேலைல பொருத்திக்கிட்டு முன்னேறப் போராடுறாங்க.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazineசசிகுமார், அல்லரி நரேஷ், ‘சுப்ரமணியபுரம்’ ஸ்வாதி, அறிமுக நாயகி நிவேதாதான் படத்தோட ஹீரோ, ஹீரோயின்களான்னு கேட்டா இல்லைன்னு சொல்வேன். இப்படிப் படத்துல பதினைந்துக்கும் அதிகமான கேரக்டர்கள் வர்றாங்க. ஒவ்வொரு கேரக்டருமே முக்கியமானதுதான். ஆளுக்கு ஒரு ஏரியாவில பொளந்து கட்டியிருக்காங்க.

கஞ்சா கருப்போட நடிப்பு தனியா கவனிக்கப்படும்னா, இன்னொரு பக்கம் சூரி பின்னியிருப்பார். இருபது நிமிஷமே வர்ற ‘தென்மேற்குப் பருவக்காற்று’ வசுந்தரா கலக்கியிருப்பாங்க. கேரள நாடக இயக்குநர்கள் அனில், சஞ்சித்னு ரெண்டு பேரைப் புதுசா அறிமுகப்படுத்தியிருக்கேன். படத்துல அவங்க பத்து நிமிஷம்தான் வருவாங்க. ஆனா படம் பார்க்கிற அன்னைக்கு இரவு உங்களைத் தூங்க விடமாட்டாங்க. இப்படியே படவா கோபி, சான்ட்ரா, பேராசிரியர் ஞானசம்பந்தம், நமோ நாராயணன், ஜெயப்பிரகாஷ், ஞானவேல்னு எல்லாருமே ஒரு ரிலே ரேஸா ஓடி மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்தியிருக்காங்க. இவங்களுக்கான மையப்புள்ளியா சசிகுமார் இருப்பார்.

அவர் தயாரிப்பாளரா ஆனது, நானே தயாரிப்பாளர் ஆனது போலத்தான். நான் என்ன கேட்டாலும் கிடைக்கும். அதேபோல் அவர் ஹீரோ வானதிலயும் பலன், நான் நினைச்சது போலவே வந்து நிப்பார். அவரைத்தவிர வேறு எந்த ஹீரோ, எனக்காக ஒண்ணரை வருஷம் முடி வளர்த்துக்கிட்டுக் காத்திருப்பார்..?

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு, எடிட்டர் ஏ.எல்.ரமேஷ், ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், ஆர்ட் டைரக்டர் ஆர்.கே.நாகராஜோட சேர்த்து என்னோட உழைப்பு மூணு பட உழைப்புக்குச் சமம். என் படங்கள்லயே சிறப்பான படமா நான் இதைச் சொல்ல முடியும். திரைக்கதையில காட்டியிருக்க வித்தியாசத்துல, என்ன கதை சொல்லியிருக்கேன்னே கடைசி பத்து நிமிஷத்திலதான் தெரிய வரும். அது புரியும்போது படம் முடிவுக் கட்டத்துக்கு வந்துடும். இதுவரை வராத புதிய முயற்சின்னு இதைச் சொல்லமுடியும். படம் பார்த்துட்டு வர்றவங்க வெளியிலேயும், நாங்க யாரைப் பத்திக் கதை சொன்னோமோ அவங்களைப் பார்க்க முடியும். அங்கே சசி குமாரும், நானும் அடையாளம் தெரிவோம்..!’’ -போராளி சமுத்திரக்கனி
 வேணுஜி