வித்தகன் சினிமா விமர்சனம்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

                இதுவரை படங்களில் நல்ல போலீஸைப் பார்த்திருக்கிறோம்; பொறுக்கி போலீஸைப் பார்த்திருக்கிறோம். நல்ல போலீஸை அடையாளம் காட்ட இதில் கெட்டவனாகிறார் பார்த்திபன். அவரே படத்தில் எழுதியிருக்கும், ‘விளையாட்டுக்குக் கூட போலீஸ் தோற்கக்கூடாது. விளையாட்டுல கூட திருடன் ஜெயிக்கக்கூடாது...’ என்கிற  வசனம்தான் படத்தின் கரு.

இடையில் வடிவேலுவை மட்டும் கலாய்த்துக் கொண்டிருந்த பார்த்திபன், நீண்ட இடைவெளிக்குப்பின் வில்லன்களைக் கலாய்க்கும் கதை. நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு ஒருபக்கம் தாதாக்களும், இன்னொரு பக்கம் அவர்களுக்குத் துணைபோகும் உயர் போலீஸ் அதிகாரிகளும் நெருக்கடி கொடுக்கும் வழக்கமான கதைக் களம்தான். ஆனால் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஹீரோ கடுக்காய் கொடுக்கும் ஜாலியான திரைக்கதை.

அந்த பாத்திரப் படைப்புடன் உயரமும், கடினமான முகவெட்டும் பார்த்திபனுக்கென்றே அளவெடுத்துத் தைத்த போலீஸ் யூனிஃபார்மாகியிருக்கிறது. Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazineஒரு சமூக விரோதியிடமிருந்து தன் மகளின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போன நேர்மையான போலீஸின் மகனாக வந்து, தானும் ஒரு போலீஸ் அதிகாரியாகும் பார்த்திபன், ஒரு உண்மையான போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டுமானால் குடும்ப பந்தம் இருக்கக் கூடாதென்று முடிவெடுப்பது புதிய சிந்தனை. அதற்காகவே குடும்பம் இருந்தும் அனாதையாகக் காட்டிக்கொண்டு வாழ்வதும், நாயகி பூர்ணாவின் காதலைத் தவிர்ப்பதும் கதைக்கு பலம் சேர்க்கும் காட்சிகள்.

‘‘தெரியாமதான் கேக்கறேன்...’’ என்று பேச ஆரம்பிப்பவரிடம், ‘‘தெரிஞ்சா ஏன் கேக்கப்போறே..?’’ என்று பார்த்திபன் கேட்பதைப் போன்ற வசனங்கள் படம் நெடுக ஆங்கங்கே ரசிக்க வைக்கின்றன. ஆனால் முக்கிய வில்லன்களிடமெல்லாம் அவர் அப்படியே பேசிக்கொண்டிருப்பதில், அவர்கள் மீது நமக்குப் பயம் ஏற்படுத்துவதற்கு பதில் அவர்களை காமெடியன்கள் போலவே கருத வேண்டியிருக்கிறது.

அஞ்சி நடுங்கி அறிமுகமாகும் பூர்ணா கடைசியில் அஞ்சாமல் உயிரை விட்டு நெகிழ வைக்கிறார். பார்த்திபனின் அதீத புத்திசாலித்தனமும், பூர்ணாவின் அநியாய அப்பாவித்தனமும் ஒட்டாமல் இருப்பதைப் போலவே படத்திலும் இருவரும் சேராமலேயே போகிறார்கள்.

வில்லன்களில் மிலிந்த் சோமன் ரசிக்க வைக்கிறார். தனக்கு எல்லாக் கட்டத்திலும் செக் வைக்கும் பார்த்திபனை தன்னைப் பழி வாங்க வந்தவர்தான் என்று உணர்ந்து, ‘‘உன்னை மாதிரி ஆளுங்க ஒரு பிளாஷ்பேக்கை வச்சுக்கிட்டே 25 வருஷம் காத்திருப்பீங்க. எனக்கு அந்த மாதிரி நூறு பிளாஷ்பேக் இருக்கு. உன் பிளாஷ்பேக் என்னடா..?’’ என்று கேட்கும் அதட்டல் அற்புதம். அந்த பிளாஷ்பேக்கை கடைசிவரை சொல்லாமலேயே பார்த்திபன் பழி தீர்ப்பது புது அயிட்டம். ஆனால் அந்த வில்லனிடமும் கைத்தடிகளாக இரண்டு கோமாளிகள் காமெடி பண்ணிக்கொண்டிருப்பது பழைய சரக்கு.

வழக்கமாக வில்லன்கள் பக்கம் வரும் சம்பத்ராமுக்கு இதில் பார்த்திபனின் அப்பாவாக உருக்கமான வேடம். மோகன் நடராஜனும், ரவிசங்கரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். தன் மகன் ராக்கியை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருப்பதில் ஒரு சினிமா அப்பாவின் விருப்பம் தெரிகிறது பார்த்திபனிடத்தில்.

எம்.எஸ்.பிரபு, ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவும், ஆன்டனியின் படத்தொகுப்பும் படத்தைத் தூக்கி நிறுத்தி யிருக்கின்றன. ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பார்த்திபனே எழுதியிருக்கும் பாடல்களில் உலகம் வெப்பமயமாதலைச் சொல்லும் ‘உன் ஜோனில...’ பாடல் கவனிக்க வைக்கிறது.

குங்குமம் விமர்சனக் குழு