திராவிட இயக்க வரலாறு



முரசொலி மாறன்



திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் மிகப் பொருத்தமாக வெளியாகி இருக்கிறது முரசொலி மாறன் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ நூலின் முதல் தொகுதி.

சென்னையின் புகழ்மிக்க டாக்டர்களில் ஒருவராக விளங்கியவர் டாக்டர் நடேசனார். அவர்தாம் திராவிட இயக்கத்தின் நிறுவனர். சென்னை, திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த அவர் இல்லத்தில் 1912ம் ஆண்டு உருவான ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’ என்ற அமைப்பே பின்னாளில் மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. அந்த இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்திருந்த தமிழகச் சூழலையும், அந்த இயக்கம் மகத்தான மக்கள் சக்தியாக மாறி ஆட்சியைப் பிடித்த வரலாற்றையும் ஆதாரங்களோடு ஒரு ஆராய்ச்சி நூலாக வடித்திருக்கிறார் ‘கலைஞரின் மனசாட்சி’யாக வர்ணிக்கப்படும் முரசொலி மாறன்.

இன பேதமற்ற சமதர்ம சமுதாயம் தமிழர்களுடையது. பின்னாளில் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஆரியவர்ணாசிரம தர்மம் இங்கே நுழைந்து, தமிழர்களை சூத்திரர்கள் ஆக்கியது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் பிராமணர்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாறி, பிராமணரல்லாதாரை அழுத்தி வைத்திருந்தனர். காங்கிரஸ் போன்ற விடுதலை இயக்கங்களிலும் அவர்களே ஆக்கிரமித்து இருந்தனர். இதனால் கல்வியறிவு மறுக்கப்பட்ட பிராமணரல்லாதார், வேலைவாய்ப்புகளைப் பெற முடியவில்லை. ஆட்சியும் அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையில் குவிந்திருக்க, பெரும்பான்மை சமூகம் இருட்டில் கிடந்த நிலையை மாற்றவே திராவிட இயக்கம் உதயமானது.

டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், தியாகராயர் போன்ற திராவிட இயக்கத் தலைமகன்கள் கூடி உருவாக்கிய ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’, பின்னாளில் நீதிக் கட்சி யாக வடிவெடுத்தது. இவ்வாறு உருவான அந்தக் கட்சி, சதிகளையும் அவதூறுகளையும் முறியடித்து, சென்னை மாகாணத்துக்கு நடந்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது ஒரு மகத்தான சாதனை. 1920ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் வென்று, நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. அதன்பின் தமிழர்களின் நிலைமை மாறியது.

இப்படி திராவிட இயக்கம் உருவாகி, ஆட்சியைப் பிடித்த 1912 முதல் 1921 வரையிலான முதல் பத்தாண்டு வரலாற்றை இந்த முதல் தொகுதியில் எழுதியிருக்கிறார் முரசொலி மாறன். ‘மிசா’ அடக்குமுறையில் கைதாகி, சென்னை சிறையில் ஓராண்டு காலம் அடைபட்டிருந்தபோது அவர் எழுதிய நூல் இது. பின்னாளில் ‘முரசொலி’ நாளேட்டில் தொடராக வெளிவந்த இது, கடந்த 91ம் ஆண்டில் நூல் வடிவம் பெற்றது. இப்போது இரண்டாவது பதிப்பு வெளியாகி இருக்கிறது. நூல் ஆக்கத்துக்கு துணை நின்ற ஆராய்ச்சி நூல்கள், பத்திரிகை செய்திகள், சட்டசபை ஆவணங்கள் என எல்லாம் பற்றிய அடிக்குறிப்புகளோடு இருக்கும் இந்த நூல், திராவிட இயக்கம் பற்றிய காலப் பெட்டகம்.  

திராவிட முழக்கத்துக்கான தேவை இந்தக் காலத்திலும் இருக்கிறது. அதை இளைய தலைமுறையினர் இந்த நூலைப் படித்தால், உணர்ந்து கொள்ளலாம்.

(விலை ரூ: 200/-, வெளியீடு: ரிகிலி பப்ளிகேஷன்ஸ், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004. தொடர்புக்கு: 9840978016.)