சமந்தாவுக்காக பசங்க உருகப் போறாங்க...





முன் எப்போதையும் விட களையுடன் தெரிகிறார் ஜீவா. ‘சூப்பர் ஹீரோ’ ஆகிவிட்ட பெருமையும், இசைஞானி இசைக்கும் படத்தின் நாயகன் என்கிற களிப்பும், அதில் இன்னும் மினுமினுப்பைக் கூட்டியிருக்கின்றன. ஆனால் இன்னும் காப்பாற்றி வைத்திருக்கும் கர்வம் தொடாத நட்பு தவறிவிடாத நிதானத்துடன் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படப்பிடிப்பிலிருந்து பேசினார் அவர்.

‘‘முகமூடி’ ஓபனிங் அட்டகாசமா இருக்கிறதுல மகிழ்ச்சிதான். ‘கோ’வுக்குப் பிறகான என்னோட வெற்றிப்படம்னு சொல்லிக்க முடியும். முக்கியமா அந்தப்படத்துல குழந்தைகளை அதிகமா கவர்ந்திருக்கேன்னு நினைக்கிறேன். இதோ இங்கே ஷூட்டிங் நடக்கிற பில்டிங்ல, கீழ் வீட்டுக் குழந்தைகள் அவங்க ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து ‘இதோடா முகமூடி அங்கிள்...’னு என்னைப் பார்க்கக் கூட்டமா வந்துட்டாங்க. இது எனக்குப் புது அனுபவம். விவரம் தெரிய ஆரம்பிக்கிற என் பையனே கூட டிவியில என்னோட ‘முகமூடி’ முகத்தைப் பார்த்துக் கையைக் காட்டறான்...’’ என்று சிரிப்பவர், ‘நீதானே என் பொன்வசந்த’த்தில் கௌதம் மேனனுடன் கைகோர்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘கௌதம் என்கூட படம் பண்ணலாம்னு கேட்டப்ப, நிச்சயமா ‘காக்க காக்க’ போல ஒரு ஆக்ஷன் படத்தைத்தான் எதிர்பார்த்தேன். ஆனா அவர் சொன்ன கதை முற்றிலும் வேறா இருந்தது. ஆக்ஷன் படத்திலேயே கூட அவர் காதலைக் கையாளுகிற விதம் அற்புதமா இருக்கும். முழுக்க காதலை வச்சு அவர் சொல்ற கதை நிச்சயம் வித்தியாசமா இருக்கும்னு ஒத்துக்கிட்டேன்.


ஷூட்டிங்ல அது தெளிவாவே தெரிஞ்சது. ‘முகமூடி’ங்கிற ஆக்ஷன் படத்துக்குப் பிறகு, இந்தப் படம் அதுலேர்ந்து வேறுபட்டு லவ் ஜேனர்ல வர்றது ரசிகர்களுக்கும் வெரைட்டியா இருக்கும். படத்துக்குப் படம் காதல்தான் இருக்குன்னாலும், அது கூட கொஞ்சம் காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன்னு கலந்தே இருக்கு. அவுட் அண்ட் அவுட் காதல் படம்னு எடுத்துக்கிட்டா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’தான் கடைசியா வந்த காதல் படம்னு சொல்லலாம். அதுலேயும் கௌதம் மேனன்தான் பின்னால நிக்கிறார். அவர் படத்தை அவரே முந்தப்போற காதல் படமா இது இருக்கும். இந்தப் படத்தை இளைஞர்கள் கொண்டாடப் போறாங்க.

அவருக்கு இருக்கிற ஸ்பெஷாலிட்டி பத்தி நிறைய பேசலாம். ஷூட்டிங் நடக்கிறதே தெரியாது. எந்த சத்தமும் இல்லாம போய்க்கிட்டிருக்கும். அவர் யூனிட்டே ஹைடெக்கா செயல்படறதும் வித்தியாசமான அனுபவம். அவர் என்ன எழுதறாரோ அதை அப்படியே ஷூட் பண்றார். ஸ்கிரிப்ட் எழுதிட்டார்னா அதை அப்படியே அழகா எடுத்துடுவார்னு நம்பலாம். அவர்கிட்டேர்ந்து நிறைய விஷயங்களைக் கத்துகிட்டேன். நல்ல நட்போட பழகக்கூடிய உயர்ந்த மனிதர் அவர்.

அதேபோல இளையராஜா சார். அவரைப் பத்திப் பேச எனக்கு வயசும் அனுபவமும் போதாதுன்னாலும், அவர் இசை கேட்டே வளந்தவன்கிற அனுபவத்துல கொஞ்சம் பேசலாம். என்னோட ‘ராம்’ படத்துல, ‘பறவையே எங்கு இருக்கிறாய்...’ பாடலை அவர் குரல்ல பதிவு பண்ணியதுக்காக யுவனை எங்கே பார்த்தாலும் நன்றி சொல்லிக்கிட்டிருந்தேன். ஆனா, இங்கே அவர் இசையமைக்கிற படத்துக்கு நான்ஹீரோன்னும்போது அதை எப்படி விவரிக்கிறதுன்னு தெரியலை.

‘இளையராஜா மேஜிக்’னா என்னங்கிறதை நேர்லயே இந்தப்பட ஆடியோ ரிலீஸ்ல பார்த்தமே..? அதை யு டியூப்ல பார்த்தவங்க எண்ணிக்கையே நாளுக்கு நாள் லட்ச லட்சமா கூடிக்கிட்டே இருக்கு. அவரைப்பத்தி யுவன்கிட்ட மட்டுமே பேசிக்கிட்டிருந்த நான், அவரையே சந்திச்சு ‘நன்றி’ சொன்னேன். ‘இவர்தான் இந்தப்பட ஹீரோ...’ன்னு என்னை ஹங்கேரி இசைக்கலைஞர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தியது பெருமையா இருந்தது...’’

‘‘படம் லேட்டாக என்ன காரணம்..?’’
‘‘இதுல எனக்கு பள்ளி, கல்லூரி, வேலைக்குப் போற காலகட்டம்னு 16 வயசிலேர்ந்து 25 வயசு வரைக்குமான மூணு காலகட்டங்கள்ல சின்னதா வித்தியாசப்பட்டு பயணிக்கிற கேரக்டர். முதல் பாதிப்படத்தை முப்பத்தஞ்சே நாள்ல, அதுவும் ரெண்டு மொழிகள்ல பரபரன்னு எடுத்துட்டார் கௌதம். அந்த ஸ்பீடுல போயிருந்தா இது ‘முகமூடி’க்கு முன்னாடியே வந்திருக்கும். பிறகு ஸ்டிரைக், அது இதுன்னு கொஞ்சம் டைம் ஆயிடுச்சு. அதுல டேட்ஸ் வீணாக... நான் வேற படத்துக்குப் போக வேண்டியிருந்தது. தெலுங்கில டாப் ஹீரோயினா இருக்கிற சமந்தாவும் செம பிஸி. இப்படித்தான் டிலே ஆச்சு. ஆனா நானும் சமந்தாவும் நடிச்சிருக்க ‘ஸ்கூல் டேஸ்’ காட்சிகளை இப்ப பார்த்தாலும் ‘நானா இது...’ன்னு நினைக்கிற அளவுக்கு அழகா வந்திருக்கு!’’
‘‘சமந்தா எப்படி..?’’
‘‘அட்டகாசமான நடிகை. கூட நடிக்கிற ஆர்ட்டிஸ்டுக்கு தமிழ் தெரிஞ்சிருந்தா எத்தனை உணர்வோட ரீயாக்ட் பண்ண முடியும்னு முழுமையா உணர்ந்தேன். சமந்தாவுக்கு தமிழும், தெலுங்கும் தெரியுது. பைலிங்குவல் படமானதால அடுத்தடுத்து தமிழ்லயும், தெலுங்கிலயும் எடுக்கும்போது அப்படியே அழகா பேசி, உணர்வு மாறாம நடிச்சதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் மேலே சொன்ன ஸ்கூல் டேஸ் கெட்டப்ல செம க்யூட்டா இருப்பாங்க. நம்ம பசங்க சமந்தாவைப் பார்த்து உருகப் போறாங்க...’’
- வேணுஜி