மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தேனா?





‘அந்தப் பொண்ணு பிரமாதமா நடிக்குதுப்பா...’ என இனியாவின் திறமையைக் கொண்டாடுகிறது கோடம்பாக்கம். ஆனால், ‘இன்னும் பெருசா வரமுடியலையே’ என்ற ஃபீலிங்கும், ‘அம்மாவின் கைப்பேசி’ தன்னை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்ற நம்பிக்கையும் மட்டும் இனியாவுக்குள் உறைந்து கிடக்கிறது. சன் டி.வி ‘சூப்பர் குடும்பம்’ ஷூட்டிங்கிலிருந்து திரும்பியவரின் முகத்தில் தென்பட்ட அசதியும் அழகு. கண்களில் தூக்கத்தின் பெண்டுலம் ஆட... நம்மிடம் பேசினார்.

‘‘தமிழ்ல ‘வாகை சூடவா’ படம் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. படத்துக்கு தேசிய விருது கிடைச்சதில் எனக்கு சந்தோஷமே. என்னோட நடிப்புக்கும் விருது கிடைக்கும் வாய்ப்பு இருந்தும், நானே டப்பிங் பேசாததால் மிஸ்ஸாகிடுச்சு. நான் மலையாளி என்றாலும் தமிழ் பேச, படிக்கத் தெரியும். அப்படி இருந்தும் சில காரணங்களால் அந்தப் படத்தில் பேச முடியாமல் போய்விட்டது. அப்புறம் ‘மௌனகுரு’ படத்துக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு வந்த வாய்ப்புகளும், கதைகளும் சரியா அமையாததால கொஞ்சம் கேப் விழுந்திடுச்சு.

இப்போ பெரிசா நம்பிக்கிட்டிருப்பது ‘அம்மாவின் கைப்பேசி’ படத்தைத்தான். படத்தில் செல்விங்கற சாந்தனுவின் முறைப்பெண் கேரக்டர் எனக்கு. சின்ன வயசிலிருந்தே ‘உனக்கு நான், எனக்கு நீ’ன்னு அன்பை வளர்த்து வரும் நாங்கள், திருமணத்தில் இணைய முடியாமல் போகிறது. எனக்கு வேறொருவருடன் கல்யாணம் ஆகி போயிடுறேன். மீண்டும் ஒரு சூழலில் அவர் திரும்பி என் வாழ்க்கையில வருவதும், அதன் பிறகான பயணமுமாக எதார்த்தமான கதை. ரொம்ப சென்டிமென்ட்டான கேரக்டர்.

நான் இந்தப் படத்தில் கமிட் ஆனதுமே, ‘தங்கர்பச்சான் ரொம்ப கோபப்படுவார்... பார்த்துக்க’ன்னு நிறைய பேர் பயமுறுத்தினாங்க. ஆனால் சீன்ல அவரு என்ன எதிர்பார்க்கிறாரோ, அந்த ஃபீலிங்கை கேமரா முன்னாடி கொண்டு வந்துட்டா ஒண்ணுமே சொல்லமாட்டார். இரண்டு காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே அழுதிட்டேன். அந்தக் கதை என் மனசை பாதிச்சதால, கேரக்டரை உள்வாங்கி அதை அப்படியே வெளிப்படுத்த முடிஞ்சது. அவரோட இயக்கத்தில் நடிச்சதை பெரிய அனுபவமா எடுத்துக்கிறேன்...’’



‘‘மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்திட்டீங்களாமே..?’’
‘‘ஐயோ! அப்படி யார் சொன்னது. அவரோட டைரக்ஷன்ல நடிக்கறதுக்கு பெரிய போட்டியே இருக்கும்போது யார்தான் வேணாம்னு சொல்வாங்க? ‘கடல்’ படத்திலிருந்து சமந்தா விலகியதும் என்னைத்தான் கூப்பிட்டாங்க. அந்த நேரத்தில் வேறொரு படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் போயிட்டேன். டேட்ஸ் பிராப்ளமா இருந்தது. எவ்வளவோ டிரை பண்ணியும் மணி சார் படத்தில் நடிக்க முடியாமல் போனதில் எனக்கு வருத்தம்தான். அதேமாதிரி பாரதிராஜாவோட ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் என்னோட கேரக்டரையே எடுத்துவிட்டதால், அந்தப் படத்திலும் நடிக்கமுடியாமல் போனது. இதெல்லாம் என்னோட துரதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எல்லாம் நன்மைக்கேன்னு மனசை தேற்றிக்கிறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்?’’ என்ற இனியாவின் முகம் இப்போது ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

‘‘பத்திரிகைக்கு பேட்டி கேட்டாகூட இனியா காசு கேட்கிறார்னு செய்தி வந்ததே?’’
‘‘அடப்பாவமே! யாராவது அப்படி கேட்பாங்களா? மீடியாக்காரங்க எந்த நேரத்தில் பேட்டி கேட்டாலும் நான் மறுத்ததில்ல. இப்போகூட இரவு பதினொரு மணிக்கு மேல உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். இத வச்சே என் கேரக்டரை புரிஞ்சுக்கலாம். என் மேல சிலருக்கு பொறாமையும் இருக்கு சார். என்னோட வளர்ச்சி பிடிக்காம அவங்க கிளப்பிவிட்ட செய்தியாகூட இருக்கலாம். நான் யார்கிட்டேயும் டிமாண்ட் பண்ணினதில்ல. ஒரு நடிகரோட இணைச்சு கிசுகிசு வர்றதைக்கூட ரசிக்கலாம். ஆனா இப்படிப்பட்ட அபாண்டமான பொய்யை பொறுத்துக்க முடியாது’’ என்றவர், தான் நடித்துவரும் படங்களை பட்டியல் போட்டார். ‘‘தமிழில் ‘அம்மாவின் கைப்பேசி’ தவிர, ‘கண்பேசும் வார்த்தைகள்’, மலையாளத்தில் வினித் ஜோடியா ‘ஒமேகா’, லால் ஜோடியா ‘நாகந்தம்’, அப்புறம் ‘ரேடியோ’ன்னு அஞ்சு படம் கையில இருக்கு. தனுஷ், சூர்யா, விஜய், அஜித்கூடவெல்லாம் நடிக்க ஆசை இருக்கு. அதற்கான சந்தர்ப்பம் வரும்னு காத்திருக்கேன்!’’
‘இனியா’ வது அப்படி எழுதாதீங்கப்பா!
- அமலன்