வாங்க காதலிக்கலாம்





‘‘ஹாய் புனிதா!’’
‘‘ஹாய்... ரா..ம்!’’ வார்த்தைகள் சுருதி தப்பி, பலவீனமாக வந்து விழுந்தன புனிதாவின் குரலில்.
‘‘என்ன... ரொம்ப சோகமா பதில் சொல்றீங்க?’’
‘‘சேச்சே... அப்படில்லாம் ஒண்ணும் இல்லப்பா!’’
‘‘அப்படியா? ஹும்... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பொண்ணுங்களுக்கு எப்பவும் ஆம்பளைங்க உண்மை சொன்னாதான் புடிக்கும். ஆனா, அவுங்கதான் அடிக்கடி பொய் சொல்லுவாங்க, இப்ப நீங்க சொன்னா மாதிரி!’’
‘‘ஏன் அப்படிச் சொல்றீங்க... நான் ஒண்ணும் பொய் சொல்லலியே!’’
‘‘எத்தனையோ பெண்கள் வேலைக்கு, காலேஜ், ஸ்கூல்னு பஸ்லதான் போறாங்க. ஆனா வீட்ல அப்பாவோ, அண்ணனோ, ‘பஸ்ல போய்ட்டு வரதுல பிரச்னை எதுவும் இல்லதானேம்மா’ன்னு கேட்டா, ‘ஒரு பிரச்னையும் இல்லையே’ன்னு அப்பட்டமா பொய் சொல்வாங்க. சில நேரங்கள்ல இந்த மாதிரி பொய்கள் இந்தக் குருட்டு சமூகத்துக்கு தேவையாதானே இருக்கு? இல்லேன்னா, வீட்டுல இருக்குற ஆம்பளைங்க எல்லாம் ஜெயில்லதான் இருக்கணும்!’’
‘‘ஹும்... ஒரு வகையில அதுவும் உண்மைதான்!’’
‘‘சரி, உங்க பிரச்னை என்னன்னு சொல்லுங்க... ஊதிப் பெருசாக்கிடுவோம்’’ - சொல்லி விட்டு சிரித்தான் ராம்.
‘‘ம்ம்... ஆக்குவீங்க, ஆக்குவீங்க.. சும்மா கிண்டல் பண்ணாதீங்க ராம்!’’
‘‘கிண்டல்லாம் இல்லீங்க. உண்மையாவே சில பிரச்னைகளை பெருசாக்கினா சுலபமா தீத்துடலாம். தெரியுமா?’’
‘‘அப்படியா சொல்றீங்க... அப்போ இதான் பிரச்னை. போன திங்கள்கிழமை மனோஜ் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணினான்!’’
‘‘ப்பூ... இவ்ளோதானா?’’
‘‘என்ன இவ்ளோதானா..? இது என்ன அவ்ளோ சாதாரணமான விஷயமா?’’
‘‘ஆமா... இது எதிர்பார்த்ததுதானே! அழகான பொண்ணுன்னா ஆண்களோட அடுத்த மூவ் லவ்வுதான். ஆண்களோட குகைக்குள்ள வந்துட்டா அப்படித்தான் இருக்கும். இந்த ஆபீஸ்லயே க்யூட்டா இருக்கற பொண்ணு நீங்கதான்! உங்ககிட்ட யாருமே ப்ரபோஸ் பண்ணலன்னு நீங்க சொல்லிருந்தா, அதுதான் ஆச்சர்யம். இதெல்லாம் ரொம்ப சாதாரணம்தான்... சரி, அவன் ப்ரபோஸ் பண்ணினதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’’
‘‘எங்கப்பாகிட்ட பேசுங்கன்னு சொன்னேன்!’’

‘‘ஹும்... மத்தவங்ககிட்ட சொன்னதையேதான் சொல்லியிருக்கீங்க. நீங்க ரொம்ப அழகா பிறந்தது உங்க தப்பு இல்லை. அதைத் தவிர்த்துட்டுப் பார்த்தா, இந்த விஷயத்துல உங்க தப்பு எதுவும் இல்ல!’’
‘‘எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. நான் எல்லார்கிட்டயும் இயல்பாதான் பழகறேன். யாரும் எங்கிட்ட அதிகபட்ச உரிமை எடுத்துக்க விடறதில்லை. ஆனாலும் இது ஏன் நடக்குதுன்னு புரியலை. எனிவே... இத்தனை பேர் ப்ரபோஸ் பண்ணியும், நீங்க ஒருத்தர் மட்டும் இன்னும் என்கூட நட்பாவே இருக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ராம்!’’
‘‘எனக்கும் சந்தோஷம்தான் புனிதா... ஆனா பாருங்க, அந்த சந்தோஷம் இந்த நிமிஷத்தோட காலி!’’
‘‘வாட்..?’’
‘‘எனக்கும் உங்களை இந்த
நிமிஷத்துல இருந்து புடிக்க ஆரம்பிச்சுடுச்சு புனிதா. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்க காதலிக்க விரும்பறேன்!’’
‘‘யூ டூ புரூட்டஸ்...’’
‘‘நோ, பெரிய வார்த்தை எல்லாம் வேணாம்... வழக்கம்போல ராம்னே கூப்பிடுங்க! ஏன்னா, நேத்து வரை எனக்கு அப்படித் தோணல. ஜஸ்ட் இப்போதான் தோணுது...’’
‘‘அப்படி என்ன திடீர்னு..?’’
‘‘என் காதலுக்கு நீங்க தகுதியானவர்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சது. அவ்ளோதான்!’’
‘‘என்ன தெரிஞ்சது இன்னிக்கு?’’
‘‘இதுவரைக்கும் உங்கள பதினஞ்சு பசங்க ப்ரபோஸ் பண்ணிருக்காங்க... நேத்து ப்ரபோஸ் பண்ணின மனோஜையும் சேர்த்து! எல்லாருக்குமே ஒரே பதில்தான் சொல்லியிருக்கீங்க, அப்பாகிட்ட பேசுங்கன்னு! இந்தக் காலத்துப் பொண்ணுங்க லைஃப்ஸ்டைலே வேற! யாராவது ப்ரபோஸ் பண்ணிட்டா உடனே அக்சப்ட் பண்ணி, நாலு வருஷம் சிட்டி முழுக்க கூகுள் மேப்ல கூட இல்லாத தெருவெல்லாம் சுத்தறாங்க. பையன் சொத்தையே சுத்தமா கரைச்சிட்டு, கடைசில ‘ஜாதகம் ஒத்து வரல’ன்னு ஏதாவது ஒரு மொக்கை காரணத்தை சுலபமா சொல்லிட்டு கழண்டுக்குறாங்க. யாரு யாரோட இருக்காங்கனு கூட தெரியறதில்லை. சுத்தும்போது என்ன பண்ணுவீங்கன்னு கேட்டா, ஒண்ணுமே பண்ண மாட்டாங்களாம். ஒண்ணுமே பண்ணாம இருக்குறதுக்கு ஏன் சேர்ந்து சுத்தணும்? தனித்தனியாவே நட்பா இருக்கலாமே!

கேட்டா, கல்யாணம் பண்ணிக்கிட்டதும் நாலு வருஷ காதலை முழுக்க மறந்துட்டு புருஷனுக்கு உண்மையா இருப்பாங்களாம். பழைய காதலை மறக்க முடியும்னா, எப்படியும் புருஷனுக்கு உண்மையாதான் இருக்கப்போறாங்கன்னா, ஏன் நாலு வருஷம் ஜாதகம் கூட பாக்காம ஒருத்தன காதலிக்கணும்? வீட்ல பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கட்டும்னு வெயிட் பண்ணலாமே? பழைய காதலை மறக்க முடியாட்டா, கல்யாணம் பண்ணிக்கிட்டவன் என்ன இளிச்சவாயனா? சரி எல்லா எழவையும் பண்ணியாச்சு. கட்டிக்கிற இளிச்சவாயன்கிட்டயாச்சும் உண்மையைச் சொல்லிட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லலாமேன்னா, ‘கிடைக்கப் போற அன்பை கெடுக்க விரும்பல’ன்னு வியாக்யானம் வேற...’’

ராமின் கண்களையே இமைக்காமல் புனிதா பார்த்துக் கொண்டிருக்க, மடைதிறந்த வெள்ளமாகித் தொடர்ந்தான் ராம்.
‘‘நாட்டுல தன்னோட மனைவிக்காகன்னு மட்டும் கற்போட காத்திருக்கிற ஆம்பளைங்க இன்னமும் இருக்காங்கதான். மத்தவங்க எப்படின்னு எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான். பரீட்சைக்கு காலைல நாலு மணிக்கு அலாரம் வச்சி எழுந்ததும் புத்தகம் முன்னாடி உக்காராம பல் தேய்ச்சிட்டு, குளிச்சிட்டு, சாமி கும்பிட்டுட்டு வந்து படிக்க உக்காருற மாதிரி, வாழ்க்கைத்துணைக்குன்னு கவனமா சேகரிக்கிற தவம். முக்கால்வாசிப் பொண்ணுங்க மேலோட்டமா பாக்க அப்படித்தான் தெரியறாங்க. ஆனா, அவுங்கள எங்கயாச்சும் மொபைலோட மணிக்கணக்கா பாக்க முடியுது... அதுவும் ரகசியமான குரல்ல போனுக்கே கேக்காதமாதிரி பேசறாங்க!

சில பொண்ணுங்க எப்பவும் பொண்ணுங்க க்ரூப்போடதான் வராங்க, போறாங்க. ஆனா, ஆபீஸ்ல சீட்ட விட்டு எழுந்துக்காம மணிக்கணக்கா சேட்டிங் பண்றதப் பாக்குறப்போ மனசு விட்டுப்போயிடுது. வாழ்க்கைத்துணைக்காக தவம் இருக்குற பெண்களைப் பாக்குறது கஷ்டமோன்னு தோணிடுது. ஆனா, அப்படி ஒரு பொண்ணு கண்ணு முன்னாடி நிக்கும்போது அந்தப் பொண்ணை சொந்தமாக்கிக்கணும்னு தோணுறத தவிர்க்க முடியல புனிதா!’’
‘‘ஹும்... அப்படியே இதயம் முரளி எஃபெக்ட் சார்... இப்போ என்ன சொல்ல வர்றீங்க?’’
‘‘சொல்ல வர்றது என்ன... சொல்லி முடிச்சாச்சே. ரிசல்ட்டுக்காகத்தான் வெயிட்டிங்!’’
‘‘ஓ, நான் எந்த ரிசல்ட்டும் சொல்றதா இல்லையே..!’’
‘‘அதான் தெரியுமே. நான் சொன்னது உங்க அப்பாகிட்ட!’’
‘‘வாட்! அப்பாகிட்ட பேசினீங்களா?’’

‘‘ஆமா, நீங்க ரெகார்டட் மெஸேஜ் மாதிரி ‘அப்பாகிட்ட பேசுங்க’ன்னு சொல்லிடுவீங்கன்னு எனக்குத்தான் தெரியுமே. அதான் உங்க அப்பாகிட்டயே பேசிட்டேன்...’’
‘‘ஓ காட், என்னன்னு சொன்னீங்க? அப்பா என்ன சொன்னார்?’’

‘‘ஐயோ... அதை ஏன் கேக்கறீங்க? எனக்கு ஒரே டென்ஷன், என்ன சொல்வாரோன்னு! பட், அவர் வெரி கூல். ‘உங்க பொண்ணை பாத்ததுக்கப்புறம், பழகினதுக்கப்புறம் உங்க பொண்ணு மாதிரி எனக்கும் ஒரு பொண்ணை பெத்து வளர்க்கணும்னு ஆசையா இருக்கு அங்கிள்’னு ஒரே ஒரு வரிதான் பேசினேன். பட்டுன்னு ஓகே சொல்லிட்டார். ரொம்ப சிம்பிளா முடிஞ்சுடுச்சு...’’
‘‘ரியலி... அப்ப ஓகேவா?’’

‘‘நூத்துக்கு நானூறு பர்சென்ட் ஓகேதான். அந்த தைரியத்துல தான் மாயாஜால்ல மூவிக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன்!’’
‘‘ஓஹோ... அப்படிப் போகுதா கதை..? பட், என்னதான் அப்பா ஓகே சொல்லிட்டாலும் இதப் பத்தி நான் அப்பாகிட்டதான் கேட்டுச் சொல்லணும். அப்பா, அம்மா ரெண்டு பேரும் எனக்காக வெயிட் பண்ணிட்டு தனியா இருப்பாங்க!’’

‘‘ஐயோ ராமா! உங்க அப்பா, அம்மா ஏன் தனியா இருக்கணும்?’’
‘‘ஆமா, நான் உங்களோட சினிமாவுக்கு எல்லாம் எப்படி வர முடியும், அப்பா என்ன நினைப்பார்?’’
‘‘ஹலோ... ஹலோ... சினிமாவுக்கு டிக்கெட் வாங்கினது நானும் உங்க அப்பாவும் படம் பாக்க. நீங்க பொறுப்பா வீட்டுக்குப் போங்க... சரியா?’’
‘‘வாட், நீங்களும் அப்பாவும் சினிமாவுக்குப் போறீங்களா? என்ன நடக்குது இங்க...’’
‘‘ஆமா, உங்க அப்பாகிட்ட நேத்தே கேட்டேன், எப்படி அங்கிள் இப்படி ஒரு பொண்ண பெத்து வளர்த்தீங்கன்னு. ‘நாளைக்கு சொல்றேன்’னு சொல்லிருக்கார். அந்த ரகசியத்தை அவர்கிட்ட கேக்கணும்னுதான் இந்த மூவி ப்ளான். ஸோ, நீங்க பத்திரமா, நேரத்தோட வீட்டுக்குப் போகலாம். சரியா?’’ என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் ராம் விலகி நடக்க, அவன் நடந்து செல்வதை ரசனையாய் கீழுதட்டைக் கடித்தவாறே பார்த்துக்கொண்டிருந்தாள் புனிதா.