பட்டாசு பலிகளுக்கு யார் காரணம்?





இதுவரை தமிழகம் இப்படி ஒரு மோசமான வெடி விபத்தைச் சந்தித்ததில்லை. 38 உயிர்கள் சிதறிக் கருகிவிட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். கடந்த இரண்டு வருடங்களில் இது 9வது விபத்து. ஒவ்வொரு தீபாவளியின்போதும், சிவகாசி மக்களின் ரத்தக்கறை படிந்த பட்டாசுகளைத்தான் நாம் வெடித்து மகிழ்கிறோம்.

பட்டாசு தயாரிப்பில் சீனா, சுவீடனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்திய மார்க்கெட்டில் 90 சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தியாகிறது. சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் நேரடியாகவும், 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் இத்தொழில் சார்ந்து வாழ்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கு மேல் வர்த்தகம் நடக்கிறது. நம்மைவிட பல மடங்கு பட்டாசு தயாரிக்கும் சீனாவில் விபத்துகளோ, உயிரிழப்புகளோ ஏற்படுவதில்லை. இங்கு மட்டும் ஏன் இப்படி..?

‘‘பட்டாசுத் தொழிலை நாம் பொம்மை செய்யும் தொழில் போலப் பார்க்கிறோம். அதை முறைசார்ந்த தொழிலாக மாற்றி கண்காணிப்புகளை அதிகப்படுத்தாததே உயிரிழப்புகள் ஏற்படக் காரணம்’’ என்கிறார் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன்.

‘‘சீனாவில் பட்டாசுத் தொழிற்சாலைகளை நேரில் பார்த்திருக்கிறேன். விதிமுறைகளை சிறிது மீறினாலும் அங்கீகாரம் ரத்தாகும்; கடும் தண்டனையும் உண்டு. ஆனால் இங்கு பல லட்சம் பேர் பணியாற்றக்கூடிய, பல்லாயிரம் கோடி பரிவர்த்தனை நடக்கக்கூடிய, ஆபத்து நிறைந்த இந்தத் தொழிலை விளையாட்டுத்தனமாக நிர்வகிக்கிறார்கள். யாருக்கும் பொறுப்பில்லை. பட்டாசு, பொம்மை இல்லை. ஃபேன்சி ரக பட்டாசுகளுக்கு ஒரிஜினல் வெடிகுண்டுகளுக்குப் பயன்படுத்தும் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு பயிற்சி இருக்கிறதா..? தொழிற்சாலைகளுக்கு தரக்கட்டுப்பாடு இருக்கிறதா..? கண்காணிப்பு அமைப்புதான் வலுவாக இருக்கிறதா..? எதுவும் இல்லை. தற்போது விபத்துக்குள்ளான தொழிற்சாலையின் உரிமத்தை சில நாட்களுக்கு முன்பு ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் உரிமையாளர் ஆளுங்கட்சிக்காரர் என்பதால் தொடர்ந்து நடத்தியிருக்கிறார். அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

எந்தத் தவறையும் பணம் கொடுத்தால் மறைக்க முடியும் என்ற நிலைதான் இருக்கிறது. அசம்பாவிதங்கள் நடந்தபிறகு கொஞ்ச நாளைக்கு பரபரப்பாக சோதனை நடத்துவார்கள். அதோடு முடிந்து விடும். போன உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது, முதலில் அதிகாரிகள்தான்! ரெய்டு நடத்துவது, தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்வது, வேண்டியது கைமாறியதும் கண்டு கொள்ளாமல் விடுவது... இன்று நேற்றல்ல, 20 வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. லைசென்ஸ் ஒருவர் பெயரில் இருக்கும்; வேறு யாரோ ஒருவர் குத்தகைக்கு எடுத்து தொழிற்சாலை நடத்துவார். வெடிமருந்தை பெற்றுச்சென்று வீடுகளில் வைத்து பட்டாசு தயாரித்துத் தருவதும் நடக்கிறது’’ என்கிறார் பாண்டியராஜன்.

சில மாதங்களுக்கு முன்பு தொழில்துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 8 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. லைசென்ஸ் எடுத்தவரே தொழிற்சாலையை நடத்தவேண்டும்; தொழிற்சாலைப் பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும்; சிவகாசி, விருதுநகர், சாத்தூர் மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அக்கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போதைய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே ஒன்றரை மணி நேரம் பிடித்திருக்கிறது. அங்கு தீ விபத்து சிகிச்சைப் பிரிவு இல்லாததால் மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலதாமதமே பல உயிர்களைப் பறித்து விட்டது என்கிறார்கள்.



‘‘முன்பு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர் பிரச்னை இருந்தது. இப்போது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏராளமான முதியோர் வேலை செய்கிறார்கள். பார்வைக்குறைபாடு, கை நடுக்கம் என பல பிரச்னைகள் அவர்களுக்கு உள்ளது. லேசாக உராய்ந்தாலே தீப்பற்றும் ஆபத்துள்ள பொருட்களை இவர்கள் கையாளும்போது விபத்து நேரலாம். ஆட்டோமொபைல் கம்பெனிகளில் கூட குறும்படங்கள் மூலமாக தற்காப்பு பயிற்சியளிக்கிறார்கள். ஆனால் பட்டாசு தொழிலாளர்களுக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீ விபத்துக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என்று 6 முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். முதல்வரும், சட்டசபையில் 110 விதியின்கீழ், ‘சிவகாசி மருத்துவமனையில் தீ சிகிச்சை சிறப்புப் பிரிவு தொடங்கப்படும்’ என்று அறிவித்தார். 7 மாதங்களாகி விட்டது. எந்த நடவடிக்கையும் இல்லை. ஒருவேளை தொடங்கியிருந்தால், பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்’’ என்கிறார் பாண்டியராஜன்.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் ஓய்வுபெற்ற இயக்குனர் ஷ்யாம்சுந்தர், ‘‘இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.

‘‘பல நாடுகளில் பட்டாசுத்தொழில் நடக்கிறது. ஆனால் இந்த அளவுக்கு கொடூரமான விபத்துகள் நடப்பதில்லை. இங்குதான் உயிரின் மதிப்பு மலிவாக இருக்கிறது. உயிரிழந்ததில் பெரும்பகுதி வேடிக்கை பார்க்க வந்தவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் என்ன செய்தார்கள்? உரிமம் ரத்து செய்யப்பட்ட ஒரு தொழிற்சாலை 200 ஊழியர்களோடு இயங்கிக் கொண்டிருப்பதை கண்காணிக்காமல் விட்டது யார்? இதுபோன்ற தொழிற்சாலைகளில் ஆபத்து காலத்தில் யார் யார் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நெறிமுறை இருக்கிறது. ஆனால் அதை யாரும் பின்பற்றவில்லை. உரிமையாளரே ஓடிவிட்டார். தீபாவளி சமயத்தில் அதிக ஆட்களை வைத்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பட்டாசு தயாரிக்கிறார்கள். இது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. இந்த தருணத்தில் கூடுதல் கவனமெடுத்து ஆய்வுசெய்ய வேண்டும். தவறு செய்தவர்களை தண்டித்தால் மட்டுமே இனிமேலும் விபத்துக்கள் நடக்காமல் தடுக்கமுடியும்’’
என்கிறார் ஷ்யாம்சுந்தர்.
- வெ.நீலகண்டன்