ச்சீய் பக்கங்கள்

‘I didn't even know my bra size until I made a movie.’  - நடிகை ஏஞ்சலினா ஜோலி ப்ரா என சுருக்கமாக அழைக்கப்படும் ப்ரேஸியர் என்ற உள்ளாடை பெண்களின் மார்புகளை மறைக்கவும் (சில பல சமயங்களில் நிறைக்கவும்!), கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் நிமிர்ந்து நிற்கச் செய்யும் சப்போர்ட் உபகரணமாகவும் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. ப்ரா என்பது இன்று ஃபேஷன் மட்டுமல்ல; அத்தியாவசியம். ஆதிகாலந் தொட்டே மனித இனம் ஏதாவது வடிவில் ப்ராக்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. கிமு 14ம் நூற்றாண்டில் மினோயன் என்ற கிரேக்க நாகரிகத்தில் பெண் அத்லெடிக் வீராங்கனைகள் ப்ராவுக்கும் பிகினிக்கும் இடைப்பட்ட உள்ளாடையை அணிந்திருக்கின்றனர். கி.மு. 2500ல் மார்புகளை தூக்கி நிறுத்தி நன்கு பார்வைக்கு காட்டும்படி உள்ளாடைகளை அணிந்தனர். கி.மு. 450வாக்கில் ரோம் பெண்கள் தங்கள் மார்பக அளவைக் குறைத்துக் காட்ட, பேண்ட் போன்ற கச்சையைப் பயன்படுத்தினர். பண்டைய எகிப்தில் பொதுவாய் பெண்கள் திறந்த மார்புகளோடே வலம் வந்தனர். சிலர் ஒருபுறம் தோள்பட்டை சுற்றிய ஸ்ட்ராப் வைத்த மேலாடைகள் அணிந்தனர்.

நம் இந்தியாவில் ஹர்ஷர் காலத்தில் (கி.பி. முதல் நூற்றாண்டு) பெண்கள் ‘கஞ்சுகா’ என்ற மார்க்கச்சை அணிந்தனர். இதற்கென ஸ்பெஷல் டெய்லர்களும் இருந்தனர்! சங்க காலத் தமிழகத்தில் ப்ரா பயன்படுத்தியதாய்த் தெரியவில்லை. பிற்பாடு மார்க்கச்சைகள் பழக்கத்துக்கு வந்தன. பதினாறாம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசர் இரண்டாம் ஹென்றியின் மனைவி கேத்ரீன், ‘அரசவையில் பெண்கள் பருத்த இடையுடன் வரலாகாது’ என்ற சட்டம் கொண்டு வந்தார். இதனால் ஸ்டீல் கார்ஸெட்கள் புழக்கத்துக்கு வந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் கார்ஸெட்களின் ஆட்சிதான்!

19ம் நூற்றாண்டில் பெண்கள் தமது உடை குறித்து சுதந்திர பிரக்ஞை கொள்ளத் துவங்கினர். 1859ல் ப்ராவுக்கான முதல் மாதிரியை ஹென்றி லெஷர் என்பவர் வடிவமைத்தார். 1863ல் லூமன் சேப்மன் என்பவர் இந்தப் புதிய உடைக்கு பேடன்ட் பெற்றார். 1866ல் பிரிட்டனில் முதல் ப்ரா தயாரிக்கப்பட்டது. 1904ம் ஆண்டு சார்லஸ் டெபொவைஸ் என்பவர் இதற்கு ‘ப்ரேஸியர்’ என்று பெயரிட்டார். 1907ம் ஆண்டு இச்சொல் முதன்முதலாக அமெரிக்காவின் ‘Vogue’   பத்திரிகையில் பயன்படுத்தப்பட்டது. 1911ல் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டது.

1910ல் மேரி ஃபெல்ப்ஸ் என்ற 19 வயதுப் பெண், தன் பருத்த மார்புகள் காரணமாக அப்போது பரவலாக இருந்த கார்ஸெட்களை அணிய சங்கடப்பட்டார். அவர் இரு பட்டுக் கைக்குட்டைகளை ரிப்பன் கொண்டு இணைத்து தனக்கென ஒரு புதுவகை உள்ளாடையை உருவாக்கினார். அதுதான் நவீன ப்ராக்களின் துவக்கப்புள்ளி. 1914ல் அவர் பேடன்ட் வாங்கி வியாபாரம் தொடங்கினார். அவர் கணவருக்கு இந்தத் தொழிலில் விருப்பமில்லாததால், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 1,500 டாலர்களுக்கு தன் பேடன்ட் உரிமத்தை விற்றார். இன்று வார்னர் பிரதர்ஸ் மிகப் பெரிய ப்ரா உற்பத்தி நிறுவனம்!

முதல் உலகப்போரின்போது பெண் சிப்பாய்கள் சீருடைக்குள் ப்ரா அணிய வேண்டி இருந்தது. அப்போதுதான்பெண்கள் கும்பலாய் கார்ஸெட்டிலிருந்து ப்ராவுக்கு மாறினர். 1928ல் இடா மற்றும் வில்லியம் ரோஸெந்தால் என்ற ரஷ்ய தம்பதியர், ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பளவு வெவ்வேறாக இருப்பதைக் கவனித்து வேறுபட்ட அளவு கொண்ட ப்ராக்களைத் தயாரித்தனர். இதைத் தொடர்ந்து 1935ல் வார்னர் நிறுவனம் கப்   A, B, C, D என்ற அளவுகளில் ப்ராக்களை விற்பனை செய்யத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தேசப் பற்றுடன் ப்ரா பற்றும் பரவலானது. ‘புல்லட் ப்ரா’ போன்ற யுத்த தொடர்புடைய பெயர்களில் ப்ராக்கள் விற்கப்பட்டன. ப்ரா மிக சகஜமான ஓர் ஆடையாக உருவெடுத்தது அப்போதுதான். ஃப்ரெட்ரிக் மெலிங்கர் 1948ல் ‘ரைசிங் ஸ்டார்’ என்ற முதல் புஷ் அப் ப்ராக்களை உருவாக்கினார். 1959ல் வார்னர் நிறுவனத்தார் முதல் எலாஸ்டிக் ப்ராக்களை அறிமுகப்படுத்தினர்.தொண்ணூறுகளில் காற்று, நீர், சிலிக்கான் என ஏதாவது அடைக்கப்பட்ட, க்ளீவேஜை எடுப்பாய்க் காட்டும் ப்ராக்கள் உருவாக்கப்பட்டன. இன்று ஃபுல்கப், டெமிகப், சாஃப்ட்கப், பேக்லெஸ், ஸ்ட்ராப்லெஸ், அன்லைன்ட், பேடட் ப்ரா என பலவகை வந்தாயிற்று. குழந்தைக்குப் பாலூட்ட வசதியாக நர்சிங் ப்ரா, ஆண்களுக்கு பெரிதாக வளர்ந்த மார்புகளை மறைக்க ‘மேல் ப்ரா’வும் இருக்கிறது.

75 முதல் 85 சதவீதம் பெண்கள் தமக்குப் பொருந்தாத தவறான அளவு ப்ராக்களையே பயன்படுத்துகிறார்கள். இதற்காக அமெரிக்க சாஃப்ட்வேர் எஞ்சினியர்களான ஆர்த்தி ராமமூர்த்தியும் (பூர்வீகம் சென்னை), மிச்செல் லேமும் இணைந்து ஓர் இணையதளம் உருவாக்கி இருக்கிறார்கள். பல சர்வேக்கள் மூலம் கண்டடைந்த அல்காரிதத்தைப் பயன் படுத்தி சில எளிய கேள்விகள் மூலம் ஒவ்வொரு பெண்ணுக்குமான சரியான ப்ரா சைஸை அடையாளம் காட்டுகின்றனர்.

சிலருக்கு மார்பு வலி, தோல் அரிப்பு போன்றவை ப்ரா அணிவதால் வருகின்றன. ‘Dressed to Kill’   என்ற தமது புத்தகத்தில் சிட்னி ராஸ் சிங்கர், சோமா க்ரிஸ்மேய்கர் இருவரும், ‘‘ப்ரா அணிவதால் கேன்சர் கூட வரும்’’ என்று பயமுறுத்துகிறார்கள். ‘விக்டோரியாஸ் சீக்ரெட்’ நிறுவனம் காஸ்ட்லி ப்ராக்களை உருவாக்குவதில் புகழ் பெற்றது. 2001ல் இந்நிறுவனம் தயாரித்த- 69 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள - ‘ஹெவன்லி ஸ்டார்’ ப்ராவே இன்றைய தேதியில் உலகின் விலையுயர்ந்த ப்ரா. இதில் 1,200 நீலக்கற்களும், 90 கேரட் மரகத வெட்டு வைரம் ஒன்றும் பதிக்கப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு இறந்த மர்லின் மன்றோவின் ப்ரா ஒன்று, 2009ம் ஆண்டு லண்டனில் 5,200 டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. 2010ல் 7,000 டாலர்களுக்கு அவரது இன்னொரு ப்ரா ஏலம் எடுக்கப்பட்டது. தற்போது நல்ல விஷயங்களுக்காக நடிகைகள் ப்ராக்களை ஏலம் விடுகின்றனர். லேடி காகா தன் கார்ஸெட்டை 5,000 டாலர்களுக்கு ஏலத்தில் விற்றார். அந்தப் பணத்தை ஹைதி பூகம்ப நிவாரணத்துக்கு வழங்கினார்.

நியூசிலாந்தில் ஒரு பிரபல டூரிஸ்ட் ஸ்பாட் ‘ப்ரா வேலி’. சாலையை ஒட்டி இருக்கும் ஒரு கம்பி வேலி முழுக்க ப்ராக்கள் தொங்குகின்றன. தினம் தினம் வரும் பெண் டூரிஸ்ட்கள், வேலிக்குத் தத்தம் பங்களிப்பை அளித்துச் செல்கின்றனர். பெண்களைப் பிடித்தும், ஆண்களுக்குப் பிடித்தும், உலகம் முழுக்க மக்கள் மனதில் ப்ராக்கள் சிம்மாசனமிட்டிருந்தாலும் அவ்வப்போது எதிர்ப்புகளையும் சந்திக்கின்றன. பெண்களை போகப் பொருளாகப் பயன்படுத்துவதை எதிர்த்து அறுபதுகளில் பெண்ணிய அமைப்புகள் ப்ரா எதிர்ப்பு மற்றும் எரிப்புப் போராட்டங்கள் நடத்தினர். 1968ல் அட்லாண்டிக் சிட்டியில் ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியின்போது நிகழ்ந்த ப்ரா எரிப்புப் போராட்டம் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியது.1969ல் ருலால்ஃப் கிறிஸ்டியன் என்ற ஃபேஷன் வரலாற்று ஆய்வாளர் ‘ப்ராவுக்கு அஞ்சலி’ என்ற தலைப்பில் ‘ப்ராக்கள் விரைவில் அழியும்’ என்று ஆரூடம் சொல்லி ஒரு கட்டுரை எழுதினார். பொதுவாக பிரபலங்களே அந்தந்த காலகட்டங்களின் ஃபேஷனை நிர்ணயிக்கிறார்கள். இப்போது ப்ரிட்னி ஸ்பியர்ஸ், பாரிஸ் ஹில்டன் போன்ற பிரபலங்கள் ப்ரா அணியாமல் உலா வருவது சகஜமாகி வருகிறது. ஆனாலும் ப்ராக்கள் இன்றும் பெண்களின் அந்தரங்க இஷ்ட சங்கதியாக நீடித்து வருகிறது. ஆண்கள் உள்ள வரை பெண்கள் ப்ராக்களை பகிஷ்கரிக்க மாட்டார்கள்!

ப்ரேஸியர்

புவியீர்ப்பு விசை
எதிர்க்கும் போரில்
விழியீர்ப்புப் பசை
பூசியபடி நிற்கும்
பருத்தி வீரன்.
- கவிஞர் காத்துவாயன்

Stats சவீதா

*  சராசரியாக ஒரு பெண்ணிடம் 9 ப்ரேஸியர்கள் உள்ளன.
*  மேற்கத்திய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் 90 % பெண்கள் ப்ரா அணிகிறார்கள்.
*  உலகெங்கும் ஒரு நாளில் 40 லட்சம் ப்ராக்கள் உற்பத்தியாகின்றன.
*  ஆண்டுதோறும் 88,732 கோடி ரூபாயை ப்ராக்களுக்கென செலவழிக்கிறார்கள்.
*  கடந்த 15 ஆண்டுகளில் சராசரி ப்ரா சைஸ் 34  ஙியிலிருந்து 36சி ஆகி விட்டது.