காவிரி வேதனை கன்னட விவசாயிக்கு புரியாதா?





இது மூன்றாவது சீசன். எந்நேரத்தில் என்ன நடக்குமோ என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகத் தமிழர்கள். தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று கொடிபிடித்து போராட வேண்டிய துர்பாக்கிய நிலை பெங்களூர் தமிழ்ச்சங்கத்துக்கு. காவிரி விவகாரம், மீண்டும் கர்நாடக தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நோக்கி நகர்த்தப்படுகிறது. காவிரிக்காக தமிழகத் தமிழர்கள் கையேந்தி நிற்பதும், நீதிமன்றத் தீர்ப்புகள் வரும்போதெல்லாம் கர்நாடகம் ‘போராட்டம்’ என்ற பெயரில் வன்முறையில் இறங்குவதும் தொடர்கதையாக நீள்கிறது. காவிரிப் பிரச்னையில் அரசியல் சட்டத்தின் அத்தனை ஷரத்துகளையும் அப்பட்டமாக மீறுகிறது; ஒப்பந்தங்களை காலில் போட்டு மிதிக்கிறது கர்நாடகம். இந்த அடாவடியால் தமிழகத்தில் விவசாயமே முடங்கிப்போகும் நிலை! இரு மாநில விவசாயிகள் பரஸ்பர புரிதலோடு இதைத் தீர்க்க முடியாதா?

கடந்த 2000த்தில் காவிரி விவகாரம் உச்சம் பெற்றிருந்த நிலையில், சென்னை வளர்ச்சிக் குழுமத்தின் ஏற்பாட்டில், பேராசிரியர் ஜனகராஜ் முயற்சியில் காவிரிக் குடும்பம்Õ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கர்நாடக தரப்பில் கர்நாடக விவசாய சங்கத்தலைவர் புட்டண்ணாவும், தமிழகத்தின் தரப்பில் மன்னார்குடி ரெங்கநாதனும் தலைவர்களாக இருந்தார்கள். இருதரப்பிலும் 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு, இருமாநில விவசாயிகளின் பிரச்னைகளை அறிந்து, காவிரி நீரைப் பிரச்னையின்றி பகிர்ந்து கொள்வது பற்றி பேச்சு நடத்தியது. நல்ல திசையில் நகர்ந்த இந்தப் பேச்சுவார்த்தை திடீரென முடிவுக்கு வந்துவிட்டது.



“கர்நாடகக் குழுவினர் தமிழகம் வந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார்கள். நாங்களும் கர்நாடகா சென்று கபினி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் அணைகளைப் பார்த்தோம். அங்குள்ள விவசாயிகளுடனும் பேசினோம். Ôகாவிரி இருமாநிலத்துக்கும் பொதுவான நதி என்பதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நீர்ப்பங்கீடு என்று வரும்போது கர்நாடக அரசின் நிலைப்பாட்டையே அவர்கள் வலியுறுத்தினார்கள்...’’ என்கிறார் காவிரிக்குடும்பத்தில் இணைந்திருந்த காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி ஆறுபாதி கல்யாணம்.

‘‘72ல் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கைப்படி, கர்நாடக பாசனப் பரப்பு 6 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர். தமிழகத்தின் பாசனப்பரப்பு 28 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர். இப்போது கர்நாடகத்தின் பாசனப்பரப்பு 18 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர். இதை 27 லட்சத்து 28 ஆயிரம் ஏக்கராக அதிகரிக்க திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரைத் தராமல், அவர்களின் பாசனப் பரப்பை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். காவிரிக் குடும்ப பேச்சுவார்த்தையின்போது இதை சுட்டிக்காட்டினோம். அவர்கள் அது எங்கள் உள்மாநிலப் பிரச்னை என்றார்கள். அதோடு, தமிழகத்தில் குறுவை சாகுபடியை முற்றிலும் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் குறுவைதான் டெல்டாவின் ஜீவாதாரம். இதை எடுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லை.

கர்நாடகக் குழுவில் இருந்த நீர்வள நிபுணர் பி.எஸ்.பவானிசங்கரன் ஒரு யோசனையை முன்வைத்தார். ‘கர்நாடகத்தின் மேற்குச் சரிவு பகுதிகளில் நேத்ராவதி உள்பட 13 நதிகள் ஓடுகின்றன. அவற்றில் 2000 டிஎம்சி தண்ணீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது. அதை கர்நாடகம் பயன்படுத்துவதே இல்லை. வனப்பகுதிகளில் பெரும் அணைகளை உருவாக்கி, அதிசக்தி நிறைந்த பம்பிங் ஸ்டேஷன் மூலம் அந்தத் தண்ணீரை கர்நாடகத்தின் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு வந்தால் கர்நாடகத்தின் தண்ணீர் தேவையை முழுமையாக தீர்த்துவிட லாம். காவிரி நீரை தமிழகத்துக்குத் தந்துவிடலாம்...’ என்றார் பவானிசங்கரன். ஆனால், கர்நாடக குழுவினர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.



காவிரியை நம்பி கர்நாடகத்தில் வெறும் 18 சதவீத நிலப்பரப்புதான் இருக்கிறது. தமிழகத்தில் 34 சதவீத நிலப்பரப்பு நம்பியிருக்கிறது. ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரை சுமார் 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரியே இருக்கிறது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தோம். கெஞ்சிப் பார்த்தோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதுÕ என்பது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. அதனால் காவிரிக்குடும்பத்திலிருந்து விலகிவிட்டோம்’’ என்கிறார் ஆறுபாதி கல்யாணம். அக்குழுவில் இருந்த தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் துரைமாணிக்கமும் விரக்தியாகப்பேசுகிறார்.

‘‘தமிழகத்தின் தேவையைப் புரிய வைக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டோம். வெள்ளம் வரும்போது வடிகாலாக இருக்கிற நிலப்பரப்பில் வசிப்பவர்களுக்கு நதியில் அதிக உரிமை உண்டு என்கிற சர்வதேச பாசன உரிமை விதிகள் பற்றியெல்லாம் விவாதித்தோம். ஆனால் அவர்கள் மிகத்தெளிவாக இருந்தார்கள். அங்கிருக்கும் அளவுக்கு இங்கே விவசாய சங்கங்களிடம் ஒற்றுமை இல்லை. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்களே ஒழிய தெளிவான நடவடிக்கைகள் இல்லை. மத்திய அரசு இதை இரு மாநிலங்களின் தனிப்பட்ட பிரச்னையாகக் கருதி வேடிக்கை பார்க்கிறது. தமிழக விவசாயிகளின் உணர்வுகள் கொந்தளித்தால் அது மத்திய அரசுக்கும் நல்லதல்ல. கர்நாடக அரசுக்கும் நல்லதல்ல...’’ என்கிறார் அவர்.

ஜனநாயகத்தின் உயர்ந்த பீடமான உச்ச நீதிமன்றத்தையே துச்சமாக நினைக்கிறது கர்நாடகம். மிரட்டல், வன்முறை மூலம் அரசியலமைப்பை கேலி செய்கிற கர்நாடகத்தின் செயல்பாடுகளை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு. அரசியல் சட்டத்தின் 356வது பிரிவெல்லாம் தமிழகத்தை மிரட்டுவதற்கு மட்டும்தான் போலிருக்கிறது.
- வெ.நீலகண்டன்