விஜயா டீச்சர்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   கதைக்கு முன் உங்களோடு கொஞ்சம்...

இந்தக் கதையின் ஆரம்பத்தில் பாப்பா என்று அழைக்கப்படப் போகும் விஜயா டீச்சர்தான் என் கதாநாயகி. ஒரு நிமிடம்... கதாநாயகி என்றதும் உங்கள் கனவுக் குதிரையைத் தட்டிவிட்டு விடாதீர்கள். கதாநாயகிக்கான எந்தச் சிறப்புகளும் இல்லாதவள் என்பது தான் நம் கதாநாயகிக்கான சிறப்பு. பருமனான உருவம் கொண்ட விஜயாவுக்கு வயது 29! ‘எவனும் கட்டிக்க வரமாட்டேங்கறான்’ என்பது மற்றவர்களின் கவலை; அவளைப் பொறுத்தவரையில் அது ஒரு ஸ்டேட்மென்ட்! ‘‘இதே ரேஞ்சில் போனால், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு பார்க்க வர்றதைப் பற்றி ஆராய்ச்சி பண்ணி டாக்டரேட்டே வாங்கிடுவேன் போல’’ என்று சிரித்துக் கொண்டே சொல்வாள். அதில் சிரிப்பைத் தாண்டி எந்த விஷயமும் இருக்காது.

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கும் அப்பா கோபாலகிருஷ்ணன், அவருக்கு வாழ்க்கைப்பட்டு வீட்டு அடுப்படியிலும் ஸ்வீட் ஸ்டால் அடுப்பிலும் நாளெல்லாம் வெந்து தணியும் அம்மா முத்துலட்சுமி, காலை காபி, டிபன், மதியம் சாப்பாடு, மாலை டிபன், இரவு சாப்பாடு தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தனிக்குடித்தனம் இருக்கும் அக்கா மங்கை & மாமா ரத்தினவேல், பேச்சு வந்தநாள் முதல் விஜயாவை பாப்பா என்று அழைத்து படுத்தி எடுக்கும் அக்கா பிள்ளைகள்... நான்கரை வயது ப்ரியா, இரண்டரை வயது பிரகாஷ், அப்பாவுக்குத் தலையாட்டுவதை முழு நேர வேலையாகவும் வீட்டில் அண்ணி ரத்னாவின் பேச்சுக்கு தலையாட்டுவதை பகுதிநேர வேலையாகவும் செய்தபடி போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும் அண்ணன் சோமசுந்தரம், இவர்களுடைய 10வது படிக்கும் மகள் கவிதா, கல்லூரியில் படிப்பதாகச் சொல்லிக் கொண்டு திரியும் தம்பி ஆனந்த், ஆசைக்கு ஒன்றும் ஆஸ்திக்கு ஒன்றுமாக இரட்டையாகப் பிறந்து இம்சையைக் கூட்டும் தங்கைகள் ராதா, சீதா என்று விஜயாவுக்கு ‘அளவான’ குடும்பம்! இவர்களில் யாருமே விஜயாவை கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை.

எதையும் முகத்துக்கு நேராகப் பேசுவது விஜயாவின் இயல்பு. அது நல்லதாக இருந்தாலும் சரி, அடுத்தவருக்கு பாதிப்பை உண்டாக்குவதாக இருந்தாலும் சரி... விஜயா கவலைப்படமாட்டாள்.

இப்படித்தான் ஒருமுறை மாமா ரத்தினவேலை அம்சவல்லி பிரியாணிக் கடை வாசலில் வைத்து பார்த்துவிட்டாள். அதுவும் வாயில் பெருஞ்சீரகத்தை மென்றபடி! தானாக வலிய வந்து, ‘‘என்னை இங்கே பார்த்ததை அக்காகிட்டே சொல்லாதே... சும்மா ஃப்ரெண்டுகூட வந்தேன்... அவன் தான் பிரியாணி சாப்பிட்டான். நான் ஒரு ஆம்லெட்தான் சாப்பிட்டேன். இருந்தாலும் அக்கா திட்டுவா...’’ என்று அவ்வளவுதூரம் கெஞ்சலாகச் சொல்லிவிட்டுத்தான் போனார் மாமா.

அவ்வளவு தூரம் பேசியவர் சும்மா இருந்தி ருக்கலாம். ஆனால், வீட்டுக்குப் போன வேகத்தில் மங்கையிடம், ‘‘விஜயா ஏதும் சொன்னாளா...’’ என்று கேட்க, மங்கை நேராக வந்து, ‘‘மாமாவை கடைவீதியில் பார்த்தியா?’’ என்று விஜயாவிடம் கேட்க, கழித்துப் போட்ட லெக்பீஸ் வரைக்கும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். மாமாவுக்கு மரண தண்டனையைவிட கொடிய தண்டனையாக, குடும்பத்துக்கே சிக்கன் பிரியாணி வாங்கித் தரவேண்டியதாகிவிட்டது.

அதேநேரம் விஜயா ரொம்பவே நேர்மைவாதி. அப்பா கடையாகவே இருந்தாலும் காசு கொடுத்துத்தான் கடலைப் பொட்டலம் வாங்குவாள். அப்பா கடையில் மசாலா கடலை நன்றாக இருக்கும் என்பதால் வேறு எங்கும் வாங்குவதில்லை. கடையில் வாங்கும் கடலை, வீட்டுக்குச் செல்வதற்குள் காலியாகி விடும். யாரும் பார்க்கிறார்களா என்பது பற்றிக்கூட கவலையில்லாமல், ரோட்டில் கடலையைக் கொறித்தபடி நடப்பது விஜயாவின் வழக்கம்! கையில் குடைஇருக்கும். ஆனால், மழை அடித்தால் மட்டுமே அந்தக் குடை விரியும். எவ்வளவு வெயில் அடித்தாலும், குடையை விரிக்காமல் வெயிலில் காய்ந்தபடி நடப்பது விஜயாவின் தனி குணம்.

விஜயாவுக்கு பிடித்த இடம் என்றால், அவள் வேலை பார்க்கும் அரசு நடுநிலைப் பள்ளிதான். அந்தப் பள்ளிக்கூடத்தில் அவளுடைய வருகைக்காகக் காத்திருந்து, ‘வணக்கோம் டீச்சர்’ போடும் பிள்ளைகளுக்காகத்தான் இன்னமும் சிரிப்பைத் தேக்கி வைத்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பிள்ளைகளைத் தாண்டி, பள்ளிக்கூடத்தில் பரிவோடு விஜயாவைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பேசும் இரண்டு பேர் உடன் பணியாற்றும் ஈஸ்வரியும் கலைச்செல்வனும்தான். ஆயிரம் கவலைகள் இருந்தாலும் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்துவிட்டால் அத்தனையையும் வாசலோடு கழற்றி விட்டு விட்டு உற்சாகமாகிவிடுவாள். சுற்றி நடக்கும் எந்த விஷயமும் அவளைப் பாதிக்காமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், இந்தப் பள்ளிக்கூடம்தான்! அவளுடைய உலகம் என்பது இரண்டு அடுக்குகளை மட்டுமே கொண்டது. ஒன்று, அவளுடைய வீடு... இன்னொன்று பள்ளிக்கூடம்!

விஜயாவின் முக்கியமான ஒரு தினத்தில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது...
(தொடரும்)

மெட்டி ஒலி திருமுருகன்
படங்கள்: புதூர் சரவணன்