
‘நிலா நிலா போகுதே...
நில்லாமல் போகுதே...’
‘அரவான்’படத்தின் இந்த லேட்டஸ்ட்மெலடியை முணுமுணுக்காதவர்கள் கிடையாது!
பாடகர் விஜய் பிரகாஷுடன் இணைந்து, தனது தேன் குரலால் தாலாட்டி இருக்கிறார் பாடகி ஹரிணி. பாடுகிற அத்தனை பாடல்களும் ஹிட் ஆகும் வரம் வாங்கி வந்த ஹரிணியை சந்தித்தோம்.
‘‘நான் ‘மதராசப்பட்டினம்’ல பாடின ‘பூக்கள் பூக்கும் தருணம்’ கேட்டுட்டு, டைரக்டர் வசந்தபாலன் கூப்பிட்டுக் கொடுத்த பாட்டு ‘நிலா நிலா போகுதே...’ பாடகர் கார்த்திக்தான் படத்துக்கு மியூசிக். ‘ஹசிலி புசிலி...’, ‘உன்னாலே உன்னாலே...’ன்னு கார்த்திக்கும் நானும் சேர்ந்து பாடின பல பாடல்கள் சூப்பர் ஹிட். ‘அரவான்’ படத்துல நானும் கார்த்திக்கும் ஒரு டூயட் சாங் பாடினோம். அப்புறம் அது வேணாம்னு நானும் விஜய் பிரகாஷும் பாடின இந்தப் பாட்டை ரெக்கார்ட் பண்ணினார். என்னோட ஃபேவரைட் பாடல்கள்ல இதுதான் லேட்டஸ்ட்... நினைச்சுப் பார்த்தா, நிலா என் வாழ்க்கைல அதிர்ஷ்டமானதா இருந்திருக்கு. என்னோட முதல் பாட்டு ‘நிலா காய்கிறது’...’’

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறார் ஹரிணி.
‘‘9 மாசக் குழந்தையா இருந்தப்ப, ‘சங்கராபரணம்’ படப் பாடல்களை டேப் ரெக்கார்டர்ல போட்டு விடுவாங்களாம் அம்மா, அப்பா. பேச்சே வராத அந்த வயசுலயும், கூடவே நானும் ஏதோ ஹம் பண்ணுவேனாம். எனக்குள்ள சங்கீத ஞானம் இருக்கிறது தெரிஞ்சு, 3 வயசுலயே பாட்டு கிளாஸ்ல சேர்த்தாங்க. ஸ்கூல் படிக்கிறப்ப ஒரு பாட்டு போட்டிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் வந்திருந்தார். அவருக்கு முன்னாடி பாடி, அவர் கையால பரிசு வாங்கினேன். தன்னோட ஸ்டூடியோவுக்கு வந்து ரெண்டு, மூணு பாட்டு பாடிக் காட்டச் சொன்னார்.
பாடிட்டு வந்துட்டேன். 8 மாசம் கழிச்சு, ‘இந்திரா’ படத்துல ஒரு குழந்தை பாடற பாட்டுக்காக வரச் சொல்லி, சுஹாசினி மணிரத்னம் கிட்டருந்து அழைப்பு! ரஹ்மான் சார் மியூசிக்ல ‘நிலா காய்கிறது...’ எனக்கு முதல் பாடல். லதா மங்கேஷ்கருக்கு அடுத்து 13 வயசுல பின்னணி பாடினது நான்தான்ங்கிறதுல எனக்கு ரொம்பப் பெருமை...’’ என நிறுத்துகிறவர், தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பாடியிருக்கிறார். அவற்றில் ‘சொன்னாலும் கேட்பதில்லை...’, ‘மனம் விரும்புதே...’ என காதல் கசியும் பாடல்கள் எக்கச்சக்கம்...
பாடகர் திப்புவுடன் காதலில் விழுந்தபோது பாடியதா என்றால் ‘டெலிபோன் மணி’ போல் சிரிக்கிறார்.
‘‘2001&ல தேவா சார் ஷோவுக்காக ஆஸ்திரேலியா போயிருந்தப்பதான் திப்புவை முதல்முதல்ல சந்திச்சேன். சேர்ந்து பாடினோம். ரெண்டு பேரும் சாய்பாபா பக்தர்கள். எனக்கு எப்படியெல்லாம் வாழ்க்கைத்துணை அமையணும்னு ஆசைப்பட்டேனோ, அப்படியே இருந்தார் திப்பு. ஜனவரில அறிமுகமாகி, ஆகஸ்ட்லயே கல்யாணம். வழக்கமான காதலர்கள் மாதிரி நிறைய சுத்தவெல்லாம் முடியலைங்கிறதுல கொஞ்சம் வருத்தம்தான்...’’ & நிஜமான வருத்தத்துடன் சொல்கிறவருக்கு கணவர் பாடியதில் ஃபேவரைட் ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’ மற்றும் ‘வெயிலோடு விளையாடி...’
சாய் ஸ்மிருதி, சாய் அப்யங்கர் என இரண்டு வாரிசுகளும் இசையில் ஆர்வமாக இருப்பதில் அம்மா ஹரிணிக்கு அவ்வளவு பெருமை!
‘‘என்னதான் சினிமால பாடினாலும், சபாக்கள்ல கச்சேரி பண்ற அனுபவம் அலாதியானது. போன வருஷத்துலேருந்து சீசன்ல பாட ஆரம்பிச்சிருக்கேன். இந்த வருஷமும் தயாராயிட்டே இருக்கேன்... என் சங்கீதம் மூலமா நாலு பேருக்கு சந்தோஷம் தர முடியும்னா, அதைவிட வேறென்ன பெருமை இருக்க முடியும் வாழ்க்கைல?’’ & புன்னகைத்து முடிக்கிறார் சங்கீத ராட்சசி!
ஆர்.வைதேகி