ஷாலினிக்காக விட்டுக்கொடுக்கும் அஜித்!

இறகுப்பந்து விளையாட்டில் மாநில சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்ல வேண்டும் என்பதுதான் ஷாலினி அஜித்தின் ‘தல’யாய ஆசையாக இருக்கிறது. மனைவியை ஒரு சாய்னாவாகவோ, சானியாவாகவோ ஆக்கிப் பார்க்கும் ஆசை அஜித்துக்கும் இருக்கிறது. இதற்காக கடுமையான முயற்சியில் இருக்கிறார் ஷாலினி. சமீபத்தில் திருச்சியில் நடந்த ஸ்டேட் ரேங்கிங் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சூட்டோடு, ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தயாரான ஷாலினி நமக்காக ஒதுக்கிய நிமிடங்களிலிருந்து...

‘‘கல்யாணத்துக்குப் பிறகுதான் ஷட்டில் விளையாடவே ஆரம்பிச்சேன். ஹாபியா ஆரம்பிச்சது, ஒரு கட்டத்தில் சீரியஸா மாறியது. முறையா 2 வருஷம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ‘நீ ஏன் டோர்னமென்ட்ல ஆடக் கூடாது’ன்னு கணவர் கேட்டார். ‘ஐயய்யோ... நானா?‘ன்னு பயந்து ஒதுங்கினபோது எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்தது அவர்தான். 2006ல் சிவகாசியில் நடந்த டோர்னமென்ட்ல முதல்முறையா விளையாடினேன். செமி ஃபைனல் வரை வந்தேன். அதே வருஷத்துல ஸ்டேட் ரேங்கிங் போட்டிகள் ஆறுல விளையாடினேன். 2007க்குப் பிறகு மூன்று வருஷங்கள் பிரேக்! இப்ப ரெண்டு வருஷமா மறுபடி விளையாடறேன். திருச்சியில் நடந்த போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் விளையாடி இரண்டாம் இடம் பிடித்தேன். ‘இது சாதாரண விஷயமில்லை’ன்னு நண்பர்களும், மற்ற பிளேயர்ஸஸும் பாராட்டறாங்க. இதனால ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில், தகுதிச் சுற்றில் கலந்துகொள்ளாமலேயே நேரடியா விளையாடும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.என் வெற்றிக்கெல்லாம் காரணம் அஜித்தான். சார் இப்போ மும்பை ஷூட்டிங்கில் இருக்கார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும், ‘எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு’ன்னு வாழ்த்து சொன்னார். மாறன்னு ஒரு நல்ல பயிற்சியாளரை தேடிக் கொடுத்ததும் அவர்தான். அதோட, எனக்காக வீட்லயே நிறைய செலவு பண்ணி ஷட்டில் கோர்ட் கட்டிக் கொடுத்திருக்கார். ‘எதுக்கு இவ்வளவு செலவு செய்யணும்’னு நான் மறுத்தபோதுகூட, ‘வெளியில போய் விளையாடினா டைம் வேஸ்ட் ஆகும்; அலைச்சலும் இருக்கும். நீ வீட்லயே விளையாடு’ன்னு சொன்னார். என் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் ப்ரியத்திற்கும் பெரிய வெற்றியை அவருக்குப் பரிசா தரணும்னு ஆசைப்படுறேன்’’ என்ற ஷாலினியிடம், ‘அஜித்துடன் விளையாடும்போது ஜெயிப்பது யாராக இருக்கும்?’ என்றோம்.
‘‘ஐயோ! அவரும் சூப்பரா விளையாடுவார். ஆனா, பெரும்பாலும் நான்தான் ஜெயிப்பேன். நாங்க விளையாடும்போது அவரோட ஃபிரெண்ட்ஸ், ‘தல ஜெயிப்பார்’னு பெட்டெல்லாம் கட்டுவாங்க. ஆனால் அந்த ஆட்டத்தில் நான்தான் ஜெயிப்பேன். நான் ஜெயிக்கவேண்டும்ங்கறதுக்காக நிறைய நேரங்களில் விட்டுக்கொடுத்துடுவார். என்னோட விளையாடும்போது சீரியஸா ஆடமாட்டார். சீரியஸா விளையாடுங்கன்னு சொன்னா, ‘பிராமிஸா சீரியஸாதான் ஆடினேன். என்னை நீ ஜெயிச்சதுதான் உண்மை’ன்னு சொல்வார். அவர் இப்படி வேண்டுமென்றே அடிக்கடி தோற்றுப்போவதால், நிஜமாகவே நான் ஜெயிக்கும் போதுகூட அவரோட நண்பர்கள் நம்பமாட்டாங்க...’’
‘மகள் அனோஷ்காவுக்கு ஷட்டில் ஆர்வம் இருக்கா?’
‘‘ம்... ரொம்ப லைக் பண்றா. நான் விளையாடும்போது ஆர்வமா கவனிக்கிறா. ‘நான் ஷட்டில் சாம்பியனாகணும் மம்மி’ன்னு அடிக்கடி சொல்றா. ஷட்டில் கத்துக்க ஏழு வயசு ஆகணும். இப்போ அவளுக்கு நாலரை வயசுதான். எல்.கே.ஜி. படிக்கிறா. கொஞ்சம் வளரட்டும். விளையாட்டில் அனோஷ்கா பெரிய ஆளா வரணும்ங்கிற ஆசை எனக்கும், அவ அப்பாவுக்கும் இருக்கு. பார்ப்போம்!’’
அனோஷ்கா, ஷாலினி இருவருக்கும் ஆல் த பெஸ்ட்!
- அமலன்