காங்கேயம் காளைகளும் கனிவான எழுத்தும்





கிராமத்து வாழ்க்கையின் அழகியலை அங்குலம் அங்குலமாக சிலாகிக்கும் எழுத்து; இளமைக்குரிய வற்றாத தாபம் ஒரு பிரவாகமாக தவழ்ந்தோடும் அதேவேளை, நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் மனிதர்களின் ஆதி அந்தங்களையும், கலை உணர்வுகளையும் தேடிச்செல்லும் நுணுக்கம்... இதுதான் சு.வேணுகோபாலை தமிழின் பிரதான படைப்பாளியாக முன்னிறுத்துகிறது. ‘நுண்வெளி கிரணங்கள்’, ‘பூமிக்குள் ஓடுகிறது நதி’, ‘களவுபோகும் புரவிகள்’, ‘கூந்தப்பனை’, ‘வெண்ணிலை’, ‘திசையெல்லாம் நெருஞ்சி’, ‘ஒருதுளி துயரம்’ ஆகியவை சு.வேணுகோபாலை அழுத்தமாக நிறுவிய நூல்கள். இவரது எழுத்து பெற்ற அங்கீகாரங்கள் ஏராளம். மலையும், மலைசூழ் நிலமுமான தேனிக்கு அருகில், சில்ல மரத்துப்பட்டி என்ற பசுங்கிராமத்தில் தலையில் முண்டாசும், கைகளில் காங்கேயம் காளைகளுமாக உலவித் திரிகிறார் வேணுகோபால். பேச்சில் தேனிக்கே உரித்தான வெள்ளந்தித்தனம்.

‘‘எல்லாம் அப்பா சுருள்வேலோட சம்பாத்தியம். ராப்பகல் பார்க்காத உழைப்பால 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்தினவர். அவருக்கு இளைப்புத் தொல்லை இருந்துச்சு. ‘நல்ல சீமைச்சரக்கா வாங்கி தினமும் ரெண்டு கிளாஸ் அடிச்சின்னா சரியாயிரும்’னு யாரோ ஒரு புண்ணியவான் சொல்லியிருக்காரு. கிளாஸைத் தொட்டவரு, சாராயம் அவரைக் குடிக்கிற வரைக்கும் விடலே. இன்னைக்கு இலக்கிய சந்திப்புகள்ல தண்ணி அடிக்க நிர்ப்பந்திக்கிறவங்ககிட்ட, ‘எனக்கும் சேத்து எங்க அப்பாவே குடிச்சிட்டார்’னு சொல்லி நான் தவிர்க்கிறதுண்டு.

ரொம்ப சீக்கிரமே அப்பா எங்களை விட்டுப் போயிட்டார். அப்புறம் எல்லாம் அம்மா பொன்னுத்தாயிதான். சிறந்த நிர்வாகி. படிச்சதென்னவோ அஞ்சாவதுதான். பண்ணையில வேலை செய்யிற 50 பேரோட கணக்கு வழக்கை மனனமா போட்டுச் சொல்லும். மொத்தம் நாங்க 5 புள்ளைங்க. நான் கடைக்குட்டி.

மாடு இல்லைன்னா விவசாயம் இல்லை. விவசாயத்துக்கு உகந்தது காங்கேயம் காளைகள்தான். இப்போதானே மின்சார மோட்டார் எல்லாம். அந்தக்காலத்துல கமலையிலதான் மாடு கட்டி தண்ணி இறைக்கணும். ஒரு கொழுவுல 500 லிட்டர் தண்ணி எடுக்கலாம். அப்படி கிணத்துல இருந்து எடுக்கிறதுக்கு ஓங்குதாங்கான மாடுக வேணும். உழும்போது கலப்பைக்கு மேல ஒரு கல்லை வச்சு, அதுக்கு மேல ரெண்டு பேரை நிக்க வச்சு உழுவாங்க. ஆழ உழுதாத்தான் விளைச்சல் பிடிக்கும். அதுக்கெல்லாம் காங்கேயம் காளைதான் சரிப்பட்டு வரும். விவசாயத்துக்காக வாங்குனாலும் அப்பாவுக்கு மாடுகமேல பிள்ளைப்பாசம். வதைச்சு வேலைவாங்க மாட்டாரு. மாட்டோட மொழியும் கூட அவருக்கு அத்துப்படி.

அப்பாவைப் பாத்துத்தான் விவசாயத்து மேலயும், மாடுக மேலயும் எனக்கு ஆசை வந்துச்சு. காலையில 6 மணிக்கு எழுந்திரிச்சு, ஆடு, மாட்டை ஓட்டிக்கிட்டு மேய்ச்சலுக்குக் கிளம்பிருவேன். 8 மணி வரைக்கும் மேய்ச்சுட்டு வந்து பள்ளிக்கூடம் போவேன். அதுக்கு ‘பனிமேய்ச்சல்’னு பேரு. சாயந்திரம் வந்ததும் கொட்டத்துக்குத்தான் போவேன். ஆடு, மாட்டை மேய விட்டுட்டு, வரப்புல உக்காந்து படிப்பேன். முப்பதுக்கும் மேல பண்ணையாட்கள் இருந்தாலும், அவங்களோட சேந்து நானும் களை வெட்டுவேன். தண்ணி வெட்டி விடுவேன். தாட்டு சுமப்பேன். நிலக் கடலை, பருத்தி, கோவில்பட்டி சோளம், மஞ்சள்னு எக்காலமும் காடு பச்சைமேனியாக் கிடக்கும்.



பள்ளிக்காலங்கள்லயே கண்ணதாசன் பாடல்கள் மேல மோகம் வந்திருச்சு. எப்படி இந்த மனுஷனால இவ்வளவு பாடல்கள் எழுதமுடியுதுன்னு வியந்துபோவேன். பாடல்களோட பொருள் புரியத் தொடங்கினபிறகு, ரகசியமா எனக்குள்ள ஒரு ஆசை அரும்புச்சு. ‘நானும் கண்ணதாசனாகணும்’..!
கல்லூரிக்குப் போனதும் தமிழ் இலக்கியம்தான் படிப்பேன்னு அடம்புடிச்சு சேந்துட்டேன். என் தேடலுக்குத் தகுந்த களமா கல்லூரி இருந்துச்சு. ஒரு லட்சம் புத்தகங்கள் அடங்கின மிகப்பெரிய நூலகம் அமெரிக்கன் கல்லூரியில இருக்கு. கண்ணதாசன் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிச்சேன். ஒருமுறை கல்லூரி இலக்கிய விழாவுக்கு ஜெயகாந்தன் வந்தார். அவரைக் கேள்விகளால திணறடிக்கணுங்கிற ஆர்வத்துல நூலகமே கதியாக் கிடந்து படிச்சேன். நிகழ்ச்சி நாள் வந்துச்சு. கம்பீரமா, ஒரு மத யானை மாதிரி வந்து உக்காந்தார் ஜெயகாந்தன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கேள்வி கேக்குறாங்க. எல்லா கேள்விகளையும் எதிர்கொண்டு மூஞ்சியில அடிச்சமாதிரி பதில் சொல்றார். ‘புதுசா என்ன எழுதப்போறீங்க’ன்னு ஒரு பெண் கேள்வி கேட்டுச்சு. ‘இதுவரைக்கும் நான் எழுதுன எல்லாத்தையும் படிச்சிட்டியா..?’ன்னு எதிர்க்கேள்வி கேட்டார். அந்த மிரட்சியில, தொண்டையோட என் கேள்விகள் நின்னுபோச்சு. ஆனா அப்போ இன்னொரு ரகசிய ஆசை உருவாச்சு. ‘நாம ஜெயகாந்தனா ஆகணும்’..!

எம்.ஃபில் முடிச்சேன். என் நண்பர்கள்ல சில பேர் சினிமாவுக்குப் போனாங்க. சில பேர் கல்லூரி வேலைக்குப் போனாங்க. நான் விவசாயம் செய்யப் போயிட்டேன். என் அப்பா 5 ஏக்கரை 30 ஏக்கரா மாத்துனார்; 45 ஏக்கரா மாத்தணும்ங்கிறது என் திட்டம். கோவணத்தைக் கட்டிக்கிட்டு வயக்காட்டுல இறங்கிட்டேன். காங்கேயம் காளைகளோட வாழத் தொடங்குனேன். ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டுன்னு வாழ்க்கை சுவாரஸ்யமா ஓடுச்சு.  

வாசிப்பும் தீவிரமாச்சு. எல்லா எழுத்தாளர்களோட கதைகளையும் படிச்சேன். ஆனா ஒருவரி கூட எழுதலே. முதன் முறையா எழுதினதே மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துச்சு. அதுக்குப்பிறகு தீவிரமா எழுதத் தொடங்கிட்டேன்.

ஆனா, விவசாயம் எனக்குக் கை கூடலே. அப்பா கால விவசாயம் வேற; என் காலத்து விவசாயம் வேற. அப்பா வருஷாவருஷம் ஒவ்வொரு ஏக்கரா வாங்குனார். நான் வருஷத்துக்கு 1 லட்சம் கடன் வச்சேன். ஒருமுறை மருந்தடிச்சு, ஒருமுறை உரம் போட்டு, ஒருமுறை களை வெட்டி 1 பருத்திக்கு நூறு காய் எடுத்தார் அப்பா. நான் 13 மருந்தடிச்சு, 4 உரம் போட்டு, 3 களையெடுத்தும் செடிக்கு 15 காய்கூட நிக்கல. 4 ஏக்கர்ல வெங்காயம் வச்சேன். விதைவெங்காயம் கிலோ 13 ரூபா. அறுத்தெடுத்து மார்க்கெட்டுக்கு கொண்டுபோனா கிலோ 40 பைசாங்கிறான். ஒரேயடியா விலை இறங்கிப் போச்சு.


இப்படி ஒவ்வொரு வெள்ளாமையிலயும் கடன். அம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க. ‘படிச்ச புள்ளைக்கு விவசாயம் எதுக்கு... ஏதாவது வேலைக்குப் போகலாமுல்ல’ன்னு உறவுகளும் திட்டத் தொடங்கிட்டாங்க. வேற வழி தெரியாம, பேராசிரியர் வேலைக்குப் போனேன்.

ஒரு பள்ளிக்கூடச் சிறுவன் மாதிரி சனியும், ஞாயிறும் எப்போ வரும்னு இப்பவும் காத்துக்கிட்டிருக்கேன். என் மண்ணுல புரண்டு, என் காளைகளோட விளையாண்டு, பூப்பெய்தின பெண் மாதிரி பூரிச்சு நிக்குற பயிர்களை பாத்துக்கிட்டே நிக்குறதுல இருக்கிற உயிர்ப்பு வேறெதிலுமே எனக்கு இல்லை. ஒவ்வொரு மனுஷனும் சாப்பிடுற அரிசியில என்னோட ஒரு அரிசியும் இருக்கு. ஒவ்வொருத்தர் போடுற துணியில என்னோட நூலும் இருக்கு.

இதுவரைக்கும் எழுதினது என் அனுபவங்களோட ஒரு துளி. இன்னும் நெறக்க நெறக்க அனுபவங்கள் சேகரிச்சு வச்சிருக்கேன். கிராமங்களைப் பத்தி பல்லாயிரம் பக்கங்கள் எழுத வேண்டியிருக்கு. எல்லாத்தையும் உதறிட்டு நானும் என் மாடுகளும் தேசாந்திரிகளா திரியவும் வாய்ப்பிருக்கு...’’
- வெ.நீலகண்டன்
படங்கள்: மூர்த்தி,
பா.ராதாகிருஷ்ணன்