இளையராஜா கிடார் வாசித்த பாடல்

இசையமைப்பாளர் வி.குமார், இயக்குனர் காரைக்குடி நாராயணனுடன் ஒரு பாடலுக்கான ஆலோசனையில் தேன் குரல் கே.ஜே.யேசுதாஸ் இருக்கும் இந்தப் படத்தை காரைக்குடி நாராயணனிடம் காட்டினோம். அந்தக் காலங்களுக்குள் கரைந்தார்...

‘‘நான் கதை, வசனம் எழுதி கமல், சிவக்குமார், ஜெயசித்ரா நடித்த ‘தேன் சிந்துதே வானம்’ படத்தின் பாடல் பதிவின்போது எடுத்த படம் இது. வருஷம் 1973 அல்லது 1974 என்று நினைக்கிறேன். கம்போஸிங் ஒரு நாட்டில், ரெக்கார்டிங் ஒரு நாட்டில் என்று ஒரு பாடல் உருவாவதற்கு இன்றைக்கு பல நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள். அந்தக் காலத்தில் உடனே கம்போஸிங், அப்போதே பாடல் பதிவு என்று எல்லாமே சுடச்சுட நடந்துவிடும்.

‘தேன் சிந்துதே வானம்’ படத்தில் ஜெயசித்ராவுக்காக சிவக்குமார் பாடுவது போன்ற ஒரு பாட்டு. தி.நகர், சரவண முதலி தெருவில் இருந்த இசையமைப்பாளர் குமாரின் வீட்டிலேயே பாடல் கம்போஸ் செய்யப்பட்டு, அதற்கான பல்லவிகளை எழுதிக் கொடுத்தார் கவிஞர் வாலி. மறுநாள் ஏவி.எம் ரெக்கார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சரணத்தை வாலி அரை மணி நேரத்தில் எழுதிக் கொடுக்க, இரண்டே டேக்குகளில் அந்த அற்புதப் பாடலை ரசித்து லயித்துப் பாடி முடித்தார் யேசுதாஸ். எப்போது கேட்டாலும் செவியில் தித்திக்கும் அந்தப் பாடல்தான் ‘உன்னிடம் மயங்குகிறேன்...’ பாடல். ‘என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாட்டு’ என்று யேசுதாஸ் இன்றைக்கும் சொல்லக்கூடிய பாட்டு அது. ஒலிநாடா வருவதற்கு முந்தைய காலகட்டம் என்பதால், இசைத் தட்டு வடிவத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது. சங்கர் ஜெய்கிஷன் இசையில் ‘லவ் இன் டோக்கியோ’ என்ற இந்திப் படத்தில் இடம்பெற்ற ‘சயோனரா சயோனரா...’ பாடலைப் போல இருப்பதாகச் சொல்லி, யேசுதாஸ் மெய்மறந்து பாடிக்கொடுத்த அந்தப் பாடல் படத்துக்கு பெரிய பலமாக அமைந்தது.

யேசுதாஸுடன் எனக்கிருந்த நல்லுறவு 1995ல் நான் இயக்கிய ‘மனைவி வந்த நேரம்’ படத்திலும் தொடர்ந்தது. அந்தப் படத்தில் நான்கு பாடல்களையும் யேசுதாஸ்தான் பாடிக்கொடுத்தார். படத்தின் பெயரிலேயே எழுதப்பட்ட பாடல் நல்ல மெலடியாக அமைந்தது. யேசுதாஸுக்கு மிகவும் பிடித்துப் போனதால், பாடல்களின் உரிமையை அவரது தரங்கினி ஆடியோ நிறுவனத்திற்காக வாங்கினார். ‘உன்னிடம் மயங்குகிறேன்’ பாடலில் இன்னொரு விசேஷமும் மறைந்திருக்கிறது. இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன் இந்தப் பாடலுக்கு கிடார் வாசித்தார்.’’
- அமலன்
படம் உதவி: ஞானம்