நியூஸ் வே 2





ஆந்திர மாநில முதல்வர் பதவி சமீபகாலமாக ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ கேட்டகிரியில் இருக்கிறது. தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டி மாற்றப்படலாம் என பேச்சுகள் அடிபட, ‘புதிய முதல்வர் யார்’ என்ற லிஸ்ட்டில் ஏராளமான அமைச்சர்கள் வரிசை கட்டுகிறார்கள். மாநில சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் பிரதாப் ரெட்டியும் பட்டியலில் இருக்கிறார். 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் ஒரு தெலுங்கு படத்தில் காங்கிரஸ் முதல்வராக நடிப்பதுதான் அவரது முக்கியத் தகுதி. படத்தின் ஷூட்டிங்கும் அவர் வீட்டில்தான் நடக்கிறது.

மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்துவிட்ட ஷீலா தீட்சித் இம்முறை அரசியலிலிருந்தே விலகக்கூடும் எனப் பேச்சு இருக்கிறது. அடுத்தடுத்து தோல்வி கண்ட பாரதிய ஜனதா இம்முறை எப்படியாவது டெல்லியை கைப்பற்றத் துடிக்கிறது. சமீபத்திய மாநகராட்சி தேர்தல்களில் கிடைத்த வெற்றி அவர்களுக்கு உற்சாகத்தைத் தர, இம்முறை ஒரு சர்ப்ரைஸ் வேட்பாளருக்கு வலைவீசி இருக்கிறார்கள். அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதியாக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை முதல்வர் வேட்பாளர் ஆக்க முயற்சிக்கிறது பாரதிய ஜனதா. கிரண் பேடி இதை ஏற்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு துர்க்கா பூஜையை வித்தியாசமாகக் கொண்டாடப் போகிறார்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். மம்தா அணிவதைப் போலவே நீலமும் வெள்ளையும் கலந்த புடவை அணிந்துதான் துர்க்கா தேவி பவனி வரப் போகிறாள். ‘‘மம்தாவை துர்க்கா தேவியின் அவதாரமாகவே மக்கள் பார்க்கிறார்கள். அதனால் இப்படிச் செய்கிறோம்’’ என்கிறார் மாநில விளையாட்டு அமைச்சர் மதன் மித்ரா. இது என்ன விளையாட்டு?  

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால், இப்போது கைதாகி சிறையில் இருக்கிறான். ரம்ஜான் நோன்பு இருந்த அவனுக்காக கடந்த ஒரு மாதமாக அதிகாலையிலேயே உணவு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் சிறை அதிகாரிகள். மூன்று வகை மட்டன் அயிட்டங்கள், உலர்ந்த பேரீச்சம்பழம், பால் - இதுதான் சாப்பாடு. சிறை அருகிலேயே சில முஸ்லிம் குடும்பங்களிடம் பேசி, தினமும் காலை ஐந்து மணிக்கு வாங்கிக் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார்கள்!

பால் தாக்கரேவின் சிவசேனாவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தவர், அவரது சகோதரர் மகன் ராஜ் தாக்கரே. தினமும் செய்திகளில் அடிபடுகிறது இவரது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி. பால் தாக்கரே போலவே பரபரப்பு அரசியல் செய்வதாக இவர்பற்றி குற்றச்சாட்டு உண்டு. பால் தாக்கரே போல பிரெஞ்சு தாடியும் வளர்க்க, மீண்டும் காப்பி குற்றச்சாட்டு எழுந்தது. தாடியை உடனே எடுத்துவிட்டார் ராஜ்.