நிழல்கள் நடந்த பாதை





மக்கள் ஏன் வதந்திகளை நம்புகிறார்கள்?

சுஜாதா ஆசிரியராக இருந்த ‘அம்பலம்’ இணைய இதழில் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதினேன். வதந்திகள் வாழ்க்கையை எவ்வாறு சுவாரசியமாக்குகின்றன என்பது பற்றியது அது!

ஆனால், தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குப் பிறகு இன்று வதந்திகள் தேசிய அச்சுறுத்தலாக மாறிவிட்டன. கடந்த வாரத்தில் பெங்களூரு, சென்னை, மும்பை, புனே, டெல்லி போன்ற இந்தியாவின் முக்கியமான நகரங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய காட்சி நம்ப முடியாததாக இருந்தது. கலவரமோ, தாக்குதல்களோ எதுவும் இல்லை. வெறும் வதந்தி நாடு முழுக்க பெரும் வலைப்பின்னலாக மாறி, ஏராளமானோரை ஏதோ யுத்த களத்திலிருந்து வெளியேறுபவர்களைப் போல வெளியேறச் செய்திருக்கிறது.

‘முஸ்லிம்கள் வடகிழக்கு மாநிலத்தவர்களைத் தாக்கப் போகிறார்கள்’ என்ற, எந்த முகாந்திரமும் அற்ற ஒரு எஸ்.எம்.எஸ். நாடு முழுக்க இத்தனை ஆயிரம் பேரை நிலைகுலைய வைக்க முடியுமா? அரசாங்கம் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டு பயப்படுவது போல வதந்தியைக் கண்டு நடுங்குகிறது. அசாம் மற்றும் மியான்மரில் நடக்கும் வன்முறைகள் பற்றி, இஸ்லாமியர்களை உணர்ச்சிவசப்படச் செய்யும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பாகிஸ்தான் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்றும், வடகிழக்கு மாநிலத்தவர்களை அச்சுறுத்தும் எஸ்.எம்.எஸ்.கள் எல்லாம் பாகிஸ்தானில் இருந்து உருவாக்கப்படுகின்றன என்றும் இந்திய அரசு குற்றம் சாட்டுகிறது.

இந்திய ஊடகங்கள் ஏதோ பயங்கர சதியைக் கண்டுபிடித்து விட்டது போல தொடர்ந்து அலறிக்கொண்டிருக்கின்றன. இது பிரச்னைகளின் உக்கிரத்திலிருந்து மக்களைத் திசை திருப்புகிற ஒரு முயற்சி. அரசாங்கம் பதினைந்து தினங்களுக்கு மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்பும் சர்வீசை நிறுத்தி வைத்திருப்பதன் மூலமும், மிகையான செய்திகளை வெளியிடும் இணைய தளங்களைத் தடை செய்வதன் மூலமும் இந்தியாவில் மத - இன நல்லிணக்கத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறது. நாடு முக்கியமான ஒரு சவாலை எதிர் நோக்கியிருக்கும் சந்தர்ப்பத்தில், இதுபோன்ற கோமாளித்தனமான செயல்பாடுகள் ஒரு தற்காலிக திசை திருப்பும் முயற்சி என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இல்லை.

ஏன் வதந்திகள் வலிமையுடன் வாழ்கின்றன? என் குழந்தைப் பருவத்திலிருந்து வதந்திகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஊருக்குள் திருடர்கள் வந்திருக்கிறார்கள், இரவில் பிசாசுகள் அலைகின்றன, வயலில் தலையில்லாத மனிதன் சுற்றித் திரிகிறான் என ஏதாவது ஒன்றைப் பற்றி வதந்திகள் உருவாகிக்கொண்டே இருக்கும். என் குழந்தைப் பருவத்தில் இந்து - முஸ்லிம் கலவரங்களின் கொடிய நிழலை என் கிராமத்திலும் பார்த்திருக்கிறேன். ஒரு கற்பனை எதிரியை எதிர்நோக்கி தூங்காமல் இருந்த இரவுகள் நினைவுக்கு வருகின்றன.

பிற்காலத்தில் இந்தியாவில் சாதி, மதக் கலவரங்கள் தொடர்பான விஷயங்களை மிக ஆழமாகப் படிக்கத் தொடங்கியபோது சுவாரசியமான ஒரு விஷயத்தைக் கவனித்தேன். பல பெரிய கலவரங்கள், ரத்தம் சிந்திய மோதல்களுக்குக் காரணமாக ஏதேனும் ஒரு வதந்தி இருந்திருக்கிறது. எதனாலும் தடுத்து நிறுத்த முடியாதபடி அந்த வதந்தி பெரும் நெருப்பாகப் பரவி அழித்திருப்பதைக் கண்டேன். இணையதளம், செல்போன் போன்ற எந்த சாதனமும் இல்லாத காலத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. ஒரு பெரிய மதக் கலவரத்தை உண்டாக்க, ஒரு பசுமாட்டைக் கொன்றுவிட்டதாகவோ அல்லது ஒரு துண்டு பன்றி மாமிசத்தை ஒரு மசூதி வாசலில் எறிந்ததாகவோ ஒரு வதந்தியைப் பரவச் செய்தால் போதும். ஒரு கொடூரமான சாதிக் கலவரத்தை உண்டாக்க ஒரு சிலை அவமதிக்கப்பட்டதாகச் சொன்னால் போதும். இப்போது வதந்திகள் கையில் இடும் மருதாணிவரை வந்துவிட்டன.

வதந்திகள் எங்கிருந்து, எப்படி, யாரால் உருவாக்கப்படுகின்றன என்பதை ஒருபோதும் கண்டு பிடிக்க முடியாது. அது கிளம்பும்போதே தான் உருவான மூலத்தின் தடங்களை அழித்துவிட்டுத்தான் கிளம்புகிறது. ஒவ்வொருவரையும் கடக்கும்போது அது தன்னைக் கொஞ்சம் பெருக்கிக் கொள்கிறது.

வதந்திகளைக் கேட்பவர்கள், ‘அது உண்மைதானா’ என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. காரணம், வதந்திகள் ஒரு விஷ ஈயைப் போன்றவை. அது சமூகத்தில் நிலவும் வெறுப்பு, அவநம்பிக்கை, பயம் ஆகியவற்றின்மீது வந்து அமர்கிறது. தன்னுடைய நஞ்சை வெகு ஆழமாக அவற்றின் மீது செலுத்துகிறது. பற்றிக்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு வைக்கோல் போரில் அது ஒரு சின்ன தீப்பொறியைக் கொண்டு வருகிறது. எப்போதும் சந்தேகத்தின் நிழலில் நின்றுகொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, வதந்திகள் வெகு எளிதில் வெற்றி கொண்டு விடும். வடகிழக்கு மாநில மக்களுக்கும் நடந்தது அதுதான். அவர்கள் நீண்ட காலமாக இந்தியா முழுக்க உள்ளூர்வாசிகளின் வெறுப்புக்கும் சுரண்டலுக்கும் நடுவே அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ‘ஏதோ ஒரு காரணத்தால் தாங்கள் பேரழிவைச் சந்திப்போம்’ என்ற உணர்விற்கு அவர்கள் ஆட்படுவது வெகு இயல்பானது. ஒரு சிறிய பொய் அதற்குப் போதும்.



அரசாங்கமும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சொல்வதைவிட ஒரு வதந்தி உண்மையாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதிகாரபூர்வமான அமைப்புகள் ஒருபோதும் உண்மையைச் சொல்வதில்லை என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்துவிட்டார்கள். நமது பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எந்நேரமும் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகரமான செய்திகளால் மக்களைக் கொதிநிலையிலேயே வைத்துக்கொண்டிருக்கின்றன. ஊடகங்களின் இந்த பெருக்கத்திற்குப் பிறகு உண்மையையும் பொய்யையும் பிரித்தறியும் சக்தியை நாம் எப்போதோ இழந்துவிட்டோம். ‘அன்னா ஹஸாரேவும் பாபா ராம்தேவும் ஊழல் எதிர்ப்புப் போராளிகள்’ என்பதுகூட ஊடகங்கள் உருவாக்கிய ஒரு வதந்திதான். இவ்வாறு செய்தியாக நமக்குக் கிடைக்கும் எதையும் நம்பும் ஒரு மனநிலைக்கு நாம் அடிமையான பிறகு ஒரு எஸ்.எம்.எஸ். செய்தியையோ இணையத்தில் கிடைக்கும் ஒரு மார்ஃபிங் புகைப்படத்தையோ நம்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

தலைவர்கள் யாராவது இறந்துவிட்டதாக வதந்தி பரவும்போது மக்களிடம் ஒரு அதீதமான உற்சாகம் நிலவுவதைப் பார்த்திருக்கிறேன். பிள்ளையார் பால் குடிப்பதாக நாடு முழுக்க வதந்தி பரவிய நாட்களில் இந்த தேசத்தைப் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் கைவிட்டு விட்டேன்.

எங்கே இருக்கிறது அந்தரங்கம்?

சமீபத்தில் மதுரை அருகே சமயநல்லூரில் வீடுகளில் குளியலறையிலும் சமையலறையிலும் ஸ்பை கேமராக்களைப் பொருத்தி பெண்களை நிர்வாணமாகப் படம் எடுத்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எலெக்ட்ரீஷியன் மற்றும் கேபிள் டிவி பணியாளர்கள் என்பதால் இந்த வேலையை வெகு சுலபமாகச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு ஆள் தனது மனைவியையே அப்படி படம் எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. செல்போனிலும் சிடியிலும் நிர்வாணப் படங்கள் பரவுவதாகக் கேள்விப்பட்டு மூன்று பெண்கள் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் பெண்கள் குளத்தில் பாவாடையைத் தூக்கிக் கட்டிக்கொண்டு எந்த பயமோ கூச்சமோ இல்லாமல் குளித்த ஒரு காலம், நாம் பார்க்க இருந்தது. ஆனால் இன்று தாழிடப்பட்ட குளியலறையில்கூட அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.

இந்த எலெக்ட்ரானிக் யுகம் எல்லோரையும் எந்த அந்தரங்கமும் இல்லாத ஒரு அபாய வெளியில் நிறுத்திவிட்டது. ஒவ்வொரு கணமும் ஏதோ ஒரு கண் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது. வக்கிரம் பிடித்த சில கணவர்கள், தங்கள் மனைவியுடன் உறவு கொள்வதையே ரகசியமாகப் படம் எடுத்ததாகப் பல புகார்கள் வந்திருக்கின்றன. தனிப்பட்ட உரையாடல்கள் ரகசியமாகப் படமாக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் செய்தியாகின்றன. சில சமயம் அவை அதிகார வர்க்க வன்முறையையோ ஊழலையோ வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தால்கூட, பெரும்பாலான சமயங்களில் அவை தனிமனிதர்களின் மீது பெரும் அத்துமீறலாகவும் வன்முறையாகவும் செயல்படுகின்றன. பொது இடங்கள், தனி இடங்கள் எல்லாவற்றிலும் நாம் எந்தக் கணத்திலும் படமாக்கப்படலாம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உண்டாக்குகிறது.

கௌரவர்கள் சபையில் பாஞ்சாலியும் இப்படித்தான் நின்றுகொண்டிருந்திருப்பாளோ?
ரேஷன் எஸ்.எம்.எஸ் ‘ஒரு நாளைக்கு ஐந்து எஸ்.எம்.எஸ்தான்’ என்ற ரேஷன் 15 நாளைக்கு கொண்டு வந்தாலும் வந்தார்கள். எது முக்கியம், யார் முக்கியம் என்கிற கடினமான தேர்வுக்கு வாழ்வில் முதல்முறையாக தள்ளப்பட்டு விட்டேன். அதே போல எனக்கு வழக்கமாக குறுஞ்செய்தி அனுப்புகிறவர்கள் 99 சதவீதம் பேர் காணாமல் போய்விட்டார்கள். இதிலிருந்து அவர்களுடைய முதல் ‘ஐந்து’க்குள் நான் இல்லை என்கிற வருத்தமான உண்மையையும் தெரிந்துகொண்டேன். ‘ஒரு கஷ்டம் வரும்போது தான் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரியும்’ என சும்மாவா சொன்னார்கள்? இதை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்றிவிட்டால் நாட்டில் ஏராளமான காதல்கள் முடிவுக்கு வந்துவிடும்.
(இன்னும் நடக்கலாம்...)


எனக்குப் பிடித்த கவிதை : முதல் அம்பு

நான் முதல் அம்பு
பன்னெடுங்காலமாய்
இந்த மலையுச்சியில்
கிடக்கிறேன்
யார் மீதும் விரோதமற்ற
ஒருவன் வந்து
தன் வில்கொண்டு
என்னை
வெளியில் செலுத்துவானென
- ஆனந்த்.

நான் படித்த புத்தகம் : வாழ்புலம் இழந்த துயரம்

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இந்த உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் எதிரிகள் என்பதுதான் அந்தப் பிரிவினை. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரண்டு பெரும் யுத்தங்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்கா படுகொலை செய்தது மட்டுமல்ல, உலகெங்கும் சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதற்கான சூழலையும் அது உருவாக்கியது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய யுத்தத்தையும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடத்திய மறைமுக யுத்தத்தையும் சர்வதேச அரசியல் பின்புலத்தில் வைத்து ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர் போராட்டம் எத்தகைய சர்வதேச சதித்திட்டங்களின் வழியே அழிக்கப்பட்டது என்பதைப் பல்வேறு காலகட்டங்களிலிருந்து விவரிக்கிறது. விடுதலைப்புலிகளின் வரலாற்று முக்கியத்துவத்தை அழுத்தமாக இந்த நூல் சித்தரிக்கிறது.
(விலை: ரூ.60/-, வெளியீடு: சாளரம், 2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு     அவென்யு, மடிப்பாக்கம், சென்னை-600091. தொலைபேசி: 9445182142)