சாலமன் பாப்பையாவும் ரியாலிட்டி ஷோக்களும்Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

                      இசைஞானி இளையராஜாவை சந்திக்க அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தேன்...

தொலைக்காட்சியில் ஒரு பெண் குழந்தை அழுது கொண்டிருந்தாள். பின்னணியில் சோக இசை ஒலித்தது. சிலருடைய கண்கள் அவளைப் பரிதாபமாகப் பார்த்தன. இன்னும் சில கண்கள் தாமும் சேர்ந்து அவளுடன் அழுதன. சோர்ந்து போன குழந்தையைத் தனது மார்பில் சாய்த்துக்கொண்டு ஒரு பெண் பேசினாள்...

‘‘கவலப்படாதம்மா. உனக்குத் திறமையெல்லாம் இருக்கு. ஆனா, அதிர்ஷ்டம் இல்ல. ஜெயிக்கறதுக்கு திறமை மட்டும் பத்தாது... ‘லக்’கும் வேணுமில்லையா?’’

ஒரு ரியாலிட்டி ஷோவில் பாட வந்த குழந்தையை ‘எலிமினேட்’ செய்யும் காட்சிப் பதிவுகள்தாம் அவை. அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டமெல்லாம் குழந்தைக்கு என்ன தெரியும்? குழந்தையின் சோகம் என்னையும் தொற்றிக் கொண்டது. மனவருத்தத்துடனேயே இளையராஜாவை பார்க்கப் போனேன்.

மேற்கத்திய மக்களுக்கு தொலைக்காட்சிகளின் அன்றாட நிகழ்ச்சிகளும் மெகா சீரியல்களும் அலுத்துச் சலித்து, ‘இதற்கு மேல் பார்க்க ஒன்றுமில்லை’ என்கிற மனநிலை வந்தபோது, அவர்கள் தேர்ந்தெடுத்த மாற்று ஏற்பாடுதான் ‘ரியாலிட்டி ஷோ’. கற்பனைக் கதை மனிதர்களின் காதல், காமம், கோபம், சண்டை, சந்தோஷம் எல்லாம் பார்த்து சோர்ந்து போன பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி, அவர்களையும் பங்கேற்க வைக்க ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவிலும் கடந்த ஐந்தாண்டு காலமாக இவை சக்கைப் போடு போடுகின்றன. ஒரு நடனக்கலைஞரையோ, பாடகரையோ தேர்ந்தெடுப்பது அறிவுரீதியான போட்டி என்கிற பண்பாட்டு நம்பிக்கையோடு ரசித்துப் பார்த்தவர்கள் நாம். ஆனால் ‘ரியாலிட்டி ஷோ’, அறிவையும் திறமையையும் கடந்து வேறு ஏதோ ஒன்றை முன்வைத்து போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது.

லண்டனில் ஒரு தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி மீது வேறு ஒரு போட்டியாளர் இனவெறுப்பைக் காட்ட, ஷில்பா ஓவென அழுததும் பிறகு பரிதாபம் மிளிர அவர் வென்றதும் எல்லோருக்கும் தெரியும்.

சல்மான் கான் நடத்தும் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோதான் இப்போது வட இந்தியர்களை தொலைக்காட்சிக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. செய்தித்தாள், தொலைபேசி, தொலைக்காட்சி எந்தத் தொடர்புமில்லாத ஓர் அறையில் மூன்று மாதம் ஓரளவு பெயர் தெரிந்த பிரபலங்களை வசிக்க வைத்து அவர்களின் அன்றாட வாழ்க்கையை வேடிக்கை காட்டுவதுதான் அந்த நிகழ்ச்சி.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine‘கேண்டிட் கேமரா’ விளையாட்டுகளும் இப்போது பிரபலமாகி இருக்கின்றன. ஒளிந்திருந்து பார்த்து, மனிதர்களின் உணர்ச்சிகளை, செயல்பாடுகளை, அச்சத்தை, வெகுளித்தனத்தைக் காசாக்குகிறார்கள். குழந்தைகளை வைத்து, ‘அம்மா பிடிக்குமா’, ‘அப்பா பிடிக்குமா’ என்று ‘ஷோ’ நடத்துகிறார்கள். நான் என் அம்மாவை நேசிக்கிறேன்; என் நண்பன் அவனது அம்மாவை நேசிக்கிறான். இதில் எது சிறந்த நேசிப்பு என்று பரிசு கொடுப்பது எனக்கு வினோதமாக இருக்கிறது.

யார் சிறந்த தாய்?

யார் சிறந்த குழந்தை?

இரண்டுமே பிரித்துப் பார்க்க முடியாத உறவின் ஒரு நிலைதானே! இதில் என்ன விளையாட்டு இருக்கிறது?

இங்கு பெரும்பாலான மக்கள், தங்கள் குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்கவும் பாட வைக்கவும் ஆசைப்பட்டு, அந்த ஆசைகளைக் குழந்தைகள் மீது திணித்துத் தூக்கிச் சுமக்கிறார்கள். ஆடவும் பாடவுமான பொழுதுபோக்குகள் இன்று போட்டிகளாகிவிட்டன. குழந்தைகள் பந்தயக் கார்களாகவும் பந்தயக்குதிரைகளாகவும் ஆடிப்பாடி மூச்சிரைக்கிறார்கள்.
இதற்காக குழந்தைகளைத் தயார் செய்வதற்காகவே சில பாடகர்களும் நடன இயக்குநர்களும் பயிற்சி கொடுக்கிறார்கள். வகுப்பு நடத்துகிறார்கள். கதை, வசனம், பாடல் எழுதுவதற்குக்கூட இங்கே வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பிள்ளையார் சதுர்த்தியின் பிள்ளையார் விற்பனை போல கலைஞர்களை அச்சில் ஊற்றி உருவாக்கி விற்க முடியும் என நினைக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார்கள். அந்த வயதுக்குரிய இயல்பைக் கடந்து தங்களை வெளிக்காட்டி வெற்றிபெறத் துடிக்கிறார்கள். 6 மாதம் வரை நடக்கும் இந்த ஷோவில் தொடர்ந்து பாடி முதலிடத்துக்கு வருகிறவருக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால், இதையே தனது வாழ்க்கையாக நினைத்துப் போராடுகிற நிறைய பேரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கேரளாவில் ஒரு தொலைக்காட்சியில் பல வருடங்களாக நடக்கும் ரியாலிட்டி ஷோவில் முதலிடத்துக்கு வந்த யாரும் இதுவரை சினிமாவில் பிரபலமானதில்லை என்கிறார்கள். மெல்லிசை மேடைகளிலேயே காலத்தைக் கழிக்க வேண்டியதுதான்.

மேலைநாடுகளில் தோற்றவர்களும் ஜெயித்தவர்களும் கொஞ்ச நேரத்தில் சகஜமாகி அடுத்த வேலைக்குப் போய்விடுகிறார்கள். தனித்து இயங்கும் ஆளுமை அந்த மனநிலைக்கு அவர்களைத் தயார்படுத்திவிடுகிறது. குடும்பத்தை ஆதாரமாக வைத்துப் பின்னப்பட்டது நமது பண்பாடு. வெற்றியும் தோல்வியும் ஒருவனை மட்டும் பாதிப்பதல்ல; அவனது குடும்பத்தையே பாதிக்கிறது. தோல்வியுற்ற குழந்தைகள் மனநிலை பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளின் ரியாலிட்டி ஷோக்களில் நாம் தொலைந்து போனாலும், நம்மைக் கண்டுபிடித்து வழிநடத்துகிற ஒரு ரியாலிட்டி ஷோ நம்மிடம் தொன்று தொட்டு உண்டு. அதுதான் நமது பட்டிமன்றம். இரண்டு பக்கமும் இருவேறு தலைப்புகளில் எதிரும் புதிருமாக எட்டுப் பேர் பேசினாலும் நல்ல கருத்துகள் நம்மை வந்து அடைந்துவிடுகின்றன.
இன்று தமிழில் நல்ல ரியாலிட்டி ஷோ ஒன்றை கலகலப்பாக நடத்துகிறவர் யாரென நினைக்கிறபோது, எனக்கு முன்னால் வெள்ளைச் சிரிப்புடன் ஒரு கறுப்புத் தமிழர் நிற்கிறார். அவர் சாலமன் பாப்பையா.

ஒரு கோப்பை ஹைக்கூ

ஜப்பானில் தேனீர் அருந்தும் சடங்கு தியானத்துக்கு இணையானதாக கையாளப்படுகிறது. பர பரப்பான வாழ்க்கைக்கு இடைவேளை அளித்து, அமைதியான சூழ்நிலையில் ஜப்பானியர் ஒன்று கலந்து இந்த தேனீர் சடங்கை நிகழ்த்துவார்கள். இந்தத் தேனீர் விருந்து பற்றி லோடுங் என்ற கவிஞர் பாடுகிறார்.

முதல் கோப்பை
என் தொண்டையையும்
    உதடுகளையும்
நனைக்கிறது
இரண்டாவது கோப்பை
என் தனிமையைக் கலைக்கிறது
மூன்றாவது கோப்பை
என் ஆழ்மனதைத் தேடுகிறது’

ஏகாதசி ‘ஹைக்கூ தோப்பு’ என்று ஒரு தொகுதி கொண்டு வந்திருக்கிறார். அதில் தேனீரையே ஒரு ஹைக்கூவாக பார்த்த அழகு எனக்குப் பிடிக்கிறது.

குளிர்கால ரயில் பயணம்
ஒரு ஹைக்கூவின் விலை
    ஐந்து ரூபாய்
தேனீர்
ஏகாதசி விவசாய வாழ்க்கையிலிருந்து எழுதியிருக்கும் ஹைக்கூக்கள் பசியும் பசுமையும் கலந்து என்னவோ செய்கின்றன.

சும்மா கிடக்கும் மரக்கால்
மண் நிரப்பி
செடிவளர்க்கிறாள் மகள்
நடக்கிறது
விவசாயம்
முளைப்பாரியில் மட்டும்
தேனி ஈஸ்வரின் கேமராவும், ஏகாதசியின் பேனாவும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை.
நூலாக்கம்: பாரதி புத்தகாலயம், 43, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை&18. தொலைபேசி: 24332924.
(சலசலக்கும்)
பழநிபாரதி