சூர்யா விக்ரம் தனுஷ் சூப்பர்...





14 வருடங்களுக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் மூலம் மீண்டும் வெள்ளித் திரையில் ஸ்ரீதேவி. சென்னை வந்திருந்த அவரிடம் பேசினோம். ‘‘ஹா... குங்குமமா? சென்னையில் இருந்தப்ப வாரம் தவறாம படிச்சிடுவேன்...’’ என்றவரிடம், ‘‘சென்னையை மிஸ் பண்ணிட்டோம்னு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?’’ எனக் கேட்டோம் ‘‘கோடம்பாக்கம்தான் என்னை வளர்த்தது. பாரதிராஜா, பாலு மகேந்திரான்னு பல இயக்குனர்களால்தான் சினிமாவில் நான் பெரிய இடத்துக்கு வர முடிஞ்சது. அப்புறம் தமிழ்நாட்டு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு. அவங்க மனசுக்குள்ள இப்பவும் எனக்கொரு இடம் இருக்குன்னு நல்லாவே தெரியும். உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் அந்த நன்றியுணர்வு என்கூடவே இருக்கும். மும்பையில இருந்தாலும் சன் டி.வி மூலமா தமிழ்நாடு, தமிழ் சினிமா பத்தி தெரிஞ்சுக்கறேன். அதனால சென்னையை மிஸ் பண்ற மாதிரி தோணல. ம்... இந்த நேரத்தில சன் டி.விக்கும் என்னோட தாங்க்ஸ்!’’

சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏன்?
‘‘கல்யாணத்துக்குப் பிறகு கணவன், குழந்தைகள்னு நிறைய பொறுப்புகளை சுமக்க வேண்டியிருந்துச்சு. அது சுகமான சுமைதான்! குழந்தைகளை ஒருகட்டம் வரைக்கும் நாமதான் வழிநடத்தணும். எங்கயாவது அதுல பிரச்னை வந்தா, அவங்க தப்பான பாதைக்குப் போயிடற ஆபத்து இருக்கு. என்னதான் வசதி, அந்தஸ்து, புகழ் இருந்தாலும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லைன்னா, அந்த வீட்ல சந்தோஷத்தின் அடையாளமே இல்லாம போயிடும். என் வீட்ல சந்தோஷத்தை நிரந்தரமாக்கற பொறுப்புல இருந்தேன். செட்டுக்கு வந்து கேமரா முன்னாடி நின்னுட்டா, கடிவாளம் போட்ட குதிரை மாதிரி மாறிடுவேன். அந்தக் கேரக்டரை தவிர வேற எந்த சிந்தனையும் எனக்கு இருக்காது. குடும்ப வாழ்க்கையிலும் அப்படித்தான் முழுமையான ஈடுபாட்டைக் கொடுத்தேன். 

குழந்தைகள்தான், ‘எங்களுக்காக ஒரு படத்துலயாவது நடிங்கம்மா’ன்னு அடிக்கடி எங்கிட்ட கேட்பாங்க. இந்த சமயத்தில்தான் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ ஸ்கிரிப்ட் வந்தது. என் கணவரும், டைரக்டர் பால்கியும் ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். அந்த அறிமுகத்தில்தான் இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங்காகவும், சொல்லவேண்டிய ஒரு கதையாகவும் இருந்ததால் ஓகே. சொல்லிட்டேன்.


இங்கிலீஷ் தெரியாத மிடில் கிளாஸ் குடும்பத்தலைவி கேரக்டர் எனக்கு. வெளிநாடு போற ஒரு சூழ்நிலையில, மொழி தெரியாம நான் சந்திக்கும் பிரச்னைகள்தான் படம். காமெடியா நகரும் திரைக்கதையில் ஆடியன்ஸின் அடிமனசை பிசையும் செய்திகள் நிறைய இருக்கும். முதல்முறையா பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிச்சிருக்கேன். என் அக்கா மகளா ப்ரியா ஆனந்த் ரொம்ப பிரமாதமா நடிச்சிருக்காங்க. அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடிச்சிருக்கார். நிஜ வாழ்க்கையில் ரொம்ப தன்னம்பிக்கையான மனிதர் அவர். படத்திலும் அவருடைய கேரக்டர் அப்படித்தான். நான் இடிந்துபோயிருக்கும் சூழலில் எனக்கு நம்பிக்கை கொடுத்து புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைப்பதே அவர்தான். ‘நடிக்கிறீங்களா’ன்னு கேட்டதுமே, ‘எவ்வளவு சம்பளம்... எத்தனை நாள் கால்ஷீட்’னு எந்த விசாரணையும் செய்யாம, ரொம்ப சிம்பிளா வந்து நடிச்சுக் கொடுத்தார்... கிரேட்!’’

தமிழ்ப் படங்களை பார்க்கிறாரா ஸ்ரீதேவி?

‘‘டைம் கிடைக்கும்போதெல்லாம் பார்க்கிறேன். எல்லாருமே நல்லா பண்றாங்க. குறிப்பா சொல்லணும்னா சூர்யா, விக்ரம், தனுஷ்... இவங்களோட நடிப்பு ரொம்ப இயல்பா இருக்கு. நல்ல கதையும் கேரக்டருக்கு முக்கியத்துவமும் இருந்தா, தமிழ்ப் படங்களில் நடிப்பேன். இப்போதைய நடிகைகள் கேரியர் நீடிக்காததுக்குக் காரணம் கேரக்டர்தான். கேரக்டரை சரியா தேர்வு செய்து நடிச்சா, நிரந்தர இடத்தைப் பிடிக்கலாம்!’’

மகளை சினிமாவில் அறிமுகப் படுத்தப்போவதாக செய்திகள் வருகிறதே?



‘‘அது வெறும் வதந்தி. விடுமுறை நாட்கள்ல அவளை சினிமா நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிப் போவேன். அதை வச்சு இப்படி யாரோ கிளப்பியிருக்கலாம். ஆனா அப்படி ஒரு யோசனை இப்போதைக்கு கிடையாது. இப்போ அவ டென்த் படிக்கறா. கதை எழுதறதுல அவளுக்கு ஆர்வம் அதிகம். ரைட்டர் ஆகணும்ங்கிற ஆசை அவளுக்குள்ள இருக்கு. அப்புறம் ஃபேஷன் டிசைனிங்கிலும் ஈடுபாடு அதிகம். அவ என்ன ஆகணும்னு நினைக்கிறாளோ, அதுக்கு வழிகாட்டறது எங்களோட கடமை. நாளைக்கே அவ, ‘சினிமாவுல நடிக்கணும் மம்மி’ன்னு சொன்னாலும் அதுக்கும் நான் தடை போட மாட்டேன்!’’
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்