குரலும் நடிச்சுதா?





இதயப் பாதுகாப்புக்கு எளிய அக்கு சிகிச்சை முறைகள் உள்ளங்கையிலேயே இருக்க, நாம் ஆயிரம் சிகிச்சைகள் தேடி லட்சங்களை செலவழிக்கிறோம். ‘கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது’ என்று இதைத்தான் சொன்னார்களோ!
- இராம.கண்ணன், திருநெல்வேலி.
தமிழ்நாட்டிலேயே நவீன விவசாயக் கருவிகளை குறைந்த விலையில் தயாரிக்கும் கார்த்திகேயன் - உமா தம்பதிக்கு விவசாயத் துறையே கடமைப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் இனி சிரமப்படத் தேவையில்லை!
- ஜி.மணிமேகலை, திருச்சி.

ஜனனி அய்யர் அம்மணிக்கு தமிழ் பேசத் தெரிந்திருப்பது சந்தோஷம்தான். ஆனால், அவங்க நடிச்சிருந்த இரண்டு படங்களில் சொந்தமாக குரல் கொடுத்து நடிச்சாரா என்று மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டீரே... அதக் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சாரே!
- க.சஞ்வீவி, கும்பகோணம்.

இனி, ரத்தத்துக்கு பதில் எச்சிலைக் கொண்டே உடல் பரிசோதனை செய்துகொள்ளலாமா? எச்சிலுக்கும் மருத்துவத்துக்கும் இவ்வளவு தொடர்பு இருப்பதைப் படித்த பிறகு, எச்சிலை இழிவாக நினைக்கவே தோன்றவில்லை!
- எஸ்.வாசுதேவன், சென்னை-14.

தன் படத்தில் நடித்த நடிகை அஸ்வினியின் திடீர் மரணத்தால் திக்கற்ற நிலையில் இருக்கும் அவரது மகனின் படிப்புச் செலவை ஏற்ற நடிகர் பார்த்திபனின் செயல் வியக்க வைத்துவிட்டது. இந்த மனிதநேயத்தை சினிமா உலகில் பார்ப்பது அரிதுதான்!
- ஆர்.ப்ரியதர்ஷினி, பூனாம்பாளையம்.

அரசுப் பள்ளிகளின் சில அடாவடி ஆசிரியர்களுக்கு இயக்குநர் அன்பழகன், சமுத்திரக்கனி கொடுத்த ‘சாட்டை’யடி பற்றிய சினிமா விமர்சனம் படு சூப்பர்!
- பாலகிருஷ்ணன், மதுரை.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான அனுபவங்களைப் படிக்கும் ஆவல் இப்போதே ஏற்பட்டு விட்டது. ‘பாட்ஷாவும் நானும்’ புத்தகம், ‘பாட்ஷா’ திரைப்படத்தைவிட பெரிய வெற்றியைப் பெற வேண்டும்!
- மயிலை.கோபி, சென்னை-83.

உதவியை விரும்பாதவருக்கும் உதவி செய்யும் உத்தியை ‘சுட்ட கதை சுடாத நீதி’ சொல்லிக் கொடுத்தது. ‘சுட்ட’ கதையாக இருந்தாலும் வாராவாரம் அதை சரியான பதத்தில் சமைத்துத் தருவது சூப்பர்!
- வீ.பைரவன், திண்டுக்கல்.

மின் வாரியத்துக்காக ஆல்தோட்ட பூபதி தயாரித்துக் கொடுத்த கரன்ட் கட் காரணங்கள் உண்மையாகவே வொர்க் அவுட் ஆகக் கூடியவை. ஒவ்வொரு இ.பி ஆபீஸிலும் அதை ஒட்டி வைக்கப் போகிறார்கள் பாருங்கள்!
- ஜி.டி.சகாயம், வந்தவாசி.

‘கேமரா மேதை’ கர்ணன், தன் உடலை வருத்தி சண்டைக்காட்சிகளை எப்படியெல்லாம் எடுத்துள்ளார் என்பதை ‘நேற்றைய பொழுதில்’ பகுதி வழி அறிந்தபோது உள்ளம் சிலிர்த்தது!
- வி.சி.கீதா, பெங்களூரு.