பிள்ளையார் சிலையில் பணமும் கொட்டும்





எப்படி இருந்தாலும் பிள்ளையார் அழகு! விதம்விதமான பொருள்களில், வித்தியாசமான நிலைகளில் உள்ள பிள்ளையார் சிலைகளைச் சேகரிப்பது, சமீபகாலமாக பலருக்கும் விருப்பமான ஆர்வமாக வளர்ந்து வருகிறது. பிள்ளையார் சதுர்த்திக்கு புதுப் பிள்ளையார் வாங்குவது வழக்கம். அதே பிள்ளையாரை நாமே நம் கைப்பட வடிவமைத்து வைத்து வணங்கினால் இன்னும் சிறப்புதானே?
சென்னையைச் சேர்ந்த அன்புக்கரசிக்கு, விதம்விதமாகப் பிள்ளையார் செய்வது கைவந்த கலை. வெறும் ஐந்தே நிமிடங்களில் அழகு பிள்ளையாரை உருவாக்கும் அளவுக்குத் திறமைசாலி. ‘‘ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன். கைவினைப் பொருள்கள் பண்றது பொழுதுபோக்கு. புதுசா எதைப் பார்த்தாலும், நானாகவே முயற்சி பண்ணி செய்துடுவேன். அப்படி கத்துக்கிட்டதுதான் பிள்ளையார் பண்றதும். நான் பண்ற பிள்ளையார் பொம்மைகளுக்கு, வெளிநாடுகள் வரைக்கும் ஆர்டர் இருக்கு’’ என்கிறவர், ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

செராமிக் பவுடர், பசை, ஃபேப்ரிக் கலர், பொட்டு வைக்கப் பயன்படுத்தும் அச்சு, கத்தரிக்கோல், ஊசி... செராமிக் பவுடர் ஒரு கிலோ 45 ரூபாய். ஒரு பொம்மைக்கு 100 கிராம் தேவை. மற்ற பொருள்களுக்கும் சேர்த்து முதலீடு 200 முதல் 250 ரூபாய் போதுமானது.

என்னென்ன செய்யலாம்?
என்ன ஸ்பெஷல்?

பிள்ளையார், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி என சாமி உருவங்கள் எல்லாம் செய்யலாம். தவிர பூக்கள், அன்பளிப்புப் பொருள்கள் என நம் கற்பனைக்கேற்ற எந்த உருவமும் சாத்தியம். இந்த செராமிக் பொம்மைகள் கீழே விழுந்தால் உடையாதவை. அழுக்கானாலும் கழுவி உபயோகிக்கலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை செய்யலாம்?

1 மணி நேரத்தில் 2 முதல் 3 பொம்மைகள் செய்யலாம். வேகமும் நுணுக்கமும் பழகிவிட்டால், இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.

விற்பனை வாய்ப்பு? லாபம்?

கண்காட்சிகள், அன்பளிப்புப் பொருட்கள் மற்றும் சாமி உருவங்கள் விற்பனை செய்கிற கடைகளில் கொடுக்கலாம். எந்த சந்தர்ப்பத்துக்கும் அன்பளிப்பாகத் தர ஏற்றவை இவை. மிகச் சிறிய அளவு பொம்மை செய்ய 10 ரூபாய் செலவானால், அதை 20 ரூபாய்க்கு விற்கலாம். அளவையும், வேலை நுணுக்கத்தையும் பொறுத்து விலை வேறுபடும். 100 சதவீத லாபம் நிச்சயம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் 3 மாடல் கற்றுக்கொள்ள கட்டணம் 300 ரூபாய்.
- ஆர்.வைதேகி
படங்கள்: விநாயகம்