பிழைப்பு





எப்போதாவது ஒரு முறை கோயிலுக்குப் போவதோ, வருவதோ தப்பில்லைங்க. ஆனா, இந்த குரு இருக்கான் பாருங்க..! அடிக்கடி கிளம்பிடறான். ஆ... ஊ...ன்னா மொட்டை போட்டுக்கறான். காணிக்கையாம் காணிக்கை. அப்படி என்ன காணிக்கை வேண்டிக் கிடக்கு... நம் பிழைப்பைப் பார்க்காமல்..? பிழைப்புதானே முக்கியம்!

எங்கள் ஊர் இருப்பது ஆந்திரா பார்டரில். வடக்கே திருப்பதி, தெற்கே திருத்தணி... நட்ட நடுவாக மகிஷாசுரமர்த்தினி கோயில். பிறகு கேட்கவா வேண்டும்? அட, கோயிலுக்கு வேண்டுமானால் போகட்டும், மொட்டை எதுக்கு என்றுதான் கேட்கிறேன். சுண்டு விரலையோ, கால் கட்டை விரலையோ வெட்டி காணிக்கை செலுத்த வேண்டியதுதானே!

குருவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு செம கடுப்பு. அவனுடன் பேசுவதைத் கூட குறைத்துக் கொண்டேன்.

மூன்று மாதம் கழித்து அவனே என்னைத் தேடி வந்தான். அவன் தலையில் கருகருவென முடி அடர்த்தியாக வளர்ந்திருந்தது.

‘‘என்னப்பா குரு, இந்த மாசம் எந்தக் கோவிலுக்கும் போகலையா?’’

‘‘இல்ல, எனக்கு வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!’’ என்றவாறே சுழல் நாற்காலியில் அமர்ந்து, ‘‘வெட்டு’’ என்றான்.

‘‘ஒரு புது கஸ்டமர் சிக்கிட்டாண்டா’’ என்ற சந்தோஷத்தில்
உற்சாகமாகக் கத்தரியை கையில் எடுத்தேன்!