திருப்பு முனை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

              வெற்றியின் பாதையில் தங்களை திருப்பிவிட்ட தருணங்களை, ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர்
கே.கதிர்
திரைப்பட கலை இயக்குனர்

‘‘கலைகள்தான் வரலாற்றை உயிர்ப்பிக்கின்றன. ஓவியம், சிற்பம், இலக்கியம் என அனைத்து கலைகளிலும் நம் முன்னோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நவீனகால வாழ்வில் சிலைகளைப் போல இறுகி இயந்திரகதியில் ஓடுகிறார்கள் நம் பிள்ளைகள். ஆனால், நம் முன்னோர்கள் கல்லில் செதுக்கிய சிற்பங்களில்கூட உயிர்ப்பும் ரசனையும் மிளிர்கிறது. காலத்தை ஒரு கணம் நிறுத்துகிற ஆற்றல் கலைகளுக்குத்தான் உண்டு’’

& வார்த்தைகளுக்கும் வண்ணம் தந்து வரலாறு பேசுகிறார் கலை இயக்குனர் கே.கதிர். ‘சாமி’, ‘திருமலை’, ‘போக்கிரி’, ‘சிங்கம்’ என சூர்யா, விஜய், விக்ரம் போன்ற முன்னணி நாயகர்களின் படங்களிலும் கலை ஆளுமை செலுத்தியவர். இயக்குனர் ஹரியுடன் ‘சாமி’யில் தொடங்கிய வெற்றிக் கூட்டணியை இன்னும் தொடர்கிறார். இன்னொரு பக்கம் ‘அழகிய தீயே’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’ என அழகியலோடு மெல்லிய உணர்வு தொடும் இயக்குனர் ராதாமோகனின் அத்தனை படங்களுக்கும் கலை இயக்கம் செய்தவர். தொடங்கிய இடத்திற்கும், எட்டித் தொட்டிருக்கிற வெற்றிக் கோட்டிற்கும் இடையில் மூச்சு விடாமல் இன்றும் தொடர்கிறது முணுமுணுப்பு... ‘கபடி... கபடி... கபடி...’

‘‘சென்னைக்கு மிக அருகில் இருந்தும், வெகு தொலைவில் வாழும் மக்களின் பிரதிநிதி நான். ஆவடியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கும் வெங்கல், சில பணக்காரர்களும் நிறைய ஏழைகளும் உள்ள அழகான கிராமம். மூட்டை தூக்குதல், கூலி வேலை செய்தல், துறைமுகத்தில் சரக்கு இறக்குதல் போன்ற உடல் உழைப்பு வேலைகளைச் செய்ய பட்டணம் வருவதுதான் எங்கள் ஊர் மக்களுக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு. மண் சுவரும் கூரையுமாக உருவான வீட்டில் நெல், கம்பு, கேழ்வரகு, அடுப்புக்கு விறகு எல்லாம் வைத்தது போக மிச்சம் இருக்கிற இடத்தில் வாழ்க்கை. இரண்டு பெண் பிள்ளைகள்; கடைசி பையனாக நான் பிறந்தேன். நினைவு தெரிகிற வயதில் அப்பா திடீரென இறந்துவிட, அம்மா தனி மனுஷியானார். மூன்று பிள்ளைகளை கரை சேர்க்கிற பொறுப்பும், வெறியும் அவரை வாழ்க்கை முழுக்க நிற்க விடாமல் விரட்டியது. படிப்பறிவு இல்லாத ஏழைத் தாய் குழந்தைகளைக் காப்பாற்ற எப்படி போராடுவாள் என்பதை தினம் தினம் பார்த்து வளர்ந்தேன். விவசாயக் கூலி வேலைக்குச் சென்று அவர் முந்தானையில் முடிந்து வைத்த கசங்கிய சில ரூபாய் நோட்டுகளில் எங்கள் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் என மொத்த வாழ்வாதாரமும் அடங்கி இருக்கும்.

லோகநாதன் என்கிற ஆசிரியர், மாணவர்கள் புது நோட்டு வாங்கினால் அழகான கையெழுத்தில் பெயர், வகுப்பு, செக்ஷன் எழுதித் தருவார். அதைப் பார்த்து நானும் முயற்சி செய்ய, அந்தக் கலை கைவந்தது. சுந்தரம் என்கிற ஆசிரியர் திடீரென்று வகுப்பிற்கு ஒரு சோப்பு எடுத்து வருவார். ஊசியால் செதுக்கிக் கொண்டே வருவார். செவ்வக வடிவில் இருந்த சோப்பிலிருந்து அழகான பிள்ளையார் அவதரித்திருப்பார். மேஜிக் போல சின்ன வயதில் என்னை இது கவர்ந்தது. கோடுகளின் மேல் உருவங்களை வரைவதில் ஆர்வம் பிறந்தது.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஅணிந்திருக்கும் பழைய டவுசருக்குக் கீழே இருக்கும் பகுதியிலிருந்து பாதங்கள் வரை பால்பாயின்ட் பேனாவால் காக்கா, குருவிகளை வரைந்து தள்ளுவேன். உடம்பில் இடம் இல்லாமல் டவுசரிலும் வரைய ஆரம்பித்த என் ஆர்வத்திற்கு அடிதான் பரிசு. வரைவதற்கான நோட்டு வாங்கவோ, சார்ட் வாங்கவோ பணம் இல்லை. கிடைக்கிற இடங்களில் எல்லாம் வரைய ஆரம்பித்தேன். என் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளும் ஆசிரியர்கள் கிடைத்தது வரம். அறிவியல் பாடத்தில், ‘படம் வரைந்து பாகம் குறிக்கும்’ கேள்வி வந்தால் லட்டு லட்டாக மதிப்பெண் அள்ளுவேன். படங்கள் மூலமாகத்தான் கணக்கும் என் மண்டையில் ஏறியது. கடைசிவரை ஏறாத ஒரே பாடம் ஆங்கிலம்.

மற்ற பாடங்களில் சுமாரான மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் ஃபெயிலும் வாங்குகிற மாணவன் சீக்கிரம் வேலைக்குப் போவது தவிர்க்க முடியாது. ஆண் துணை இல்லாத வீட்டில் படிப்பு வராத பையனை வேலைக்கு அனுப்ப அத்தனை காரணங்கள் இருந்தும், என்னைப் படிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார் அம்மா. நான் ஏழாவது படிக்கும்போது, என் ஓவியத்தைப் பாராட்டி எனக்கு ஒரு நட்ராஜ் பென்சில் பரிசளித்தார் மனோகர் வாத்தியார். இப்போது நினைத்தாலும் பெருமை கொள்ளும் நிகழ்வு அது. வீட்டுப்பாடங்கள் எழுதினால் பென்சில் தீர்ந்து போகும் என்று, அந்தப் பென்சிலை படம் வரைவதற்காக மட்டுமே பயன்படுத்தினேன். களிமண்ணில் ரேடியோ செய்வது, வண்டிச் சக்கரம் செய்வது என்று என் பால்யம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. வறுமையில் எனக்குக் கிடைத்த சுதந்திரம், ஊக்கம், விரும்பியதைச் செய்யும் வாய்ப்பு எல்லாம், பல்வேறு வசதிகளோடு படிக்கும் என் பிள்ளைகளுக்குக் கிடைக்கவில்லை.

பூசணிக்காய்களில் திருஷ்டி பொம்மை வரைந்து கொடுத்தபோது அம்மாவும் என் திறமையை அங்கீகரித்தார். சொந்தபந்தத்தில் யார் திருஷ்டி பொம்மை ரெடி செய்தாலும், ‘எம் புள்ள முருகன் ஜோரா பொம்மை போடுவான்’ என்று பூசணியோடு அம்மா வந்து நிற்பார். நான் சினிமாவில் கலை இயக்குனரான பிறகும் அம்மாவிற்கு என் ஓவியங்கள் ‘பொம்மைகளாகவே’ தெரியும். ‘‘பொம்மை போடுறதே முழுநேரப் பொழப்பாடா?’’ என்பார்.

எங்கள் ஊரில் கோநீலன் என்கிற உடன்பிறவாத அண்ணன் கிடைத்தார். ஊரின் மீது பற்றும், நாங்கள் எல்லாம் படிக்க வேண்டும் என்பதில் அக்கறையும் உள்ள நல்ல மனிதர். கூலி வேலை செய்யவே வாய்ப்புள்ள கிராமத்தில், படித்து மத்திய அரசு பணிக்குப் போனவர் என்கிற சிறப்பை விட, தான் மட்டும் கரையேறாமல் தன் ஊர் பிள்ளைகளும் கரை சேர வேண்டும் என்று நினைத்த பெருந்தன்மையே அவரின் அடையாளம். முற்போக்கான கருத்துகளை எங்களுக்குத் தந்தவர். புத்தர், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற பெயர்களை அறிமுகம் செய்தவர். முருகன் என்பது கடவுள் பெயர் என்பதால் என் பெயரை ‘கதிர்’ என்று தமிழ்ப்படுத்தினார். அவர் இல்லாமல் போயிருந்தால் என் வாழ்வில் நிகழ வேண்டிய திருப்பம் நிகழாமலேயே போயிருக்கும். பேருந்தில் போகும்போது, ‘அரசு கவின்கலைக் கல்லூரி’ என்ற பலகையைப் பார்த்து இறங்கி, அதன் விவரங்களை அறிந்து, ‘‘தம்பி... நீ அங்கே போய் படிடா’’ என்று வழிகாட்டினார்.

இரண்டு நாள் மனிதர்களை உட்கார வைத்து வரைவதும், ஒரு நாள் களிமண்ணில் உருவங்களைச் செய்வதும் தான் கல்லூரியில் சேர்வதற்கான தேர்வு. ஊரில் போகிற வருகிறவர்களை எல்லாம் உட்கார வைத்து வரைந்து தள்ளினேன். களிமண்ணில் ரேடியோ செய்த சிறுவயது அனுபவமும் கைகொடுக்க, சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. 20 ரூபாய் கட்டணத்தை மொத்தமாகக் கொடுக்க முடியவில்லை. கோநீலன்தான் தந்தார். மாணவர்கள் காரில் வந்து இறங்குவதை அங்குதான் முதன்முதலில் பார்த்தேன்.

பேன்ட் & சட்டை அணிந்த நவநாகரிகப் பெண்களை நேரில் பார்த்ததும் அங்குதான். போடும் உடை, செருப்பு, தோடு, வளையல், பொட்டு என அனைத்தையும் ஒரே கலரில் மேட்ச்சிங்காக போடுவார்கள் என்பதெல்லாம் எனக்கு ஆச்சர்யம். ஒரு மாணவன் தன்னுடைய நாய்க்குட்டியைப் பிரிய முடியாமல் வகுப்பிற்குக் கூட்டிவந்தான். முதன்முதலில் மனதில் பயமும், தாழ்வு மனப்பான்மையும் குடிகொண்டன.

தமிழக ஓவியர் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் தகுதியுள்ள ஓவியர் சந்துரு எங்களுக்குப் பேராசிரியராக இருந்தார். என்னைப் போன்ற கிராமத்து மாணவர்களின் தயக்கம் உடைத்து, தகுதி வளர்த்து, வழிகாட்டியவர் அவர். கலையையும், வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிற அறிவுக் கண்ணைத் திறந்தவர். மற்றவர்கள் ஐந்து நாட்கள் வரைகிற ஓவியத்தை, நான் இரண்டு நாளில் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். நான் கற்ற கலை என் வறுமையைப் போக்கியது. படித்துக் கொண்டிருக்கும்போதே நிறைய வாய்ப்புகள் வந்தன. நண்பர்கள் பலர் அரசாங்க வேலைகளுக்கும், விளம்பர ஏஜென்சிகளுக்கும் சென்றுவிட்டனர். எனக்கு பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்பு வந்தது. தினம் ஒரே வேலையைச் செய்வதில் என் மனம் ஒட்டாமலேயே இருந்தது. தினம் தினம் புதிய வேலைகளைச் செய்ய வேண்டும். புத்தம் புது முயற்சிகளில் மூழ்கித் தொலைந்து போக வேண்டும். ‘எது வேண்டாம்’ என்று தெரிந்த எனக்கு, ‘எது வேண்டும்’ என்று சொல்லத் தெரியவில்லை.

பேராசிரியர் சந்துரு முன்னால் போய் நின்றேன். ‘‘உன் ஸ்பீடுக்கு சினிமாதான்டா சரியா வரும்’’ என்றார். சினிமாவில் நான் என்ன செய்வது? ஓவியத்திற்கும் சினிமாவிற்கும் என்ன சம்பந்தம்? குழப்பங்கள் கேள்விகளாயின. ‘‘கலை இயக்குனரா நீ நல்லா வருவே’’ என்று குழப்பம் தீர்த்தார் சந்துரு. ‘நாயகன்’ படம் வெற்றிகரமாக ஓடி, கலை இயக்கத்திற்காக தோட்டாதரணி தேசிய விருது வாங்கி இருந்தார். அவரிடம் உதவியாளனாகச் சேரவேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்தேன். அந்த முயற்சியில் முதல் தோல்வி, அவரைப் பார்க்க உள்ளே விட மறுத்துவிட்டார்கள்.
(திருப்பங்கள் தொடரும்...)

த.செ.ஞானவேல்