மல்கோவா... பால்கோவா...





மப்பும் மந்தாரமுமாக வானம் போக்கு காட்டிக்கொண்டிருந்த மாலைப்பொழுது. பின்னி மில்லில் நடந்த ‘நான் ராஜாவாகப்போகிறேன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப் பார்த்தால், செட்டுக்கு உள்ளேயும் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது ஒரு மும்பை கிளி. ‘மல்கோவா... பால்கோவா... ஐயம் ஃபிரம் கிரேட் கோவா...’ என ‘தத்துவ’ முத்துக்களை உதிர்க்கும் பாடலுக்கு பின்னி மில் அதிர ஆட்டம் போட்ட அந்த அழகுப்புயல் ஜரீன் கான். கத்ரீனாவை நகலெடுத்த தோற்றத்தில் கவர்ந்திழுக்கும் ஜரீன், இந்தியில் சல்மான்கானுக்கு ஹீரோயின். இங்கே வந்து அயிட்டம் நம்பருக்கு ஏன் ஆடுகிறார்?

ஷாட் முடித்து கேரவனுக்குள் ஜரீன் நுழைந்தபோது, கேள்விகளுடன் நுழைந்தோம் நாம்.

‘‘மாடலிங் செய்துகொண்டிருந்த நான், பாலிவுட்டில் பிரபலமானதற்குக் காரணமே சல்மான்கான்தான். ‘வீர்’ படத்தில் இளவரசி போன்ற லுக்கில் ஒரு புதுமுகத்தைத் தேடியபோது, அவர் கண்களில் சிக்கியது என் அதிர்ஷ்டம். அதன்பிறகு ‘ரெடி’யில் நடித்தேன். சமீபத்தில் வெளிவந்த ‘ஹவுஸ்புல் 2’ படத்திலும் என்னோட நடிப்புக்கு பாராட்டுகள் குவியுது. இந்தி ஃபீல்டில் என்னோட கேரியரைத் துவக்கி வைத்த சல்மானுக்கு தேங்க்ஸ்’’ என்று சல்மான் புராணம் பாடும் கத்ரீனா, ஸாரி... ஜரீன், வாழைத்தண்டு கால்களை மறைப்பதற்காக போட்டிருந்த டவல் வழுக்கி விழாமல் கவனம் காட்டுகிறார்.


‘‘சல்மான் ஜோடியா நடிச்சிட்டு ஒத்த பாடலுக்காக ஆட வந்திருக்கீங்களே?’’

‘‘ஏன்... ஆடக் கூடாதா? டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பார்த்துட்டுதான் டைரக்டர் ப்ருத்வி ராஜ்குமார் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். வெற்றி மாறன் சார் வசனம் எழுதற படம், ஜி.வி.பிரகாஷ் மியூசிக், பாட்டும் சூப்பரா இருந்துச்சு. யார் ஹீரோ, காஸ்ட்யூம், எத்தனை நாள் ஷூட்டிங்னு எல்லாம் தெரிந்துகொண்ட பிறகுதான் இந்தப் பாட்டுக்கு ஆட சம்மதித்தேன். தமிழ் டைரக்டர்கள் ரொம்ப ஸ்பீடா வொர்க் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டேன். அதை பிராக்டிகலா தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைச்சது. நிஜமாகவே ரொம்ப ஃபாஸ்ட்டா ஷூட்டிங் போகுது. இந்தப் பாட்டுல ஹீரோ நகுல் என்னோட சேர்ந்து ஆடலை. ஆனா என்னோட ஆட்டத்தை வேடிக்கை பார்ப்பது போல ஷூட் பண்ணியிருக்காங்க. இந்தியில சல்மானோட ஒரு அயிட்டம் நம்பர் ஆடியிருக்கேன்னாலும், இது எனக்குப் புதுசு. பார் அட்மாஸ்பியர்ல துப்பாக்கியை வச்சிக்கிட்டு என்னைச் சுத்தி நிறைய பேர் ஆடற கான்செப்ட் த்ரில்லிங்கா இருந்துச்சு’’ என்ற ஜரீனிடம் ‘‘மல்கோவா, பால்கோவாவுக்கு அர்த்தம் தெரியுமா?’’ என்றோம்.



‘‘ம்... கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஜாலியான பாட்டுன்னு புரிஞ்சுது’’ என்கிறவர், தமிழில் அமர்க்கள ஹீரோயினாக அறிமுகமாகி இருக்க வேண்டியவர். ஆமாம்... ‘கரிகாலன்’ படத்தில் விக்ரம் ஜோடி இவர்தான். அந்தப்படம் பற்றிக் கேட்டாலே ஜரீனுக்கு முகம் வாடுகிறது. ‘‘முதல் ஷெட்யூலில் வந்து நடித்துக் கொடுத்தேன். அடுத்த ஷெட்யூல் சீக்கிரமே ஆரம்பம் என்றார்கள். அப்புறம் ‘விக்ரம் இன்னொரு படத்தில் பிஸியாக இருக்கிறார்’ என்றார்கள். அதற்கு அப்புறம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. படத்தின் ஸ்கிரிப்ட் சர்ச்சையில் சிக்கியதாகக் கேள்விப்பட்டேன். அப்புறம் டைரக்டரை மாற்றியதாகக் கேள்விப்பட்டேன். அதன்பின் படமே கைவிடப்பட்டதாக செய்திகளில் படித்தேன். ஆனால் எனக்கு எந்தத் தகவலும் இல்லை. என் கால்ஷீட் வீணானதுதான் மிச்சம். நான் போன் செய்தபோது யாருமே எடுக்கவில்லை என்பது இன்னும் கொடுமை. படத்தின் ஹீரோயின் நான். படம் என்ன ஆனது என்பதை எனக்கு சொல்வதுதானே நியாயம்!’’ எனப் பொங்கியவரை கூல் செய்ய, ‘‘கத்ரீனா கைஃப் ஜெராக்ஸ் போல இருப்பதை எப்படி எடுத்துக்கறீங்க?’’ என்றோம்.



இன்னும் பொங்கினார் அவர். ‘‘கத்ரீனா கூட ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. மும்பையில எங்க போனாலும் அதையேதான் கேட்பாங்க. அதனாலேயே எனக்கு தமிழ் ஃபீல்டுக்கு வந்து தனியா கலக்கணும்னு ஆசை வந்திருக்கு. தமிழில் ஹீரோயினா நடிக்க விரும்பறேன். எந்த ஹீரோவோடன்னு எக்ஸ்ட்ரா கேள்வியைப் போட்டுடாதீங்க. எல்லாரையுமே எனக்குப் பிடிக்கும்’’ என்றவர், மீண்டும் ஆடத் தயாரானார். மல்கோவா... பால்கோவா...
- அமலன்