லவ் பண்ணலாமா வேணாமா? குழப்ப சிம்பு





பூசணிக்காய் உடைக்கும் ஸ்டேஜை நெருங்கி விட்டது ‘போடா போடி’. சிம்பு ரசிகர்களுக்கான அடுத்த தீனி இந்தப் படம்தான். வரலட்சுமியுடன் க்ளைமாக்ஸ் பாட்டுக்கு ‘சல்சா’ ஆடிவிட்டு ரிலாக்ஸ் மூடில் இருந்த சிம்புவின் முகத்தில் முன்பை விட ஒரு கோட் ஏறியிருக்கிறது மினுமினுப்பு.

‘‘‘விண்ணைத்தாண்டி வருவாயா’ நேரத்துலயே விக்னேஷ் சிவா என்கிட்ட சொன்ன கதை இது. என் கேரியரில் மறக்க முடியாத, மனசுக்கு நெருக்கமான கதையாக இருந்ததால சம்மதிச்சேன். ‘எல்லாம் கலந்த லவ் ஸ்டோரிதான் இதுவும்’னு சாதாரணமா சொல்லிட முடியாத ஒரு ஸ்கிரிப்ட். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ முடிஞ்சதுமே இந்தப் படம் பண்ணியிருக்க வேண்டியது. அடுத்தடுத்து லவ் ஸ்டோரி வேண்டாமேன்னு தோணினதால கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டோம். லண்டன்ல நடக்கற கதைங்கறதால க்ளைமேட் பார்த்துப் பார்த்து ஷூட்டிங் நடத்தவேண்டியிருந்தது. இதோ இப்போ கிட்டத்தட்ட முடிச்சாச்சு. ‘வேட்டைமன்னன்’, ‘வாலு’ படங்களைப் போல ‘போடா போடி’ டைரக்டரும் புதுமுகம்தான். மற்ற விஷயங்களை அவர்கிட்டயே கேட்டுக்குங்க’’ என விக்னேஷை கைகாட்டிவிட்டு சிம்பு ஒதுங்கிக்கொள்ள, படம் பற்றி பேச ஆரம்பித்தார் விக்னேஷ் சிவா...


‘‘கணக்கு நோட்டும் கால்குலேட்டருமா வேற வேற டேஸ்ட்ல இருக்கிற ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் இடையில் பூக்கும் காதலும், வாழ்க்கையும்தான் படத்தோட கதை. இவ சைவம்னா, அவன் அசைவம். பொண்ணு லண்டன்; பையன் தமிழ்நாடு. அவ டான்சர்; இவனுக்கு சுட்டுப் போட்டாலும் டான்ஸ் வராது. இப்படி எல்லா விஷயத்திலும் எதிரெதிர் துருவமா இருக்கும் ரெண்டு பேருக்கும் கல்யாணமானா எப்படி இருக்கும்ங்கறதை ஜாலி, காமெடின்னு கலர்ஃபுல் ஜிகினா சுற்றிக் கொடுத்திருக்கோம்.

சென்னையிலிருந்து அனிமேஷன் படிக்க லண்டன்ல இருக்கற சித்தப்பா வீட்டுக்குப் போற ஒரு இளைஞரா வர்றார் சிம்பு. முழுக் கதையும் லண்டன்ல நடக்கறதால, முழுக்கமுழுக்க அங்கதான் ஷூட் போச்சு. ஹாங்காங்ல ஒரு பாடல் காட்சி எடுத்தோம். டிஸ்னிலேண்ட்ல இருக்கற ஒரிஜினல் மிக்கி மவுசுடன் இதுவரை எந்த ஷூட்டிங்கும் நடத்தினதில்லை. மூணு மாசம் கடுமையாக முயற்சி செஞ்சு அனுமதி வாங்கி, ஷூட் பண்ணோம். இந்தக் காட்சி குழந்தைங்களை ரொம்பவே கவரும்...’’

‘‘சிம்புவை திருப்திப்படுத்துவது கஷ்டம். நீங்கள் எப்படி அவரிடம் வாய்ப்பைப் பெற்றீர்கள்?’’
‘‘ஸ்கூல் படிக்கும்போது சிம்பு எனக்கு சீனியர். அப்போதிருந்தே அவரை எனக்குத் தெரியும். காலேஜில் வரலட்சுமி எனக்கு சீனியர். இந்த நட்புதான் எங்களை இணைச்சது. பெரிசா யாரிடமும் நான் ஒர்க் பண்ணினதில்லை. கதையை ரெடி பண்ணிட்டு உடனே சிம்புகிட்ட நான் போயிடலை. ஒரு டீசர் ரெடி பண்ணி, டி.வி.டி ஃபார்மெட்டில் சிம்புவுக்கு போட்டுக் காட்டினேன். அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்த பிறகே கதை சொன்னேன். அந்தத் தேதியில இருந்து இன்னைக்கு வரை படத்தில் ரொம்ப ஈடுபாடு காட்டறார். முந்தைய அவரது படங்கள்ல பார்க்காத ஒரு நடிப்பை இதில் பார்க்கலாம். சேலஞ்சிங்கான சில காட்சிகள்ல பிரமாதமா நடிச்சிருக்கார்.


ரொம்ப நாளைக்குப் பிறகு ஷோபனா நடிச்சிருக்காங்க. வரலட்சுமியோட கார்டியனா, டான்ஸ் ஸ்கூல் டீச்சரா அவங்க வர்றாங்க. தரண் மியூசிக் பண்றார். நானும் அவரும் எட்டு வருஷ நண்பர்கள். ‘லவ் பண்ணலாமா வேணாமா’ங்கிற ஒரு பாட்டை சிம்புவே பாடியிருக்கிறார். நல்லா வந்திருக்கு. டங்கன் டெல்ஃபோர்ட்ங்கற ஹாலிவுட் கேமராமேன்தான் ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். அவர் லண்டன்காரர். கதை முழுக்க அங்கேயே நடக்கறதால, அந்த லொகேஷன்கள் பற்றி நல்லா தெரிந்தவரான அவரை கமிட் பண்ணினோம். அவருக்கு 50 வயசு. சின்னப் பையன் மாதிரி அவர் சுறுசுறுப்பா எங்களோட வேலை செஞ்சது நல்ல அனுபவமா இருந்தது!’’
- அமலன்