ஆட்டம் காண்கிறாரா சச்சின்?

பெயரைக் கேட்கும்போதே உலகின் எந்த பவுலருக்கும் உள்ளுக்குள் உதறல் எடுக்க வைப்பவர் சச்சின். கால் நூற்றாண்டாக இதே நிலைதான்; இன்றும் கூட அதில் மாற்றம் இல்லை. ஆனால், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை கிளீன் போல்டு ஆனதால், 'உடனடியாக ஓய்வு பெற வேண்டும்’ என்று அவருக்கு அட்வைஸ்கள் பறக்கின்றன.

‘‘டிராவிட், லக்ஷ்மண் கூட கடைசி கட்டத்தில் இப்படித்தான் தடுமாறினார்கள். ஸ்டம்ப்புகளைக் குறி வைத்து சற்று அளவு கூடுதலாக வீசப்படும் பந்துகளை சச்சினால் சமாளிக்க முடியவில்லை. வயதாகிவிட்டதால் பார்வை மங்கிவிட்டது. நினைத்த ஷாட்டை விளையாட உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஃபுட் ஒர்க் சுத்தமாக இல்லை...’’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

தனது ஆட்டத்தில் அவருக்கும் திருப்தி இல்லை என்பது பெங்களூர் டெஸ்ட்டில் கிளீன் போல்டு ஆனபோது நன்றாகத் தெரிந்தது. வழக்கமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக வெளியேறும் சச்சின், அன்று மட்டையை ஆக்ரோஷமாகச் சுழற்றி தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

‘சாதிக்கவோ, சம்பாதிக்கவோ இனி மிச்சம் மீதி எதுவும் இல்லை என்ற அளவுக்கு எல்லா வகையிலும் சிகரம் தொட்டவருக்கு இந்த நிலை தேவையா? கவுரவமாக விலகிக் கொண்டு இளைஞர்களுக்கு வழி விடலாமே’ என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும், அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கங்குலி, டிராவிட், லக்ஷ்மண் என்று அனுபவ வீரர்கள் ஒவ்வொருவராக வெளியேறி, இந்திய அணி புதிய தலைமுறையின் கைகளில் ஒப்படைக்கப்படுவது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு மாற்றம் எந்த அணியையும் நிலைகுலையச் செய்யும் என்றாலும், இந்திய அணி அதிலும் கூட பெரிய சரிவை சந்திக்காமல் எதிர்நீச்சல் போட்டு கரையேறி இருக்கிறது. புஜாரா, கோஹ்லி ஆட்டம் அதை உறுதி செய்துள்ளது. அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என்று பலம் வாய்ந்த அணிகளுடன் மோத உள்ள நிலையில், சச்சின் இப்போது ஓய்வு பெறுவது சரியான முடிவாக இருக்காது. சச்சினின் ஆட்டத்தை சமீபத்திய தோல்விகளின் அடிப்படையில் மதிப்பிடுவது தவறு.

டென்னிஸ் எல்போ பாதிப்பால் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் சற்றே திணறியபோது கூட இப்படித்தான் கடும் விமர்சனத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்து அடுக்கடுக்காக அவர் சாதனைகளைப் படைத்ததை மறுக்க முடியாது. இப்போதும் கூட, ‘சச்சின் ரன் மெஷின் இந்த நெருக்கடியை சமாளித்து மீண்டும் முழு வேகத்தில் இயங்கும்’ என்று கவாஸ்கர், மஞ்ரேக்கர் உட்பட பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். டாப் அணிகளோடு மோதும்போது, தலைப்புக் கேள்விக்கான விடை நிச்சயமாகத் தெரிந்துவிடும்.            
- பா.சங்கர்