‘‘சினிமாவில் நடிகர் திலகமும் எம்.ஜி.ஆரும் இரு துருவங்களாக இருந்தாலும், இருவரின் படங்களுக்கும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்’’ என்ற இயக்குனர் வி.சி.குகநாதன், இந்த புகைப்படம் எடுத்த சூழலை நினைவுகூர்ந்தார்.
‘‘1972ல் ‘சுடரும் சூறாவளி’ படத்தை முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ‘வசந்த மாளிகை’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மதியம் சாப்பிட்டுவிட்டு மேக்கப் ரூமுக்கு வெளியே உட்கார்ந்திருந்தார் சிவாஜி.
அந்த வழியாகச் சென்ற என்னை, ‘டேய்... சோக்காலி’ என்று அழைத்தார். அப்போது எனக்கு 20 வயசுதான் இருக்கும். பக்கத்தில் போனதும் என்னை உட்காரச் சொன்னார். என் முகத்தைப் பார்த்தவர், ‘சின்ன படங்கள்தான் எடுப்பியா... அண்ணனை வைத்து படம் எடுக்க மாட்டீயா?’ என்று கேட்டார். ‘அப்படியெல்லாம் இல்லேண்ணே... உங்கள வச்சி படம் பண்ண வசதி பத்தாது’ என்றேன். ‘நான் சொல்றேன்... நீ சண்முகத்தை போயி பாரு’ என்றார். சினிமாவில் அவர் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அப்படிச் சொன்னது, என் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கையையும் பாசத்தையும் காட்டியது.
அதற்குமுன்பு ‘எங்க மாமா’, ‘தங்கைக்காக’ படங்களில் அவருக்காக நான் கதை எழுதியிருக்கிறேன் என்றாலும், அதுவரை அவர் பண்ணாத கேரக்டரை உருவாக்க நினைத்தேன். சினிமாவாக எடுக்கப்பட்ட ‘டேல் ஆஃப் டூ சிட்டீஸ்’ நாவலில் வரும் குடிகார வக்கீல் கேரக்டரையும், ‘நெவர் லவ் எ ஸ்ட்ரேஞ்சர்’ கதையில் வரும் பாக்ஸர் கேரக்டரையும் மிக்ஸ் பண்ணி இரட்டை வேடக் கதை ஒன்றை சொல்லி ஷூட்டிங்கை ஆரம்பித்தோம். அதே சமயத்தில் உருவான ‘கௌரவம்’ படத்திலும் வக்கீல் கேரக்டர்தான் என்பதால், ‘கதையை மாற்றிக்கொள்ளலாமா’ என்று அபிப்ராயம் கேட்டார் சிவாஜி. நான் ‘சரி’ என்றதும் மூன்று நாள் ஷூட்டிங்கோடு படம் நின்று போனது. அதற்குப் பிறகுதான் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ எடுத்தோம்.
இடையில் அவர் அரசியலில் பிஸியான நேரத்தில், ‘முதல் குரல்’ படத்தில் நடிக்கக் கேட்டேன். அவரும் சம்மதித்தார். படம் பாதியில் இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சிங்கப்பூர் போய்விட்டார். திரும்பி வந்ததும் என்னை அழைத்த அவர், ‘அண்ணனுக்கு ஏதாவது ஆவதற்குள் சேர்ல வைத்து தூக்கிட்டுப் போயாவது உன் படத்தை முடிச்சிடு’ என்றார். தனக்காக படம் நின்றுவிடக்கூடாது என்று நினைத்த அவரது தொழில் பக்தியை, இப்போது நினைத்தாலும் சிலிர்க்கும்.
- அமலன்
படம் உதவி: ஞானம்