அபியாவை கொன்ற ஆக்டோபஸ்!





நாகாலாந்தைச் சேர்ந்த அபியாவுக்கு பறப்பதில் அலாதி ஆர்வம். பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து பழக்கப்பட்ட அபியாவின் உயிரை, பத்து மீட்டர் உயர ஆக்டோபஸ் குடித்துவிட்டது. சென்னை அருகில் இருக்கும் ஒரு பொழுதுபோக்குப் பூங்காவுக்கு விடுமுறையைக் கொண்டாடச் சென்ற அபியா, ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றியபோது விழுந்து இறந்துவிட்டார்.

அபியாவோடு சேர்த்து கடந்த ஓராண்டில் மட்டும் பொழுது போக்கு பூங்கா எனும் ஆக்டோபஸ்கள் தின்று தீர்த்த உயிர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும்.

பொழுதுபோக்கு பூங்கா கலாசாரம் என்பது ஐரோப்பிய இறக்குமதி. அந்நாடுகளில் இங்கிருப்பதை விட வெகு பிரமாண்டமான ராட்டினங்கள் உண்டு. ஆனால் அவற்றை இயக்குபவர்கள் நிபுணர்களாகவும், அனுபவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இங்கு அப்படி எவ்வித பயிற்சியும் இல்லை. ராட்டினங்களை இயக்கவும், நிறுத்தவும் மட்டுமே பயிற்றுவிக்கிறார்கள். ஆபத்தான நேரத்தில் எப்படி செயல்படுவது என்பது கூட தெரிவதில்லை.

போட்டி காரணமாக, புதிது புதிதாக பிரமாண்ட ராட்டினங்களை வாங்கிக் குவிக்கிறார்கள். அதற்கேற்ப கணிசமான கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை. அபியாவின் உயிரைப் பறித்த பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த 6 மாதத்தில் நிகழ்ந்த 3வது விபத்து இது என்கிறார்கள். விபத்தை ஏற்படுத்திய ஆக்டோபஸ் ராட்டினம், விளிம்புப் பகுதியில் தனித்தனி இருக்கைகளைக் கொண்டது. அங்கும் இங்கும் அலைந்தபடி சுற்றும் இந்த ராட்டினம், த்ரில்லான அனுபவத்தை விரும்பும் இளைஞர்களை வெகுவாக ஈர்க்கக்கூடியது. அதிவேகத்தில் சுழலக்கூடிய இந்த ராட்டினத்தில் சீட் பெல்ட் இல்லை. இருக்கைக்கு முன் ஒரு கம்பி மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இருக்கைக்கும், இந்த கம்பிக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. இருக்கையில் பொருத்தப்பட்ட கம்பி சரியாக ‘லாக்’ செய்யப்பட்டுள்ளதா என்று சரி பார்த்த பின்னரே ராட்டினத்தை இயக்க வேண்டும். ஆனால், போதிய பயிற்சி இல்லாததால் ஊழியர் அவசரக் கோலத்தில் இயக்கியுள்ளார். ராட்டினம் சுழலத் தொடங்கிய நிலையில், கம்பி இடைவெளியில் சரிந்து கீழே விழுந்த அபியா, சுதாரித்து எழமுயற்சித்தபோது, பின்னால் வந்த இன்னொரு இருக்கை தலையில் மோதி உயிரைப் பறித்துவிட்டது.



பொழுதுபோக்கு பூங்காக்களை தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறையினர் ஆய்வுசெய்து சான்றிதழ் வழங்க வேண்டும்; பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ராட்டினங்களின் உறுதித்தன்மையை பரிசோதிக்க வேண்டும்; காவல்துறை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளும் காற்றில் பறக்கின்றன. விபத்து நடக்கும்போது எழும் சலசலப்புகள் ஓரிரு நாட்களில் அடங்கிவிடுகிறன்றன. அதன்பின் வழக்கம் போல் மீண்டும் ஆக்டோபஸ்கள் கொடும் நாவை நீட்டத் தொடங்கிவிடுகின்றன. அபியாவின் மரணமும் ‘இன்னொரு விபத்து’ என்று வெறும் புள்ளிவிவரமாக ஆகிவிடக்கூடாது.
- வெ.நீலகண்டன்