கர்ணனின் கவசம்





‘‘என்னடா ருத்ரா... பார்த்தியா?’’
‘‘பார்த்தேன் ஆயி. ‘நந்தன வருடம் மகாசிவராத்திரி முடிஞ்ச எட்டாவது நாள் பறவை இறங்கறதை பார்த்துட்டு மதுரைக்கு வா’ன்னு கட்டளையிட்டீங்க... வந்துட்டேன்’’ என்ற ருத்ரன் வேறு யாருமல்ல. அவனேதான். திரிசூலம் ரயில்நிலையத்தில் காலை நீட்டி அமர்ந்திருந்தவனேதான். விமானம் தரை இறங்கியதைப் பார்த்ததும் உடல் அதிர எழும்பூருக்கு வந்து வைகை எக்ஸ்பிரஸை பிடித்தவனேதான்.

கேட்ட ஆயிக்கு 120 வயது. பார்த்தால் 60 என்றுதான் சொல்வார்கள். கருமை நிறம். அரக்கு நிற கைத்தறி புடவையும், வெள்ளை நிற ஜாக்கெட்டையும் அணிந்திருந்தாள். உடல் இறுகியிருந்தது. புருவ மத்தியில் வட்டமாக குங்குமப் பொட்டு.

இருவரும் அந்த நள்ளிரவில் மாசி வீதிகளைத் தாண்டி, ஆவணி வீதிகளைத் தொட்டு, சித்திரை வீதிக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்கள் கண் முன்னால் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பிரமாண்டமாக நின்றது.

‘‘என்னடா பாக்கற?’’
‘‘பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி எதை எனக்குக் காட்டினீங்களோ, அதைத்தான் பாக்கறேன் ஆயி...’’
கண்கலங்க சொன்ன ருத்ரன், எட்டு கோபுரங்களையும், இரண்டு விமானங்களையும் தன் மனக் கண்ணில் கொண்டு வந்தான். முப்பத்தி இரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவ கணங்களும், எட்டு வெள்ளை யானைகளும் தாங்கி நிற்கும் கருவறை விமானத்தை ஆராதித்தான். உண்மையில் அது இந்திர விமானம். ஆயி அப்படித்தான் சொல்லி
யிருக்கிறாள்.

‘‘சமுத்திரம் தெரியுதா?’’
தெரிந்தது. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் கொண்ட முழுக் கோயிலையும் கடல் விழுங்கியது. சுற்றிலும் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கருமை நிறம். இருட்டு. நடுவில் ஒரேயொரு வெண்தாமரை மிதந்து வந்தது. அதன் மீது தேவி வீற்றிருந்தாள். தாரா தேவி.
‘‘ஆயி... தாராதேவி எனக்கு தரிசனம் கொடுத்துட்டா!’’
தழுதழுக்கச் சொன்னவனின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தாள் ஆயி.

‘‘அசையாத. உத்துப் பாரு. அவளை உன் மனசுல பதிய வை. அவதான் தாரா. அவளேதான் நீல சரஸ்வதி. உக்ரதாரா, ஏகஜடா கூட அவதான். ரிக் வேதத்துல அவ இருக்கா. துர்வாசரையும், வால்மீகியையும், பரத்வாஜரையும் ஆசீர்வதிச்சவ இப்ப உனக்கு ஆசி வழங்கறா. எதுக்குத் தெரியுமா?’’

ஓங்கி ருத்ரனை அறைந்தாள். ‘‘பல்லாயிரம் வருஷங்களா நாம பாதுகாத்துட்டு வர்ற பொக்கிஷத்துக்கு இப்ப ஆபத்து வந்திருக்கு. ‘ஆனா, கலங்காத. நான் இருக்கேன்’னு சொல்றா. கேட்டுக்கிட்டியா?’’

அவனை உலுக்கினாள். ‘‘உன் உடம்புல இப்ப தாராதேவியோட சக்தி ஓடுது. அது உன்னைக் காப்பாத்தும். போ. நேரா தஞ்சாவூருக்குப் போ...’’
‘‘உத்தரவு ஆயி...’’

‘‘போகறதுக்கு முன்னாடி, தாராதேவி கைல என்ன இருக்குன்னு பாரு...’’
பார்த்தான். ‘‘பூமி மாதிரி ஏதோ இருக்கு ஆயி...’’
‘‘அதுதான்டா கபாடபுரம்... சமுத்திரம் விழுங்கிச்சே அதே கபாடபுரம். மொத தமிழ்ச் சங்கம் அங்கதான் உதிச்சுது. அதனோட நினைவாதான் அது மாதிரியே இந்த மதுரை உருவாச்சு. முட்டாள். இன்னுமாடா புரியலை? உண்மையான மீனாட்சியம்மன் கோயில் கபாடபுரத்துல இருக்குடா. தாராதேவி அதைத்தான் பாதுகாத்துட்டு இருக்கா...’’
‘‘அப்பா காலைலதான் வருவாராம்...’’
சங்கடத்துடன் சொன்ன பெருமாளை ஏறிட்டான் சூ யென்.
‘‘நோ ப்ராப்ளம். மார்னிங் வர்றேன்...’’
‘‘சாரி, உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேன்!’’
‘‘இட்ஸ் ஆல்ரைட். உங்களுக்கு தகவல் கிடைக்க இத்தனை நேரமாச்சு. அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’’ - புறப்பட்ட சூ யென், நின்றான்.



‘‘பெருமாள்..?’’
‘‘சொல்லுங்க...’’
‘‘இந்த சிற்பம் எங்க போகுது?’’
சூ யென் சுட்டிக் காட்டிய இடத்தை பெருமாள் பார்த்தான். இருட்டிலும் ஒளிர்ந்தார் நடராஜர்.
‘‘அமெரிக்காவுக்கு...’’
‘‘ஏற்கனவே மயிலாடிலேர்ந்து அமெரிக்காவுக்கு நடராஜரை அனுப்பியிருக்கீங்க இல்லையா?’’
‘‘ஆமா. அதைப் பார்த்துட்டுத்தான் நாசாவுல வேலை பார்க்கிற டாக்டர் ஜோன்ஸ் தனக்கொரு சிற்பம் வேணும்னு கேட்டாரு. அவருக்காகத்தான் இதை செதுக்கிட்டு இருக்கோம்...’’
‘‘அப்படி என்ன இதுல ஸ்பெஷல்?’’
‘‘தெரியலை. ஆனா, நடராஜரோட அம்சம்தான் சூரியன்னு அப்பா சொல்வாரு...’’
‘‘எந்த வகைல?’’
‘‘நோ ஐடியா. டீடெய்லா அப்பாவுக்குத்தான் தெரியும்...’’ - வெண் பற்கள் பளீரிட சிரித்தான் பெருமாள்.
‘‘ஓகே! அவர்கிட்டயே நாளைக்குக் கேட்டுக்கறேன். ஆனா இதென்ன பக்கத்துலயே ஒரு கல்?’’
‘‘அது ஸ்டாண்ட் பை. ஒரு கல்லுல செதுக்கும்போது ஒருவேளை உளி பிசகிட்டா, அதை ஓரமா வச்சுட்டு இன்னொரு கல்லுல செதுக்க ஆரம்பிப்போம்!’’
‘‘ஐ ஸீ... இப்படி ஒவ்வொரு சிலையை வடிக்கும்போதும் ஒரு   Back Up  வச்சுப்பீங்களா?’’
‘‘ஆமா...’’
‘‘ஓகே... காலைல வரேன். பை...’’
விடைபெற்ற சூ யென், எதையோ யோசித்தபடி மயிலாடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். கன்னியாகுமரி செல்லும் பேருந்து தயாராக இருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான்.
தொண்டையில் சிக்கிய முள்ளாக ஏதோ ஒன்று, தன் அறைக்கு அவன் வந்து சேர்ந்த பிறகும் குடைந்து கொண்டே இருந்தது. முதல் வேலையாக லேப்டாப்பை ஆன் செய்தான். எதிர்பார்த்த மின்னஞ்சல் வந்திருந்தது.

‘பரமேஸ்வர பெருந்தச்சனைத் தேடி ஜெர்மன் உளவு நிறுவனமான ‘பிஎன்டி’யிலிருந்து ஒருவன் வந்திருக்கிறான். பெயர், ஃபாஸ்ட். இப்போது மதுரையில் தங்கியிருக்கிறான். நாளை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு மயிலாடி வருவான்...’
மகிழ்ச்சி பூத்தது. தன் சின்ன உதடுகளை சுழித்தபடி அட்டாச்ட் ஃபைலில் இருந்த ஃபாஸ்டின் புகைப்படத்தை ஓபன் செய்து, தன் செல்போனில் நகல் எடுத்தான். திருப்தியாக இருந்தது.
போட்டி இருந்தால்தானே ஆட்டம் இனிக்கும்? உறுத்திய முள்ளைத் தாண்டி உதட்டோரம் புன்னகையை கசியவிட்டபடி ‘மை கம்ப்யூட்டரை’ க்ளிக் செய்தான். ‘டி’யில் இருந்த சில பைல்களை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்குக்கு காப்பி செய்தான்.

  Back Up.
  அலைந்துகொண்டே இருக்கப் போகிறோம். லேப்டாப் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். எங்காவது அமர்ந்து இந்த பைல்களில் வேலை பார்க்கும்போது டேமேஜ் ஏற்பட்டாலும்  Back Up   காப்பாற்றும். ஒரிஜினலைப் பாதுகாக்க இதுதான் சிறந்த வழி.

பரமேஸ்வர பெருந்தச்சனின் மகன் பெருமாள் கூட இதைத்தானே சொன்னான்? சிற்பங்களில் கூட  Back Up...
நரம்பைச் சுண்டியது போல் துள்ளினான். குடைந்த முள் வெளியேறியது போன்ற உணர்வு. சாதாரண ஸ்தபதியே ஸ்டாண்ட் பை, Back Up குறித்து யோசிக்கும்போது பல்லாயிரம் வருடங்களாக பொக்கிஷத்தைப் பொத்திப் பொத்தி பாதுகாத்து வரும் பெருந்தச்சர்கள் குழு மட்டும் Back Up எடுத்து வைக்காமலா இருப்பார்கள்?

நெற்றி வியர்க்க ஆரம்பித்தது. அப்படியானால், ரகசிய வரைபடத்தின் ஆரம்பமான மதுரை மீனாட்சியம்மன் கோயில் மட்டுமல்ல, மயிலாடியில் தான் சந்திக்க வந்த பரமேஸ்வர பெருந்தச்சன் கூட Back Up தானோ..?

எனில், ஒரிஜினல் மீனாட்சியம்மன் கோயிலும், உண்மையான பரமேஸ்வர பெருந்தச்சனும் எங்கிருக்கிறார்கள்?
நிலை கொள்ளாமல் தவித்தான். அவன் மூளை நரம்புகளில் நடராஜர் நடனமாட ஆரம்பித்திருந்தார். வெள்ளியம்பல நடராஜர்.

‘‘ஹாய்... எங்க ஆபீசா?’’
‘‘கழுதை கெட்டா குட்டிச்சுவரு. அங்கதான். என்ன மும்பை போய் சேர்ந்தாச்சா?’’
‘‘ஆச்சு. நாளைக்கு வேலைல ஜாயின் பண்றேன்...’’
‘‘குட். எப்பவும் போல கலக்கு...’’
‘‘தேங்க்ஸ். ஒரு ஹெல்ப் வேணும் ப்ரியா...’’
‘‘சொல்லு...’’
‘‘ஒரு நம்பர் தரேன். அதோட டீடெய்ல்ஸ் வேணும்...’’
கவரை பார்த்தபடி சொன்னாள் தாரா.
‘‘அஞ்சே நிமிஷம்...’’ - மறு
முனையில் பதில் வந்தது.

செல்லை அணைத்துவிட்டு தாரா நிமிர்ந்தாள். செப்பேடு போன்று காட்சியளித்த அந்த செப்புத் தகட்டை அவள் கருவிழிகள் மீண்டும் கவனமாக அலசின. அரக்கினால் கோடு போட்டு காண்பித்திருந்த பகுதியில் அவள் பார்வை நிலைகுத்தி நின்றது.

‘பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் நடந்த குருக்ஷேத்திர போரில் கலந்து கொண்ட பாண்டிய மன்னனின் வம்சாவளியினர் தங்கள் அடையாளங்களை மறைத்து தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களையும், அவர்களிடம் இருக்கும் ரகசியத்தையும் பாதுகாப்பது சிற்பிகளாகிய நமது கடமை...’

‘விடுநர்’ பகுதியில் பேனாவால் உழுதிருந்த எண்ணுக்கு பன்னிரெண்டாவது முறையாக தொடர்பு கொண்டாள். அதே பதில்தான் வந்தது... ‘திஸ் நம்பர் டஸ் நாட் எக்ஸிஸ்ட்’.
இன்னும் சில நிமிடங்கள்தான்... செல்போன் நிறுவனத்தில் பணிபுரியும் ப்ரியா, எக்ஸிஸ்ட்டை உடைத்துவிடுவாள்.
மனதில் ஊற்றெடுத்த அக்னி, உடலெங்கும் பரவியது. புல்ஷிட். பாண்டவர்களாம், கௌரவர்களாம், குருக்ஷேத்திரப் போராம், பாண்டிய மன்னனின் வம்சாவளியினராம். மகாபாரதமே கட்டுக்கதை என்னும்போது இதென்ன கிளைக்கதை? விட்டால் ‘பாண்டிய வம்சத்தின் குலக்கொழுந்தே நீதான்’ என என்னை சுட்டிக் காட்டுவார்கள் போலிருக்கிறது. பணம் பறிக்க இதுவொரு குறுக்கு வழி.

என்ன... மயிலாடியில் வசிக்கும் பரமேஸ்வரன் ஜோதிடனாக இருப்பான். ‘பரிகாரம் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் ஆபத்து’ என கதை விடுவான். ஆதாரம் கிடைக்கட்டும். சுளுக்கு எடுக்கிறேன்.

உள்ளங்கையை மடித்து பற்களைக் கடித்தவள், எழுந்து நின்றாள். ஃபிரிட்ஜைத் திறந்து ஜில் தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சைலன்ட் மோடில் இருந்த செல்போன், வைப்ரேஷனில் அதிர்ந்தது. ப்ரியா.

‘‘சொல்லு ப்ரியா...’’
பேனாவை எடுத்து கூரியரில் வந்த கவரின் மீதே எழுத ஆரம்பித்தாள்.
‘‘வேலூர் - 6’’ - மறுமுனையில் சிரித்தாள் ப்ரியா.
‘‘என்னடி தலைகீழா சொல்ற?’’
‘‘இன்னும் கொஞ்ச நேரம் சஸ்பென்ஸ் நீடிக்கட்டுமே...’’
‘‘சொல்லித் தொலைடி...’’
‘‘காந்தி நகர்!’’
‘‘ம்...’’
‘‘செவன்டீன்த் ஈஸ்ட் மெயின் ரோட்...’’
‘‘ம்...’’
‘‘நம்பர்...’’
அதிர்ந்தாள் தாரா. ‘‘கம் அகெய்ன்...’’
சொன்னாள்.

கேட்ட தாராவுக்கு நரம்புகளில் நடுக்கம் ஏற்பட்டது.
மறுமுனையில் ப்ரியா தன் போக்கில் தகவலைக் கொட்டினாள். ‘‘பேரு பாஸ்கர். வயசு 57. ரேஷன் கார்ட் ப்ரூஃப் கொடுத்திருக்காங்க. இதுல ஆச்சர்யம் என்னன்னா, இரண்டு நாளைக்கு முன்னாடிதான் சிம்மை வாங்கியிருக்காங்க. இன்னும் யாருக்கும் கால் பண்ணவும் இல்லை. இன்கம்மிங்கும் வரலை. போதுமா?’’
‘‘தேங்க்ஸ்...’’
சிரமப்பட்டு வார்த்தைகளை உதிர்த்துவிட்டு செல்போனை அணைத்தாள். கைகள் நடுங்க, குறிப்பெடுத்த அந்த காகிதத்தையே இமைக்காமல் பார்த்தாள் தாரா.
டஸ் நாட் எக்ஸிஸ்ட்டில் இருப்பது அந்த சிம் கார்ட் மட்டுமல்ல. அதன் உரிமையாளரான பாஸ்கரும்தான்.
அந்த பாஸ்கரை அவளுக்கு நன்றாகவே தெரியும். எட்டு வயது வரை அவருடன்தான் இருந்தாள். அவரது மடியில்தான் உறங்கினாள். பால் பற்களால் அவரது கன்னங்களைத்தான் கடித்தாள். அவ்வளவு ஏன், இந்த பூமியில் அவள் அவதரிக்கவே அந்த மனிதர்தான் காரணம்.
அப்பா.
அவர் பெயர்தான் பாஸ்கர். ஆனால், ஜாதக ரீதியாக அவருக்கு இன்னொரு பெயர் இருந்தது... பரமேஸ்வரன்.
கிளம்புவதற்கு முன் தன் கண்களில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக் கொண்ட ஃபாஸ்ட்டை பார்க்க ஆனந்துக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘‘நீங்க கண்ணாடி போடுவீங்களா?’’

‘‘எப்பவாவது...’’
இருவரும் ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள். விடிந்திருந்தது. காரை தவிர்த்துவிட்டு நடந்தார்கள். மீனாட்சியம்மன் கோயில் அவர்களை வரவேற்றது.
நுழைந்தார்கள். பதினைந்து ஏக்கரில் பரந்து விரிந்திருந்த கோயிலை அங்குலம் விடாமல் அலசினார்கள். அஷ்டசக்தி, மீனாட்சி நாயக்கர், முதலி, ஊஞ்சல், கம்பத்தடி, கிளிக்கூண்டு, மங்கையர்க்கரசி, சேர்வைக்காரர் ஆகிய மண்டபங்களை சலித்தார்கள். ஆயிரங்கால் மண்டபத்தில் அங்குலம் விடாமல் பாதம் பதித்தார்கள். அனைத்து இடங்களிலும் ஃபாஸ்ட் நெருங்கி நின்று சிற்பங்களை ஆராய்ந்தான். கண்களைச் சிமிட்டிக் கொண்டே இருந்தான்.
‘‘எந்த வித்தியாசமும் தெரியலையே..?’’ - ஆனந்த் முணு
முணுத்தான்.
‘‘வெளிப்படையா தெரிஞ்சா அது ரகசியமில்ல. பேசாம சிற்பங்களைப் பாரு...’’
தலையை ஆட்டியபடி ஆனந்த் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் அலைவது போலிருந்தது. 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபத்தைச் சுற்றி கடைகள் இருந்ததால் அங்கு மட்டும் மேலோட்டமாகவே அவர்களால் பார்க்க முடிந்தது.
அறைக்குத் திரும்பினார்கள். தன் கான்டாக்ட் லென்ஸை வெளியில் எடுத்த ஃபாஸ்ட், அதை லேப்டாப்பில் பொருத்தினான். கோயில் சிற்பங்கள் அனைத்தும் புகைப்படங்களாக வந்து விழுந்தன.
ஆனந்த் அதிர்ந்தான்.

‘‘என்ன பார்க்கிற? இது கான்டாக்ட் லென்ஸ் இல்லை... கேமரா. யாருக்கும் சந்தேகம் வராம ஷூட் செய்ய இதுதான் வசதி. புரிஞ்சுதா..?’’  
‘‘தொடர்ந்து என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்கீங்க...’’
‘‘ஆச்சர்யப்பட்டாதான் அதிசயமான புத்தகத்தை எழுத முடியும்...’’ - சொன்ன ஃபாஸ்ட், நிதானமாக ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆராய ஆரம்பித்தான்.
சேனலை மாற்றி மாற்றிப் பார்த்த ஆனந்துக்கு போர் அடித்தது. இன்னும் ஏன் ஃபாஸ்ட் கிளம்பாமல் இருக்கிறான்?
‘‘இப்ப புறப்பட்டாதான் மயிலாடி போய்ச் சேர முடியும்... பரமேஸ்வர பெருந்தச்சனை
சந்திக்க வேண்டாமா..?’’

‘‘......’’
‘‘ஃபாஸ்ட், உங்களைத்தான்...’’ - குரலை உயர்த்தினான்.
‘‘என்ன கேட்ட?’’
‘‘கிளம்பலாமான்னு...’’
‘‘இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்...’’
‘‘இப்பவே லேட்டாகிடுச்சே?’’
‘‘ஒண்ணும் ஆகலை...’’
‘‘நாம கன்னியாகுமரி போகணும். டெட் எண்ட்...’’
‘‘எண்டுக்கு இன்னும் நாளிருக்கு. இப்ப நாம தஞ்சாவூர் போறோம்...’’
லேப்டாப்பை பார்த்தபடியே சொன்னான் ஃபாஸ்ட்.
சூ யென், அந்த திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தான். சீனனின் லேப்டாப் ஒரிஜினல் ஐபியை, ஜிபிஎஸ் வைத்து ஃபாஸ்ட் டிராக் செய்திருந்ததால் இதை அறிய முடிந்தது.
(தொடரும்...)