ஒரு போராட்டம்... மூன்று போராளிகள்!





லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கிளப்பிய உணர்வுப்பொறி, இன்று தமிழகம் முழுவதையும் பற்றியெரியச் செய்திருக்கிறது. மாணவர்களின் உக்கிரம், சாஃப்ட்வேர் ஊழியர்கள் தொடங்கி ஆட்டோக்காரர்கள் வரை அத்தனைபேரையும் உசுப்பி விட்டிருக்கிறது. வெறும் அரசியல் பிரச்னையாக இருந்த ஈழப்பிரச்னையை மக்கள் பிரச்னையாக மாற்றிவிட்டார்கள் மாணவர்கள். பல கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கிறது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என சாதாரண மக்களும் ஈழம் பேசுகிறார்கள். அண்டைநாடுகளையும், அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்துபோன ஈழத்தமிழர்கள், தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்திருக்கும் மாணவர்களை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். தெளிவான கொள்கைகள், கோஷங்கள், போராட்ட முறைகள் என மாணவர்களின் போராட்டம் வியக்கத்தக்க வகையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. கட்டுப்பாடு குலையாமல் இந்தப் போராட்டத்தை உற்சாகமாக முன்னெடுப்பவர்களில் குறிப்பிடத்தக்க மூவர்... சிபி, கணேசன், கயல்விழி.

‘தமிழ்ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை நிறுவி மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சிபி, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். சென்னையில் ஒரு கல்லூரியில் இளங்கலை வரலாறு படிக்கிறார். அப்பா லேனா குமார், பதிப்பகம் நடத்துகிறார். அம்மா சாந்தி பேராசிரியை. ‘‘குடும்பத்தில எல்லாருமே தமிழ் உணர்வாளர்கள். பள்ளியில் படிக்கிறபோதே ஈழத்துக்கான போராட்டங்கள்ல கலந்துக்குவேன். கல்லூரிக்கு வந்தபிறகு ‘நாம் தமிழர்’, ‘மே 17 இயக்கம்’ சார்பா நடக்கிற எல்லாப் போராட்டங்களுக்கும் போயிருக்கேன். பாலச்சந்திரன் என் தம்பி. அவனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் ஒரு மாணவனா என்னோட இதயத்தைப் புடிச்சு உலுக்குது. இதுக்கு மேலும் அமைதியா இருந்தா அது எனக்கு நானே செஞ்சுக்கிற துரோகம். என் உணர்வுக்குத் தகுந்தமாதிரி லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சாங்க. அதுதான் எங்களுக்கு தூண்டுகோல்.

ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் சமூக வலைத்தளங்கள்ல மாணவர்களோட இணைஞ்சோம். போராட்டத்தை ஒருங்கிணைக்க முதல் கட்ட, இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமிச்சோம். போராட்ட வழிமுறைகளையும், கொள்கைகளையும் தீவிரமா விவாதிச்சு முடிவு செஞ்சோம். எல்லாருமே ஒரு விஷயத்தில தெளிவா இருந்தோம். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளை உள்ளுக்குள்ளே அனுமதிக்கிறதில்லை. கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை நிறுத்தறதில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலயும் ஆறு முதல் ஏழு கல்லூரிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறாங்க. ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிச்சிருக்கோம். சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் ஐ.நா ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தணும். சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு முன்பு ராஜபக்ஷேவை நிறுத்த வேண்டும். இதுவே எங்கள் கோரிக்கை. போராட்டம் ஜெனிவாவோடு நிறைவடையாது. அனைத்துக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தப் போகிறோம். அதில்தான் அடுத¢தகட்ட போராட்டம் பற்றி முடிவெடுப்போம். எங்கள் இலக்கு தமிழ் ஈழம். அதை அடையாமல் போராட்டம் முடியாது’’ என்று ஆவேசமாகச் சொல்கிறார் சிபி.



‘ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி’ என்ற அமைப்பை உருவாக்கி, போராட்டங்களை நடத்திவரும் கணேசன், செஞ்சியை அடுத்துள்ள மேல் கொத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர். விமானநிலைய முற்றுகை, சத்தியமூர்த்தி பவன் முற்றுகை, ராணுவ அகாடமி முற்றுகை என அடுத்தடுத்த அதிரடிகளால் போராட்டத்தின் கோணத்தை அரசியல்மயப்படுத்தும் கணேசன் பிளஸ் 2வில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தவர். மாநிலக்கல்லூரியில் எம்.ஃபில் முடித்திருக்கிறார். சமச்சீர் கல்விக்காக நடந்த மாணவர் போராட்டங்களிலும் இவரது பங்குண்டு. முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது, 5000 மாணவர்களைத் திரட்டி மிகப்பெரும் மறியல் போராட்டம் நடத்தியவர்.   

‘‘ஐ.ஏ.எஸ் கனவோட சென்னைக்கு வந்தவன் நான். அதற்காகவே அரசியல் அறிவியல் எடுத்துப் படித்தேன். நான் படித்த நீதிமன்றம், சட்டம், அரசியலுக்கும், யதார்த்தத்துக்கும் தொடர்பே இல்லை. ஐ.ஏ.எஸ் ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது... கார்ப்பரேட்டுக்கும், அரசாங்கத்துக்கும் மட்டுமே சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்ததும் அந்தக் கனவை கைவிட்டுவிட்டேன்.

மாணவர்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். ஆனால் மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்கும் முயற்சிகள் இங்கே தொடர்ந்து நடக்கிறது. அதைக் கடந்து இப்போது மாணவர்கள் இணைந்திருக்கிறார்கள். ஐ.நா தீர்மானம் ஒரு வெத்துவேட்டு என்பதில் தெளிவாக இருக்கிறோம். அமெரிக்காவால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கால் வைக்கும் இடத்தை எல்லாம் அந்நாடு பிணக்காடாக மாற்றிவிடும். இந்தியாவும் அமெரிக்காவின் வழியில் பேட்டை தாதாவாக முயற்சிக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்றபிறகு, அப்படிப்பட்ட ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப்பட்டு, கோயபல்ஸ் உள்ளிட்ட பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதைப் போலவே ராஜபக்ஷே, ராஜபக்ஷேவின் தம்பிகள், தளபதிகள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பும் வேண்டும். இவை நிறைவேறும்வரை போராடுவோம்’’ என்கிறார் கணேசன்.

கயல்விழி, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி. சட்டம் படித்துள்ள கயல்விழி, தொடர்ந்து ஈழப்பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர். போருக்குப் பிந்தைய ஈழத்தின் உண்மைச்சூழலை அறியச் சென்ற தருணத்தில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, இந்தியாவின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டவர். பேரணி, ஆர்ப்பாட்டம், தொடர்முழக்கம் என ஓடி ஓடி மாணவர்களை உற்சாகப்படுத்தி வரும் கயல், ‘‘மாணவர்களின் போராட்டம் சாதாரணமாக ஓயப் போவதில்லை’’ என்பதை வழிமொழிகிறார்.

‘‘முத்துக்குமார் மரணத்தின்போதும், 3 பேர் தூக்குதண்டனை விவகாரத்திலும் மாணவர்கள் மிகுந்த எழுச்சியோடு வீதிக்கு வந்தார்கள். அதே எழுச்சிதான் இப்போதும் இங்கு தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழலும் அதற்கான அவசியத்தை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் கொடுத்த அழுத்தமே இன்று இந்திய அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது’’ என்கிறார் கயல்.

1960களில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும், 1980களில் ஈழத்துக்கு ஆதரவாகவும் நடந்த மாணவர் போராட்டங்கள் மிகப்பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்தன. தற்போதைய போராட்டமும் அப்படியான ஒரு முடிவை எட்டும் என்கிறார்கள் விமர்சகர்கள். கல்லூரி நிர்வாகங்களின் மிரட்டலையும், உளவுப்பிரிவின் சாகசங்களையும் தாண்டி மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். ஈழ மக்களின் துன்பங்களுக்கான விடியல் குரல் தமிழகத்தில் உருவாவதை சர்வதேச சமூகம் பெருமிதத்தோடு பார்க்கிறது.  
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்