இரவல் நகை





‘‘கிரிஜாவைப் பார்த்தியாடி... காது, கழுத்தெல்லாம் தொடச்சு வச்ச மாதிரி மூளியா இருக்கா!’’

‘‘அப்படியும் வெக்கம் இல்லாம எல்லா விசேஷத்துக்கும் முன்னால வந்து நிக்கறா பாரு!’’

‘‘கருமம்... கருமம்! புருஷன் பேச்சைக் கேட்டு, இப்படி எல்லா நகைகளையுமா கழட்டிக் கொடுப்பாங்க?’’

‘‘ஹும்... படிச்ச மாப்பிள்ளை, நல்ல சம்பளம்னு ஆசை ஆசையாதான் அவங்க அப்பா நகை செஞ்சு போட்டாரு. இப்ப கம்பெனியை மூடினதால வேலையும் போச்சு. குடும்பக் கஷ்டத்துக்கு இவ நகையை பலி கொடுத்துட்டு வந்து நிக்கறா. எங்கிட்ட பேச்சுக் கொடுத்தா... நான் ஒரே வார்த்தையிலே ‘கட்’ பண்ணிட்டேன்!’’ என்றாள் அந்த வைர நெக்லஸ் பெண்மணி.
‘‘நானும்தான்!’’ என்றது அந்த கல் அட்டிகை!

கிரிஜா எதையும் பொருட்படுத்தவில்லை. விசேஷங்களுக்குப் போய் வருவதையும் நிறுத்தவில்லை.

இரண்டே வருடங்கள். மூடிய தொழிற்சாலை திறக்கப்பட்டது. கிரிஜாவின் கணவன்தான் இப்போது எம்.டி. ஆசை மனைவிக்கு இரட்டை வடத்தில் தங்கச் சங்கிலி, கைநிறைய வளையல் என்று வாங்கிப் போட்டு அழகு பார்த்தான்.

உறவுக்குள் ஒரு வளைகாப்பு நிகழ்ச்சி. கிரிஜா போயிருந்தாள். அவளைப் பார்த்து அதே உறவுக்காரப் பெண்கள் பேசிக் கொண்டனர்... ‘‘நாம பேசிப் பேசி, இந்த கிரிஜாவுக்கு புத்தி வந்துடுச்சுடி. இரவல் நகையாவது வாங்கிப் போட்டுக்கிட்டு பாந்தமா வந்திருக்கா பாரு!’’