கவிதைக்காரர்கள் வீதி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

          நாணயம்

ஒவ்வொரு
வெளியூர் பயணத்தின்போதும்
ஒண்ணேகால் ரூபாய்
முடிந்துவைக்கும்
குலதெய்வத்துக்கு
ஒன்றரை ரூபாய்
முடிய வேண்டியதாயிற்று...
இருபத்தி ஐந்து பைசா
செல்லாதாம்!
 எஸ்.சங்கர்,
திருப்பரங்குன்றம்.

ஞாபகங்கள்

மனப்படுகையில் தேங்கிநிற்கும்
மழைக்கால நிகழ்வுகளை
அசை போட்டபடி
பரணில் கிடக்கும்
கோடைக்காலங்களில் குடை!
 சிவபாரதி,
சிதம்பரம்.

எடை

நல்லவனா கெட்டவனா
எப்படியென்று
எடை போட முடியவில்லை...
கையில் தராசு இருந்தும்
நியாயவிலைக் கடைக்காரனின்
மனசை!
 ஜெ.புதுயுகம்,
பண்ணந்தூர்.

 தவம்

குருவிக்கூட்டை காற்று
கலைத்துவிடாமல் இருக்க
ஒற்றைக்காலில்
தவம் செய்கிறது மரம்!
 தஞ்சை கமருதீன்,
 தஞ்சாவூர்.

 பிரச்னை

விலாசம் தெரியாத
பிரச்னைகளையும்
விசாலமாய்
விவாதித்துவிடுகின்றன
திண்ணைப் பேச்சுகள்!
 ஏ.டி.தமிழ்மணி,
 தளிகைவிடுதி.

 வீடு

மணல்வீடு கட்ட
கற்றுத்தந்த அப்பா
கடைசிவரை எங்களை
வாடகை வீட்டில்தான்
வசிக்கச் செய்தார்!
 வீ.சிவசங்கர்,
 கள்ளக்குறிச்சி.