பேப்பர் கிராஃப்ட்டில் சூப்பர் லாபம்





வீட்டுக்கு வீடு பழைய பேப்பர் குவியல் கட்டாயம் இருக்கும். மாதக்கணக்கில் சேகரித்து வைத்து, என்றோ ஒரு நாள் ஞானோதயம் வந்து, எடைக்குப் போட்டுக் காசு பார்ப்பதுதான் அனேகமாக நம் எல்லோரின் வழக்கமும்.

சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த தீபாவுக்கு பழைய பேப்பர்தான், அவரது தொழிலுக்கான மூலதனம். படித்து முடித்ததும் பழைய பேப்பர் கடைக்குப் போகும் செய்தித்தாள்களை வைத்து அவர் தயாரிக்கிற விதம்விதமான கலைப்பொருள்கள் அத்தனை அழகு. ‘பேப்பர் கிராஃப்ட்’ என்கிற இந்தக் கலையில் பூ முதல் பூக்கூடை வரை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமாம்.

‘‘அந்தக் காலத்துல பழைய பேப்பரை ஊற வச்சு, அரைச்சுக் கூழாக்கி, முறம் மாதிரியான பொருள்கள் மேல தடவிக் காய வச்சு உபயோகிப்பாங்க. கூடைகள் செய்வாங்க. அதோட நவீன வடிவம்தான் இந்த பேப்பர் கிராஃப்ட். இன்னிக்கு இருக்கிற அவசர உலகத்துல பேப்பரை ஊற வச்சு, அரைச்சு, பொருள்கள் தயாரிக்க யாருக்கும் பொறுமை கிடையாது; நேரமும் இருக்காது. நான் பண்ற பேப்பர் கிராஃப்ட் முறையில, பேப்பரை தேவைக்கேத்தபடி சுருட்டியோ, கசக்கியோ வடிவங்களை உருவாக்க வேண்டியதுதான். இந்த முறையில விதம்விதமான பூக்கள், பழங்கள், சுவர் அலங்காரங்கள், கூடைகள், பறவைகள், தட்டுகள், கிண்ணங்கள்னு நிறைய பண்ணலாம்.

இந்த பேப்பர் கிராஃப்ட்ல ரெண்டு வகை இருக்கு. சில பொருள்களுக்கு பேப்பரை குழல் மாதிரி சுருட்டிச் செய்யணும். சிலதுக்கு பேப்பரை கசக்கிட்டு நமக்குத் தேவையான உருவத்தைக் கொண்டு வரணும். அது நாம செய்யப் போற பொருளைப் பொறுத்தது. பூக்கள், பழங்கள், பறவைகள், சுவர் அலங்காரங்களை எல்லாம் அழகுக்காக உபயோகிக்கலாம். கூடைகள், தட்டுகள், கிண்ணங்களை வீட்டுக்கு உபயோகிக்கலாம். வார்னீஷ் கொடுத்துட்டு, தண்ணீர் படாம பார்த்துக்கிட்டா ரொம்ப நாள் வரும். பழைய பேப்பர், அக்ரிலிக் பெயின்ட், பசை, வார்னிஷ்னு இதுக்கான மூலப்பொருள்கள் ரொம்ப சுலபமா கிடைக்கக் கூடியவை. ஃபேன்சி ஸ்டோர், கைவினைப் பொருள் கண்காட்சிகள்ல விற்பனைக்கு வைக்கலாம். நவராத்திரி சீசன்ல நிறைய விற்பனையாகும். முதலீடு, உடல் உழைப்பு ரெண்டுமே கம்மி. லாபம் பெரிசு. பகுதி நேரமா ஒரு பிசினஸ் பண்ண நினைக்கிறவங்க துணிஞ்சு இறங்கலாம்’’ எனநம்பிக்கையளிக்கிறார் தீபா.
- ஆர்.வைதேகி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி


முதலீடு: 100 ரூபாய்
லாபம்: 50 சதவீதம்
பயிற்சிக்கு: 300 ரூபாய் (2 நாட்களில் 2 மாடல்களுக்கு)
தொடர்புக்கு: 90431 44100