அவநம்பிக்கை

‘‘ஏங்க இப்பல்லாம் ஆபீஸ்ல இருந்து வந்தாலே டல்லா இருக்கீங்க?’’ - ஹரியிடம் கேட்டாள் அற்புதா.
‘‘ப்ச்... இந்த ஆபீஸே எனக்குப் பிடிக்கல. நான் வேலைக்கு சேர்ந்து மூணு மாசமாகியும், எம்.டி என் மேல் அவநம்பிக்கையாகவே இருக்கார். நான் செய்யற வேலையை எல்லாம் இன்னொரு தடவை செக் பண்றார். நான் கரெக்ட் டைமுக்குஆபீஸுக்கு வந்தேனா, லன்ச் பிரேக் முடிஞ்சு ஒழுங்கா வந்தேனான்னு கூட பியூன்கிட்ட கேக்கறாராம்!’’
அற்புதாவுக்கு கோபம் வந்தது.
‘‘அவநம்பிக்கை பேர்வழிகள்கிட்ட இருக்க வேணாங்க. இந்த மாசத்தோட ரிசைன் பண்ணிடுங்க. உங்க திறமைக்கு வேற வேலையா கிடைக்காது? இப்போதைக்கு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு குழந்தைகளோட ஊருக்குப் போய்ட்டு வரலாம்!’’ என்றாள்.
‘‘மிஸ்டர் ஹரி, இந்த மாசத்துல இருந்து உங்களுக்கு 5 ஆயிரம் இன்க்ரிமென்ட் போட்டிருக்கேன்’’ என்று சொல்லி கை கொடுத்தார் எம்.டி.
ஹரிக்கு மகிழ்ச்சி + குழப்பமாக இருந்தது. எம்.டியின் உதவியாளர்தான் அதைத் தீர்த்து வைத்தார்.
‘‘எம்.டிக்கு இப்பவும் உங்க மேல அவநம்பிக்கைதான் சார். நீங்க ரெண்டு நாள் லீவ் போட்டதும், வேற வேலைக்குத்தான் முயற்சி பண்றீங்களோன்னு பயந்துட்டார். உங்களை இங்கேயே லாக் பண்ணத்தான் இன்க்ரிமென்ட்!’’ என்றார் அவர்.
எம்.டியின் அவநம்பிக்கை ஹரியைப் பார்த்து ‘ஹாய்’ சொன்னது.