ஒரு ஸ்டாம்பின் விலை 3.5 கோடி ரூபாய்!





ஸ்டாம்ப் கலெக்ஷன்... கிரிக்கெட், செஸ், மீன் வளர்ப்பு, செடி வளர்ப்பு மாதிரி இதுவும் ஒரு பொழுதுபோக்கு என்றுதானே நினைக்கிறீர்கள்! அதுதான் இல்லை. ஹாபி என்பதைத் தாண்டி உலக அளவில் டீலிங் செய்யும் ஒரு காஸ்ட்லி பிசினஸாகவும் இது விளங்குவதாக காலரைத் தூக்கிவிட்டுச் சொல்கிறார்கள், சென்னையில் இயங்கும் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர் சங்கத்தினர். 600 பேருடன் இயங்கும் இந்த அமைப்பினர், சமீபத்தில் தங்கள் அரிய சேகரிப்புகளை காட்சிக்கு வைத்து அசத்தினார்கள். வருமானமுள்ள இந்த பொழுதுபோக்கின் இன்றைய நிலவரம் குறித்து நம்மிடம் பேசினார் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணதாஸ்.

‘‘ஸ்டாம்ப் கலெக்ஷன்ல ரெண்டு வகை இருக்குது. ஒண்ணு, பொழுதுபோக்காக சேகரிக்கறது. மத்தது முதலீட்டுக்காக சேகரிக்கறது. இன்னிக்கு உலகம் பூராவும் சில ஸ்டாம்ப்களை மட்டும் ரொம்ப அரிய வகைன்னு சொல்றாங்க. அந்த வகைகளுக்கு உலக மார்க்கெட்லயும் விலை ஏறிக்கிட்டே போகும். அந்த ஸ்டாம்ப்களைத் தேடிப் பிடிச்சு சேகரிச்சு விக்கிறதுதான் ஸ்டாம்ப் கலெக்ஷன் தொழில்’’ என்றவர், சில அரிய வகை தபால் தலைகளின் படங்களை நமக்குக் காண்பித்தார்.

‘‘இந்த ஸ்டாம்ப் ‘மொரீஷியஸ் போஸ்ட் ஆபீஸ் ஸ்டாம்ப்’னு சொல்லப்படுறது. உலகத்துலயே காஸ்ட்லியானது. இதோட மதிப்பு மூன்றரை கோடி ரூபாய்னு சொல்றாங்க. இந்த ஸ்டாம்ப்ல என்ன விசேஷம்னா, ‘போஸ்டேஜ்’னு இருக்க வேண்டிய ஒரு வார்த்தை, ‘போஸ்ட் ஆபீஸ்’னு தவறுதலா பிரின்ட் ஆயிடுச்சு. இதைக் கண்டுபிடிச்ச உடனேயே இந்த ஸ்டாம்ப் அச்சடிக்கறதை நிறுத்திட்டாங்க. ஆனா, அதுக்குள்ள சில ஸ்டாம்ப்ஸ் வெளியாகி மக்கள்கிட்ட புழக்கத்துக்கு வந்துடுச்சு. அந்த சில ஸ்டாம்ப்களுக்குத்தான் இந்த மரியாதை.

அதே மாதிரி, விக்டோரியா மகாராணியோட தலையோட இருக்கும் ‘பிளாக் பென்னி’ங்கற ஸ்டாம்பும் ரொம்ப ஸ்பெஷல். உலகின் முதல் அச்சடிக்கப்பட்ட தபால் தலைன்னு இதைச் சொல்லலாம். 1840ம் ஆண்டு இங்கிலாந்துல பிரின்ட் ஆன இந்த ஸ்டாம்புக்கு இப்போதைய மார்க்கெட் மதிப்பு 50,000 ரூபாய்.

அடுத்து நம்ம இந்தியாவுலயே பிரிட்டிஷ்காரங்க பிரின்ட் பண்ணின விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த ஸ்டாம்ப். 1854ல அச்சடிக்கப்பட்ட இந்த ஸ்டாம்ப் அரையணா, ஓரணா, ரெண்டணா, நாலணானு நாலு வித மதிப்புல வெளியாச்சு. ஆனா, இதுல நாலணா மதிப்புள்ள ஸ்டாம்பைத்தான் உலகம் பொக்கிஷமா பார்க்குது. ஏன்னா, இதுல விக்டோரியாவின் உருவம் தவறுதலா தலைகீழா பிரின்ட் ஆயிடுச்சு. இதனாலேயே இதோட மதிப்பு ரூ.எழுபது லட்சமாயிடுச்சு’’ என்றார் பாலகிருஷ்ணதாஸ்.

தன் மகன் மகேஷும் ஒரு ‘ஸ்டாம்ப் கலெக்டர்’தான் என்று அவர் அறிமுகப்படுத்தி வைக்க, இந்திய தபால் தலைக்கு உலக அளவில் இருக்கும் மதிப்பு பற்றி மகேஷ் பேசினார்...
‘‘1948ல மகாத்மா காந்தியோட உருவம் பதிச்ச ஸ்டாம்ப் வெளியாச்சு. ஒன்றரை அணா, மூன்றரை அணா, பன்னிரெண்டு அணா, பத்து ரூபாய்னு பல மதிப்புல இது வெளிவந்துச்சு. ஆனா, இதுல ஒருசிலதில் மட்டும் காந்தி படத்துக்குக் கீழ ‘சர்வீஸ்’னு ஒரு வார்த்தை அச்சாகியிருக்கும். இந்த சர்வீஸ் ஸ்டாம்புகளை கவர்னர் ஜெனரல் மட்டும்தான் பயன்படுத்த முடியும். அப்போ கவர்னர் ஜெனரலா இருந்த ராஜாஜிதான் இதைப் பயன்படுத்தினார். இப்ப இந்த ஸ்டாம்ப்கள் எல்லாமே காஸ்ட்லிதான். பத்து ரூபாய் ஸ்டாம்ப் மட்டும் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி. அதாவது, ரூ.25 லட்சம்!’’ என்ற மகேஷ், இந்த தபால் தலைகளின் விற்றல், வாங்கல் முறைகளையும் விவரித்தார்...



‘‘வெளிநாடுகள்ல இந்த மாதிரி அரிதான ஸ்டாம்ப்களை ஏலம் விடுற ஏஜென்ஸிகள் நிறைய இருக்கு. ஒவ்வொரு அரிய ஸ்டாம்ப்பையும் அதோட இப்போதைய மார்க்கெட் மதிப்பையும் அவங்களே கேட்டலாக் புத்தகமா வெளியிடுறாங்க. இதனால வாங்குறவங்க, விக்கிறவங்க ரெண்டு பேருமே ஸ்டாம்ப்பின் மதிப்பு தெரிஞ்சு கைமாத்திக்க முடியுது.

சில பேருக்கு அவங்ககிட்ட இருக்குற ஸ்டாம்ப்பின் மதிப்பு தெரியாது. அதனால இவங்க அதை விற்கும்போது ஏமாறலாம். அரிய வகை ஸ்டாம்பா இருந்தா கூட, தாள் பழுப்பு கலர்ல ஆகிட்டாலோ, ஓரத்துல இருக்குற பற்கள் காணாம போனாலோ, கிழிஞ்சிருந்தாலோ, போலி ஸ்டாம்பா இருந்தாலோ மதிப்பு குறைவு. எல்லா ஸ்டாம்ப்லயும் வாட்டர் மார்க்னு ஒரு அடையாளம் இருக்கும். இந்தியாவுல அச்சடிக்கப்பட்ட ஆரம்பகால ஸ்டாம்ப்கள்ல ஸ்டார் வடிவம் இருந்தது. அப்புறம் அசோகரின் தூண் இருந்தது. நல்ல விலை வேணும்னா இதெல்லாம் இருக்கணும்.

அதே மாதிரி, கவர்ல ஒட்டியிருக்குற அரிய வகை ஸ்டாம்ப்களுக்கு தனி மதிப்பு உண்டு. யார் அனுப்பினாங்க, யாருக்கு போய்ச் சேர்ந்தது, எங்க இருந்து அனுப்பப்பட்டதுன்னு எக்ஸ்ட்ரா தகவல்களை அது தர்றதுதான் இதுக்குக் காரணம். இதெல்லாம் தெரியாம ஸ்டாம்ப்ல முதலீடு செய்யிறது தப்பு’’ என்று முடித்தார் அவர்.
வருங்காலத்தில் டிஸ்ட்ரிக்ட் கலெக்டரை விட பெரிய அந்தஸ்தாகிவிடும் போலிருக்கிறது ‘ஸ்டாம்ப் கலெக்டர்’ என்ற தகுதி!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்