உப்புவயலில் உழுத பேனா





தலித் உரைநடை இலக்கியத்தில் ஸ்ரீதரகணேசனுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அடித்தட்டு மக்களின் புழங்குமொழியை அதன் தன்மை மாறாமல் படைப்புகளில் இழையோட விடுகிற இப்படைப்பாளி, கற்றல் குறைபாடு உடையவர். தனது தொடர்ந்த வாசிப்பால் அக்குறைபாட்டை வென்றவர். தலித்களின் சுயமரியாதைக்கான போராட்டங்களையும், ஒடுக்குமுறைகளையும் தன் அனுபவ முதிர்ச்சியின் பின்புலத்தோடு படைப்பாக்குபவர். ‘உப்புவயல்’, ‘சந்தி’, ‘வாங்கல்’, ‘அவுரி’, ‘மீசை’, ‘விரிசல்’, ‘சடையன்குளம்’ ஆகிய நூல்கள் மூலம் தமிழ் இலக்கியத்தளத்தில் தன்னை ஆழப்பதிவு செய்துள்ள இவர், தூத்துக்குடி கல்லூரியொன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.

‘‘எங்களுக்கு சொந்த ஊர் மணப்பாடு. அப்பா பலவேசம், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், டெரகோட்டா பொம்மை செய்வதில் புகழ்பெற்றவர். அம்மா லெட்சுமி. அப்பாவையும் அம்மாவையும் பத்திச் சொல்ல நிறைய இருக்கு. அப்பா, பெரிய சுகவாசி. வெள்ளை உடை கசங்காம திரியிறவர். கிறிஸ்தவ கோயில்கள்ல நிறைய வேலைகள் வரும். ஆனா எந்த சிலைக்கும் காசு வாங்க மாட்டார். கேட்டா, ‘கலையை காசாக்கக் கூடாது’ம்பாரு. அவரோட வெள்ளாடைக்கு வெளுப்புப் போடக்கூட அவரால வருமானம் கிடையாது.

எல்லா சுமையும் அம்மா தலையிலதான். நாங்க நாலு பிள்ளைகள். வாழ்நாள் முழுவதும் நூற்பாலையிலயே கிடந்து நஞ்சுபோன மனுஷி. என் எல்லா நாவல்கள்லயும் அம்மா ஒரு கதாபாத்திரமா நுழையிறதை என்னால தடுக்க முடியாது. திராவிட இயக்கத்துல அம்மாவுக்கு தீவிர பற்று உண்டு. பூ, பொட்டுகூட வைக்க மாட்டாங்க. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர்றதே பெரிசா இருந்த நேரத்தில, போராட்டங்களுக்குப் போய் முன்னாடி நின்னு கொடி பிடிப்பாங்க. படிச்சது கொஞ்சம்தான்னாலும், பத்திரிகைகள், தொழிற்சங்க புத்தகங்கள் எல்லாம் வாசிப்பாங்க.  

நான் சிறுவயசுல இருந்தே தட்டழிஞ்ச பயலாத்தான் வளந்தேன். கற்றல் குறைபாடு வேற. போன நொடியில படிச்சது, இந்த நொடியில நினைவிருக்காது. என் தம்பிகள் அப்படியில்லை. எனக்குப் பின்னாடி சேந்து, எனக்கு முன்னாடி போயிட்டாங்க. ‘உன் தம்பிங்க காலை கழுவிக்குடிச்சாக் கூட உனக்கு புத்தி வராதுடா’ன்னு திட்டுவாரு வாத்தியாரு.



ஏழாம் வகுப்பில் இரண்டாவது முறை ஃபெயிலானதும் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்துட்டது. ஹாஸ்டல்ல இருந்து மூட்டை, முடிச்சைக் கட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எல்லாரும் திட்டினாங்க. ‘பள்ளிக்கூடம் போகச் சொன்னா வீட்டை விட்டு ஓடிருவேன்’னு மிரட்டுனேன். அடங்கிட்டாங்க. கொஞ்சநாள் சும்மாவே திரிஞ்சேன். ‘ஏண்டா வெத்தா சுத்துறே, என்கூட வந்து கலையைக் கத்துக்கோ’ன்னு அப்பா சொன்னார். அவருக்குக் கையாளா சேந்தேன். ஆனா, அம்மாவுக்கு விருப்பமில்லை. ‘அஞ்சு காசுக்கு பிரயோசனம் இல்லாத அந்தத் தொழிலு உன் அப்பனோட போகட்டும். நீயும் தட்டழிஞ்சு போயிறாதே...’ன்னு திட்டுச்சு. கொஞ்ச நாள் சித்தாளு வேலைக்குப் போனேன். கல்லும், மண்ணும் சுமக்கிற வேலை நம்ம உடல்வாகுக்கு சரிப்படலே.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்துல வசிக்கிற பெரும்பாலான தலித்களுக்கு கருவாட்டு கம்பெனிகள்தான் வாழ்வாதாரம். பெரிசு பெரிசா மீன்களைக் குவிச்சு வச்சிருப்பாங்க. வெட்டி, உப்பு வச்சு காய வைக்கணும். நல்லா காசு புழங்குற வேலை. கொஞ்சநாள் அங்கேயும் வேலைக்குப் போனேன். அதுவும் ஒத்து வரல.

யாருகிட்டயும் சொல்லாம மதுரைக்கு ஓடிட்டேன். நான் நினைச்சதை விட மதுரை பெரிசு. எந்த திக்குல போறதுன்னு தெரியலே. ஒருநாள் ராத்திரி முழுவதும் மீனாட்சியம்மன் கோயில் திண்டுல உக்காந்திருந்தேன். ஒருத்தர் என்னைக் கூப்பிட்டு விசாரிச்சு, டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்து, ஒரு மரக்கடையில வேலைக்குச் சேத்துவிட்டார்.

மூணு நேரம் சாப்பாடு... சினிமாவுக்குப் போக காசு... அந்த வயசுல இதுக்குமேல என்ன வேணும்..? ஏகபோகமா வாழ்க்கை ஓடுச்சு. வீட்டில அங்கேயிங்கே தேடிப் பாத்துட்டு, என்னைக் கை கழுவிட்டாங்க. ஆனா மதுரையும் சீக்கிரமே கசந்துபோச்சு. வீட்டு ஞாபகம் வந்துச்சு. எப்படி தூத்துக்குடியில இருந்து சொல்லாம கிளம்பி வந்தேனோ, அதேமாதிரி மதுரையில இருந்தும் கிளம்பிட்டேன். ‘காணாமப் போன பய திரும்பி வந்துட்டான்’னு எல்லாரும் சந்தோஷப்பட்டாங்க. அம்மா மட்டும் ரொம்பவே கவலைப்பட்டாங்க. தம்பிகள் எல்லாம் நல்லாப் படிச்சு மேற்படிப்புகளுக்குப் போயிட்டாங்க. நான் மட்டும் இப்படி தத்தியா சுத்துறேனேன்னு கவலை. அவங்க வேலைபாத்த தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்லுலயே சேத்து விட்டாங்க.

நூற்பாலை வேலை சாதாரணமில்லை. காத்தோட காத்தா பஞ்சும் மூக்குல ஏறிடும். ஆஸ்துமா வந்தா ஆயுசுக்கும் போகாது. வெக்கை வேற. ஆனாலும் இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். அம்மாவோட சேந்து நானும் தொழிற்சங்க வேலைகள்ல இறங்குனேன். கம்யூனிசம் சார்ந்த புத்தகங்கள், இதழ்கள் படிக்கிற வாய்ப்புக் கிடைச்சுச்சு. தொழிற்சங்கம் மூலமா இலக்கிய நண்பர்கள் பரிச்சயம் கிடைச்சுச்சு. தூத்துக்குடியில மூப்பனார்னு ஒரு வக்கீல் இருந்தார். அவர் படிச்ச புத்தகங்களை வச்சு ஒரு நூலகம் உருவாக்கியிருக்காங்க. அங்கேதான் எனக்கு நாவல்களும் சிறுகதைகளும் அறிமுகமாச்சு.  

 சரியா படிக்காததால அவமானங்களை சந்திச்சவன் நான். படிப்புங்கிறது பள்ளிக்கூடத்தில படிக்கிறது மட்டும்தானா? காலம் எவ்வளவோ பாடங்களை கத்துக்கொடுக்குது... அதை சரியா கத்துக்கிட்டவங்க எத்தனை பேர்..? நான் கத்துக்கிட்டேன். குடிநீர்ல இருந்து குடியிருப்பு வரைக்கும் எல்லா விதத்திலயும் ஒடுக்கப்பட்டு, குறுகிப்போய் கிடக்கிற ஒரு சேரியில பிறந்து, பள்ளிக்கூடம் போகாம, முழுசா ஒரு தொழில்ல ஒன்றாம, வழிதவறின ஆட்டுக்குட்டி மாதிரி திரிஞ்சவன். நான் கத்துக்கிட்ட பாடங்களை என் பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும், என்னை மாதிரியே நெருக்கடிகளை கடந்து வாழப்போற மக்களுக்கும் சொல்லணுமே! அந்தப் பொறுப்புணர்வுதான் எழுதத் தூண்டுச்சு.

முதல் கதை ‘செம்மலர்’ல பிரசுரமாச்சு. அதுக்குப்பிறகு உற்சாகமா எழுதத் தொடங்குனேன். சிறுகதைகள் லாவகப்பட்ட பிறகு நாவல் எழுத ஆசை வந்துச்சு. அப்போ ராஜம்கிருஷ்ணன் தூத்துக்குடி வந்து, ‘கரிப்பு மணிகள்’ நாவலை எழுதிக்கிட்டிருந்தாங்க. எங்கேயோ இருந்துவந்து ஒருத்தர் நம் மக்களோட கதையை எழுதும்போது நாம ஏன் எழுதக்கூடாது..? ஒருவருஷ உழைப்புல ‘உப்புவயல்’ நாவலை எழுதி முடிச்சேன். கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தின போட்டிக்கு அனுப்புனேன். முதல் பரிசு கிடைச்சுச்சு. என்.சி.பி.ஹெச் நிறுவனம் அதை நூலாக்கினாங்க. தமிழக அரசு பரிசும் கிடைச்சுச்சு.

பெரியதாழை கிராமத்துல பரதர்களுக்கும், தலித்களுக்கும் இருந்த இணக்கமான உறவை மையமா வச்சு ஒரு நாவல் எழுத விரும்புனேன். எழுத்துக்கு வேலை தடையா இருந்துச்சு. திடீர்னு ஒருநாள் வேலையை விட்டுட்டு வந்து நின்னேன். அது எனக்கு திருமணமான தருணம். மனைவி உள்பட எல்லாரும் அதிர்ந்து போயிட்டாங்க. ‘6 மாதம் மட்டும் வேலைக்குப் போகாம வீட்டில இருக்கேன். ஒருநாளைக்கு 2 நேரம் சாப்பாடு, 2 டீ, 3 ரூபாய்க்கு சொக்கலால் பீடி போதும் எனக்கு. நாவலை எழுதி முடிச்சுருவேன்’னு மனைவிகிட்டே சொன்னேன். அதேமாதிரி முடிச்சேன்.

அதுக்குப்பிறகு ஒரு செக்யூரிட்டி ஏஜென்சியில வேலைக்குச் சேந்தேன். இதிலயும் சிக்கல் இருக்கு. லேசா கண்ணசந்தாலும் ஏச்சு. புதுசா ஒருத்தர் உள்ளே புகுந்துட்டா, அசிங்கமா ஏசுவாங்க. கடந்து போறவங்களுக்கு சல்யூட் வைக்கலன்னா மதிக்கமாட்டியான்னு திட்டுவாங்க. எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டுத்தான் வேலை செய்யணும். எழுத நேரம் கிடைக்கு. மனசு அமைதியா இருக்கு.

ஏழாம் வகுப்போட படிப்புக்கு முழுக்குப் போட்டு தட்டழிஞ்ச பயலா திரிஞ்ச இந்த ஸ்ரீதரகணேசனோட புத்தகங்கள், இப்போ அஞ்சு பல்கலைக்கழகங்கள்லயும், 3 தன்னாட்சி கல்லூரிகள்லயும் பாடப் புத்தகங்களா இருக்கு. அந்த நினைப்புதான் என்னைத் தீவிரமா எழுதவும் வைக்குது!’’  
- வெ.நீலகண்டன்
படங்கள்: ராஜா சிதம்பரம்