ஜெல் மெழுகுவர்த்தியில் ஒளிரும் வருமானம்!





பன்னிரண்டு மணி நேர மின்வெட்டுக்கு இன்வெர்ட்டர்களும், ஜெனரேட்டர்களும், எமர்ஜென்சி விளக்குகளும் ஈடுகொடுக்க முடியாமல் போக... மக்களின் பார்வை மறுபடி மெழுகுவர்த்தி, அரிக்கன் விளக்குகள் பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. சாதாரண மெழுகுவர்த்தி கட்டுப்படியாகாத நிலையில் வேறு என்னதான் தீர்வு? சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த ஜெயா தயாரிக்கிற ஜெல் மெழுகுவர்த்திகள் இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கின்றன.

‘‘பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு நிறைய கைவினைக் கலைகள் பண்ண ஆரம்பிச்சேன். அதுல ஒண்ணுதான் இந்த ஜெல் மெழுகுவர்த்தி. சாதாரண மெழுகுவர்த்திக்கு அச்சு வேணும். சரியான பதத்துல மெழுகைக் காய்ச்சி, அச்சுல ஊற்றி, காய வச்சு எடுத்துப் பண்ற அது பெரிய வேலை. ஜெல் மெழுகுவர்த்தி செய்யறதும் சுலபம். பார்க்கவும் அழகு’’ என்கிற ஜெயா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.



என்னென்ன தேவை? முதலீடு?

‘‘ஜெல் வாக்ஸ், ஸ்டீல் பாத்திரம், விதம்விதமான கண்ணாடி டம்ளர்கள், கப்புகள், ஜெல் பெர்ஃப்யூம், ஜெல் கலர், கலர் மணல், கிளிஞ்சல், குட்டிக் குட்டி பொம்மைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள்கள், திரி... ஆரம்ப முதலீடு ஆயிரம் ரூபாய் போதும். இதுல 60 முதல் 70 மெழுகுவர்த்திகள் செய்யலாம்.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘சாதாரண மெழுகுவர்த்தி சில மணி நேரம்தான் எரியும். ஜெல் மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரியும். ஒரு மாசம் வரை உபயோகிக்கலாம். ஜெல் மெழுகுவர்த்தியோட இன்னொரு ஸ்பெஷல், அதோட வாசனை. லேவண்டர், ரோஸ், மல்லிகைன்னு விருப்பமான வாசனை சேர்த்துப் பண்றதால, எரியும்போதே வீடு முழுக்க ரம்மியமான நறுமணம் பரவும். கண்ணாடி டம்ளர், கப்புகள்ல வைக்கிறதாலயும், உள்ளுக்குள்ள பொம்மைகள், கலர் மணல் போட்டுச் செய்யறதாலயும், அது எரியறபோது வெளிச்சத்துல, ரொம்ப அழகா தெரியும். கண்ணாடி டம்ளர்களோட மாடல்களைப் பொறுத்து எப்படி வேணா செய்யலாம். ஒரே கலர், டபுள் கலர், மூன்று கலர்... இப்படியும் வித்தியாசம் காட்டலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘ஒரு நாளைக்கு 100 மெழுகுவர்த்திகள் வரை செய்யலாம். சின்ன சைஸ் 70 ரூபாய்க்கும், அதிகபட்சமா பெரிய சைஸ் 500 ரூபாய் வரைக்கும் விற்கலாம். கிறிஸ்துமஸ், நியூ இயர் சீசன்ல நிறைய விற்பனையாகும். அன்பளிப்பா கொடுக்கலாம். 50 சதவீத லாபம் தங்கும்.’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சிக்குக் கட்டணம் 500 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்