வெட்ட வேண்டாம்; அப்படியே இடம்மாற்றி நடலாம்!





மரங்களை நேசிக்கும் திருப்பூர்
ஹிதேந்திரனின் இதயத்தை எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் பயணித்தபோது ஏற்பட்ட பரபரப்பு இருக்கிறதே... அதே பரபரப்பு அன்று திருப்பூரிலும். சாலை நெடுக கூடியிருந்த மக்கள், பயமும் பரிதவிப்புமாக இறைவனைப் பிரார்த்தித்தனர். சுமார் 24 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஆபரேஷன் சக்சஸ்.
இடம் மாற்றப்பட்டது மனித இதயமல்ல... இயற்கையின் இதயம். ஆம்... வெட்டி வீசி, விறகாக இருந்த நூறாண்டு பழமையான அரச-வேப்ப மரங்களை அப்படியே பெயர்த்தெடுத்து இன்னொரு இடத்தில் நட்டு உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்கள் திருப்பூர் மக்கள்.


திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில், பல்லாயிரம் உயிர்களுக்குக் குடிலும் நிழலும் தந்து கொண்டிருந்த இந்த மரங்களை, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக வெட்டத் திட்டமிட்டது ரயில்வே. ஒரே வேரில் அரசுவும் வேம்பும் பிணைந்து கிடப்பது ‘தெய்வ தரிசனம்’ என்பார்கள். அதனால், இந்த மரங்களுக்குக் கீழே ஒரு பிள்ளையாரும் இருந்தார். அந்தக் கோயிலை இடிக்கும்போது கூட பொறுமை காத்த மக்கள், மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

‘‘குக்கிராமமா இருந்த திருப்பூர் இன்னிக்கு அடைஞ்சிருக்கற வளர்ச்சிக்கெல்லாம் சாட்சியா தலைமுறை கடந்து நிக்குது இந்த மரம். இதை இழக்க மக்கள் தயாராயில்லை. அதுக்காக ரயில்வே வேலையையும் நிறுத்த முடியாது. அதனாலதான் எங்க ஏரியாவுல ஆடிட்டர் ராமநாதன், மக்கள் பசுமை இயக்கத்தைச் சேர்ந்த எஞ்சினியர் சிவானந்தன் எல்லாரும் ஒண்ணுகூடி பேசினோம்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மாதிரி நாடுகள்ல பழமையான மரங்களை வேரோட பெயர்த்தெடுத்து வேற இடத்துல நடற தொழில்நுட்பம் இருக்கு. அதை இங்கேயும் பயன்படுத்தலாம்னு சிவானந்தன்தான் சொன்னார். வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள்கிட்ட பேசினோம். அவங்களும் உதவ முன்வந்தாங்க. களத்துல இறங்கிட்டோம்...’’ என்கிறார் திருப்பூர் ‘நிப்டீ’ கல்லூரி சேர்மன் ராஜா சண்முகம். பெயர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் இப்போது இந்தக் கல்லூரி வளாகத்தில்தான் துளிர் விட்டிருக்கின்றன.

‘‘ஆபரேஷனுக்கு நாள் குறிச்சிட்டு, வேளாண் துறைகிட்ட பேசி, நீளமான டிரக் வாகனத்தை வாங்குனோம். பலபேர் எங்களோட கைகோர்த்தாங்க.  ஆச்சரியப்படும்படியா ரெண்டு மரத்துக்கும் ஒரே வேர்தான் இருந்துச்சு. மரத்தோட சுற்றளவு 16 அடி. கிரேன், மரத்தை மேலே தூக்க, பொக்லைன் வேரைச் சுத்தி பள்ளம் தோண்ட, 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு எந்த சேதாரமும் இல்லாம ஆணிவேரோட மரம் வெளியே வந்திருச்சு. அந்த சமயம் இயற்கையே ஆசீர்வதிக்கிற மாதிரி, சின்னதா தூறல் விழுந்துச்சு. பார்த்துக்கிட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினாங்க...’’ - அதே உற்சாகம் குறையாமல் பேசுகிறார் ராஜா சண்முகம்.

இங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது நிப்டீ கல்லூரி. அவ்வளவு தூரம் கிளைகளோடு கொண்டு செல்வது சிக்கல். அதனால் சில கிளைகள் வெட்டப்பட்டு, சாணம் வைத்து வைக்கோலால் கட்டு போடப்பட்டது. எல்லாம் முடிந்து மாலை 4 மணிக்கு டிரக்கில் ஏற்றப்பட்டன மரங்கள். கல்லூரி வளாகத்துக்குச் செல்லும்போது நள்ளிரவு 12 மணி.

‘‘வழிநெடுக, ‘சாமி மரம் வருது, சாமி மரம் வருது’ன்னு கற்பூரம், தேங்காயோடு மக்கள் கூடி நிக்கிறாங்க. பிடுங்கறதை விட நடுறதுதான் முக்கியமான பிராசஸ். மரத்தோட பக்கவேர்கள் பத்தி கவலையில்லை. ஆனா, ஆணிவேர் பெயர்ந்திடாம இருக்கணும். அதோட சேர்த்து தாய்மண்ணும் அவசியம். நடுற இடத்துல 16 அடிக்கு 16 அளவுல குழிவெட்டி, மணல், அசோஸ்பைரில்லம் எல்லாம் போடணும். பக்கவேர்களை வெட்டினதால ஏற்பட்ட காயங்கள்ல பூஞ்சை பிடிக்காம இருக்க சில மருந்துகள் சேர்க்கணும். அவ்வளவுதான்! நட்டு முடிச்சு உயிர்த்தண்ணி ஊத்திட்டோம். இப்போ புதுசா இளங்கிளை விட்டுருச்சு. எங்க உழைப்புக்கெல்லாம் அவார்டு கிடைச்ச மாதிரி இருக்கு’’ என்று நெகிழ்கிறார் மக்கள் பசுமை இயக்கத் தலைவர் சிவானந்தன்.


இந்த மரங்களில் அணில் கூடொன்றும், தேன் அடையொன்றும் இருந்தன. இரண்டுக்கும் எவ்வித சேதாரமும் இல்லை. மக்கள் ஆரவாரம், கிரேன், பொக்லைன் சத்தங்கள் எதற்கும் இவை அசரவில்லை. மரங்களோடே ஒட்டியிருந்து, டிரக்கில் பயணித்து, உயிர் மீண்டு வரும் மரத்திலேயே இப்போதும் வசிக்கின்றன.  

திருப்பூரில் 8 வருடங்களுக்கு முன்பு, அவிநாசி சாலையில் குடிநீர் தொட்டி கட்டும் பணிக்காக வெட்டவிருந்த 11 மரங்களை வேரோடு பிடுங்கி அருகில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நட்டார்கள். ஒரு மரம் தவிர மற்ற அனைத்தும் இன்று செழித்து வளர்ந்து நிற்கின்றன. தற்போது ஒரு வேரில் இணைந்த இருமரங்களை நட்டு புதிய முன்னுதாரணத்தையும் நிகழ்த்தியிருக்கிறது திருப்பூர்.

இந்தியா முழுக்க எத்தனையோ வளர்ச்சிப் பணிகளுக்காக எத்தனையோ மரங்கள் வெட்டி வீசப்படுகின்றன. மனிதனின் காலக்கணக்குகளைக் கடந்து நிற்கும் மரங்களை இப்படி இடம் மாற்றி உயிர்ப்பிக்கும் திருப்பூர் மக்களின் தொழில்நுட்பத்தை அரசு ஏன் கையில் எடுக்கக்கூடாது?
- வெ.நீலகண்டன்
படங்கள்: எபநேசர்