நான் பாலாவின் நாயகி...





‘‘இடைவெளி என்பது சில நேரங்களில் நல்ல வாய்ப்புக்கான வாசலாக அமைந்துவிடுகிறது’’ என்று வேதிகா தத்துவம் உதிர்க்கும் காரணம், பாலா பட வாய்ப்புதான். ‘காளை’, ‘சக்கரக்கட்டி’ ‘மதராசி’ என சில படங்களுடன் காணாமல் போன வேதிகாவின் கைகளில் வட்டியும் முதலுமாக வந்து விழுந்திருக்கிறது ‘பரதேசி’ பட வாய்ப்பு.

ஜீரோ சைஸுக்கு மாறிய நக்மா போன்ற சாயலில் மனசை சலனப்படுத்தும் வேதிகா, ‘சங்கத்தில் பாடாத கவிதை என் முன்னே யார் நின்றது...’ என இளையராஜாவின் பாடலை சுதி பிசகாமல் பாடும் அளவிற்கு தமிழ் பேசுகிறார். சரி, இத்தனை நாளாய் எங்கே போயிருந்தார்?

‘‘சிம்பு ஜோடியாக ‘காளை’யில் நடித்ததால் எனக்கு தமிழில் நல்ல ஓபனிங் கிடைச்சது. ‘முனி’ படம் என்னை வில்லேஜ் வரைக்கும் கொண்டு போனது. இனி நம்ம காட்டிலும் மழைதான்னு நினைச்சேன். ஆனா சின்ன தூறல்கூட இல்லை. சில கதைகளைக் கேட்கும்போது எனக்கே டயர்டாகிவிட்டது. அமைதியா ஆந்திரா பக்கம் ஒதுங்கிட்டேன். ‘பானம்’ தெலுங்குப் படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் சிறந்த நடிப்புக்காக நந்தி விருது கிடைத்தது. தொடர்ந்து ஒரு தெலுங்குப் படத்திலும் கணேஷ் ஜோடியாக ஒரு கன்னடப் படத்திலும் நடித்துவிட்டேன்.

மற்ற மொழிகளில் பிஸியா இருந்தாலும், தமிழில் நல்ல வாய்ப்பு வரலையேன்னு ஏங்கிக்கொண்டிருந்தபோது தான் பாலா சார் ஆபீஸிலிருந்து போன். ‘பரதேசி’ படத்திற்கு டெஸ்ட் ஷூட் இருக்கு... வரமுடியுமான்னு கேட்டாங்க. அடுத்த நாளே சென்னைக்கு பறந்து வந்துட்டேன். அந்த கேரக்டருக்கு நான்தான் பொருத்தமா இருப்பேன்னு பாலா சார் கெஸ் பண்ணியிருக்கார். சென்னை வந்ததும் அவரோட ஆபீஸில் மேக்கப் போட்டு, படத்தில் வர்ற காஸ்ட்யூம் போடச் சொல்லி இரண்டு நாட்கள் டெஸ்ட் எடுத்தாங்க.

ரிசல்ட் என்னவா இருக்குமோன்னு எனக்குள்ள எகிறிய லப் டப், எதிர்ல நிக்கிறவங்களுக்கும் கேட்குற அளவுக்கு இருந்தது. ‘பாலா சார் வச்ச பரீட்சையில் நீங்க பாஸாகிட்டீங்க’ன்னு மூணாவது நாள் சொன்னாங்க. அந்த நிமிடத்தைத்தான் எனக்கான தேசிய விருதா நினைக்கிறேன். பாலா சார் படத்துல சின்னதா வர்ற கேரக்டருக்குக்கூட முக்கியத்துவம் இருக்கும். நாயகியா நடித்திருக்கும் எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கதை, கேரக்டர் பற்றி பாலா சார் சொல்ற வரைக்கும் நான் வாயைத் திறக்கக்கூடாது’’ என எண்ட் கார்டு போட நினைத்த வேதிகாவிடம், ‘‘தன்னோட இயக்கத்தில் நடிக்கிறவங்களை வாட்டி எடுத்துடுவாரே பாலா... உங்க விஷயத்தில் எப்படி?’’ என்றோம்.


‘‘துணை நடிகர்களில் ஆரம்பித்து ஹீரோ, ஹீரோயின் வரைக்கும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்றார் பாலா. அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ‘பரதேசி’ தமிழில் எனக்கு ஆறாவது படம். இந்த ஒரு படம் எனக்கு பத்து பட அனுபவத்தைக் கொடுத்தது. இடதுபுறம் இருக்கும் முடி, காற்றில் வலது பக்கம் அசைந்து கிடந்தாலும் விடமாட்டார் பாலா. அவர் நினைத்தபடியே அந்த முடியையும் பொசிஷன் மாற்றுகிறார். எப்படிப் பார்க்கணும், என்னவிதமான ஃபீலிங்கை முகத்தில் கொண்டு வரணும் என்று அவர் சொல்லிக் கொடுக்கிறதையே ஒரு படமா எடுக்கலாம்.

‘பாலா படத்தில் நடிக்கப் போறீயா... ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் உன்ன பார்க்கமுடியும்’னு நிறையப் பேர் சொன்னாங்க. ஆனா 85 நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் ஓவர். வித்தியாசமான கேரக்டர், வித்தியாசமான கெட்டப்னு எனக்கே நான் புதுசா தெரியறேன். படமே கொஞ்சம் ஷாக்கிங்கா இருக்கும். வெயிட் பண்ணுங்க...’’ என்றவரிடம், ‘பரதேசி’க்கு அர்த்தம் கேட்டால், ‘‘பரதேசின்னா வழிப்போக்கன் என்று அர்த்தம்’’ என பிரித்து மேய்கிறார்.

கோலிவுட் ஃபிரண்ட்ஸ், வீக் எண்ட் பார்ட்டியில் வேதிகா எப்படி? ‘‘தமன்னா, சங்கீதா, தேவிஸ்ரீபிரசாத்னு சில நண்பர்கள் இருக்காங்க. ஆனா பார்ட்டி பழக்கம் இல்லை. பாம்பே பொண்ணா இருந் தாலும், இப்போ நல்லா தமிழ் பேசக் கத்துக்கிட்டேன். தமிழ்ப் பண்பாடு எனக்குப் பிடிச்சிருக்கு. தமிழ் சினி மாவில் நல்ல இடத்தில் இருக்கணும்னு ஆசைப்பட றேன். பார்ட்டி, கும்மாளம்னு போயி என் பேரைக் கெடுத்துக்க விரும்பலை’’ என்கிறார் தெளிவாக!
- அமலன்