அழகுகுறிப்பு





*  பேருந்தில்
உன் பின் இருக்கையில்
நாம் அமர்ந்தவுடன்
பேசத் தொடங்கிவிடுகிறாய்,
உதடுகளால் தோழியுடனும்
கண்களால் என்னுடனும்!

*  நீ சைக்கிள் கற்றபோது
விழாமல் இருப்பதற்காக
பிடித்துக் கொண்டிருந்தேன்
பெடல் மிதிக்க பயந்து பயந்து
என் மனசுக்குள் உட்கார்ந்து
மணியடித்துக் கொண்டிருந்தாய் நீ

*  உன் அழகை வர்ணித்து
வானொலியில் பேசினேன்
இந்த ஆண்டிற்கான
சிறந்த அழகுக்குறிப்பு என
விருது வழங்கியிருக்கிறார்கள்
அதற்கு

*  ஓடிப் பிடிக்கும் விளையாட்டில்
உன்னை வளைத்துப் பிடித்த
தருணமொன்றில்
கண்கள் மூடி இதழருகில் வந்து
வெட்கப்பட்டு தராமல்
விட்டுப்போன முத்தமொன்று
இனிக்கிறது இன்றும் நெஞ்சில்

*  பஞ்சுத் திரி போட்டு
விளக்கேற்றுகையில்
ஒளிர்கிறது உன் முகம்
அம்பாளுக்கு அர்ச்சனை செய்தபின்
அர்ச்சகர் காட்டும்
தீபத்தைத் தொட்டு
கண்களில் ஒற்றிக்கொண்டு
சொல்கிறாய்
‘அற்புதமான தரிசனம்’ என்று,
அதையேதான் நானும் சொல்கிறேன்...
ஆதலையூர் சூரியகுமார்