முல்லைப் பெரியாறு! விவகாரப் படமும் விகார விளக்கமும்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

               கூத்துக்காலம் தொட்டே கலைகள் பிரசாரக் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட பிரசாரங்கள் நல்ல விளைவுகளைத் தரும் என்றால், இருகரம் தட்டி வரவேற்கலாம். அதுவே மதம் சார்ந்தோ, மாநிலம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ பிரிவினைகளுக்கும் பாதிப்புக்கும் வழி வகுக்குமானால் அதை எதிர்ப்பது சமூகக் கடமை ஆகிறது. அப்படி ஒரு பிரசாரப் படமாக அமைந்திருக்கிறது பிஸ் டிவி நெட்வொர்க் சார்பில் சோஹன் ராய் இயக்கியிருக்கும் ‘டேம் 999’ ஆங்கிலத் திரைப்படம்.

அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணை கட்டப்படுவதாகவும், அது உடைந்து பல லட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும் ஒரு கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் சொல்லும் செய்தி... ‘பழமையான அணைகள் மக்கள் உயிரைப் பறிக்கும் பேரிடருக்கான சாத்தியம் மிக்கவை’ என்பதுதான். கடந்த வியாழனன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியாகியிருக்கிறது படம். மறுநாள் இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழிமாற்றப்பட்டு வெளியாகவிருந்த நிலையில் இதற்குத் தடை விதிக்க தமிழகக் கட்சிகளும், கட்சித்தலைவர்களும் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து ‘டேம் 999’ தமிழகத்தில் திரையிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

படத்துக்குத் தடை விதிக்கக் கோரிய முக்கியக் காரணம், முல்லைப்பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தில் கேரள அரசின் அடாவடி அணுகுமுறையை நியாயப்படுத்தும்விதமாக அது இருந்ததுதான். உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுக்கள் சோதித்து, அணை உறுதியாக இருப்பதை அறிவித்தும், அந்த அணையில் முழுமையாகத் தண்ணீரைத் தேக்கி, ஒப்பந்தப்படி தமிழகத்துக்குத் தர மறுக்கிறது கேரள அரசு. அதோடு ஒப்பந்தத்தையே காலி செய்யும்விதமாக, அணையின்Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine நூற்றாண்டு பழமையைச் சொல்லி அதை உடைத்துவிட்டுப் புதிய அணை கட்டும் திட்டத்தில் முனைந்து வருகிறது. திட்டமிட்டு அரசியலாக்கப்படும் இந்த விவகாரத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் படம் அமைந்திருப்பதுதான் தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்திருக்கிறது.

படம் சத்தமில்லாமல் ஆரம்பிக்கப்பட்டு, படப்பிடிப்பும் முடிந்து, வெளியாகும் சூழலில் சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பது இயக்குநர் சோஹன் ராய் கொடுத்த பேட்டியில் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை...’ என்கிற ரீதியில் மேற்படி விஷமத்தனம் வெளிப்பட்டதுதான். ‘‘இந்தப் படம் வெளியானால், முல்லைப்பெரியாறு அணையை உடைத்துப் புதிய அணை கட்ட தமிழக அரசே ஒத்துழைக்கும்’’ என்று அவர் கூற... படத்தின் நோக்கம் முற்றிலுமாகப் புரிந்து போனது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து சென்னையில் தான் கலந்துகொள்ளவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்த சோஹன் ராய், மறுநாள் அதிகாலையில் விமானத்தில் கிளம்பி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கே வெளியாகவிருக்கும் படத்தின் பணிகளுக்காக அவர் சென்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து பத்திரிகைச் செய்தி மட்டும் வந்தது. ‘‘முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ‘டேம் 999’ படத்தில் காட்சிகளோ, வசனங்களோ, அந்த அணையின் பெயரோ இல்லை. 1975ம் ஆண்டு சீனாவில் பான்கியோ அணை பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழந்ததை அடிப்படையாக வைத்தே இந்தப்படம் உருவாக்கப்பட்டது. படத்தை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் திரையிட்டுக் காட்டத் தயார். அவர்கள் ஆட்சேபிக்கும் பகுதி படத்தில் இருந்தால் அதை நீக்கி விடுகிறேன்’’ என்று அவர் உறுதி கூறியிருந்தார்.

அத்துடன் அந்த செய்தி முற்றுப்பெறவில்லை. அதன் இறுதியில் தன் தனிப்பட்ட கருத்தாக, ‘‘கேரளத்தில் போதுமான தண்ணீர் இருக்க, தமிழகம் தண்ணீர் வேண்டி நிற்கிறது. இதற்கான ஒரே தீர்வு பழமையான முல்லைப்பெரியாறு அணை இடிக்கப்பட்டு பெரிய அணை கட்டப்படுவதுதான். அதன்மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையும், கேரள மக்களின் உயிர்களும் காக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார் ராய்.
ஒருபக்கம் கேரளத்தில் மக்களின் உயிர்ப் பிரச்னையாக முல்லைப் பெரியாறு அணை இருப்பதாகக் கிள்ளிவிட்டு, இன்னொருபக்கம் தமிழகத் தண்ணீர்த் தேவை தீர்க்கப்படு மென்றும் தொட்டிலை ஆட்டி விட்டிருக்கும் அவரது வன்ம நோக்கத்தை அதில் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

முல்லைப் பெரியாறு அணையின் ஒப்பந்த ஆண்டுகளான 999 வருடங்களை புத்திசாலித்தனமாகத் தலைப்பில் சேர்த்துவிட்டு, ‘‘இது அந்தப் பிரச்னையில்லை’’ என்று பூசி மெழுகும் இந்த சமர்த்தர், படத்தில் நடித்த நடிக, நடிகையர் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ‘‘உலகெங்கிலும் இருக்கும் பழமையான அணைகளின் மொத்த எண்ணிக்கை ஆயிரம். இதில் ஒன்று உடைபட்டுப் போவதால் மீதி இருக்கும் 999 அணைகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் பொருட்டு இந்தத் தலைப்பு வைக்கப்பட்டது’’ என்று கூறியிருக்கிறார். இன்னொருபக்கம் படத்தை வாங்கியும் வெளியிட முடியாமல் போன தென்னக வினியோகஸ்தர் ‘பூர்ணிமா ஷங்கர் எக்ஸிம்’ மஹாலிங்கம், 999க்கு இன்னொரு விளக்கம் சொல்கிறார். ‘‘படத்தில் அணை விபரீதம் நிகழும் தேதி 09&09&09 என்றிருக்கிறது’’ என்கிறார் அவர். அப்படியானால் படத்தின் இயக்குநர் அதற்கு வேறு காரணம் கற்பிக்க வேண்டிய அவசியம் என்ன..?

இருமாநில அரசுகளின் உறவையும், மக்களின் உறவையும் பாதிக்க வழி செய்யும் இந்தப்படத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று கலைஞர் குரல் கொடுத்ததும் தமிழக அரசு சுதாரித்துக்கொண்டு மாநில அளவில் தடை விதித்திருக்கிறது. இந்தத் தடையை மத்திய அரசும் இந்திய அளவில் அறிவிப்பதுதான் இரு மாநில மக்களின் வயிற்றில் நீர் வார்க்கும்..!

வேணுஜி